Published : 02 May 2014 11:13 am

Updated : 02 May 2014 11:13 am

 

Published : 02 May 2014 11:13 AM
Last Updated : 02 May 2014 11:13 AM

இரு கிராமங்களின் கதை

இந்தியா என்பது கிராமங்களின் தொகுப்புதான். இந்திய கிராமங்களைப் பற்றி எழுதுவது என்றால், ஒவ்வொரு கிராமத்தைப் பற்றியும் எழுதலாம். அவ்வளவு பொக்கிஷங்களை அவை புதைத்துவைத்திருக்கின்றன. எனினும், குஜராத்தின் மதாபரும் தேசாரும் எதனாலோ திரும்பத் திரும்ப ஞாபகத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன.

உலகின் பணக்காரக் கிராமம்

மதாபர்க்காரர்கள் சிலர் தங்கள் ஊரை இந்தியாவின் பணக்காரக் கிராமம் என்று சொல்கிறார்கள்; சிலர் ஆசியாவின் பணக்காரக் கிராமம் என்று சொல்கிறார்கள்; சிலர் உலகின் பணக்காரக் கிராமம் என்று சொல்கிறார்கள். இது மூன்றிலுமே கொஞ்சம் உண்மை இருக்கலாம். நிச்சயம் இந்தியாவில் இப்படிப்பட்ட கிராமத்தை வேறு எங்கும் பார்க்க முடியாது. மதாபரில் வீடுகள் குறைவு; எல்லாமே பங்களாக்கள்தான். ஒவ்வொரு பங்களாவைப் பற்றியும் சுவாரஸ்யமான பல கதைகளைச் சொல்கிறார்கள். “இந்த வீட்டில் திரையரங்கம் உண்டு. அதன் திரை லண்டனிலிருந்து கப்பலில் கொண்டுவரப்பட்டது. இந்த வீட்டின் மூன்றாம் மாடியில் நீச்சல் குளம் இருக்கிறது. பளிங்குக் கற்களால் ஆனது அது. அந்த வீட்டில் பெரிய திறந்தவெளி வராந்தாவில் எவ்வளவு வெயில் தகிக்கும்போதும் நடக்கலாம்; தரைக்குப் போடப்பட்டிருக்கும் கல் எவ்வளவு சூட்டையும் உள்வாங்கிக்கொண்டு குளிர்ச்சியாகவே இருக்கும்; ராஜஸ்தானிலிருந்து வரவழைத்தார்கள்...”

திரைகடல் ஓடிய முன்னோடிகள்

சுமார் எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் கட்ச் பிரதேச மிஸ்திரிகளால் உருவாக்கப்பட்ட கிராமங்களில் ஒன்று மதாபர். கடல் கடந்து வாணிபத்துக்குச் செல்வது இந்த ஊர்க்காரர்களின் ரத்தத்தில் ஊறியது. “அமெரிக்கா, கனடாவில் தொடங்கி ஆப்பிரிக்கக் கண்டத்தின் சோமாலியா, உகாண்டா வரை எங்கள் ஊர் லேவே படேல்கள் குடியேறியிருக்கிறார்கள். வெளிநாட்டு வாணிபத்தில் மட்டும் இல்லை; உள்நாட்டு வாணிபத்திலும் முன்னோடிகள். ஆங்கிலேயர் காலத்தில் ரயில்வே ஒப்பந்தப் பணிகளை எடுப்பதிலும் நிலக்கரிச் சுரங்கங்களை ஏலத்தில் எடுப்பத்திலும் முன்னின்ற சமூகம் இது. கட்ச் மாகாணத்தில் அரச குடும்பம் தவிர, கார் வைத்திருந்த முக்கியஸ்தர்களில் ஒருவரான ராய் சாகிப் விஷ்ரம் வால்ஜி ரதோர் எங்களவர்” என்கிறார் தேவ் படேல்.

அந்த வசதியான பின்னணியை இன்றும் ஊர் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. சிக்கல் என்னவென்றால், பெரும்பாலான வீடுகளில் பூட்டு தொங்குகிறது அல்லது ஜன்னல் வழியே பெரியவர்கள் எட்டிப்பார்க்கிறார்கள்.

முடியாமல் தொடரும் பயணம்

‘‘ஊரோடு மிக நெருக்கமான மனப் பிணைப்பைக் கொண்டவர்கள் எங்கள் ஊர்க்காரர்கள். ஒவ்வொரு தலைமுறையிலும் வெளியே செல்லும்போதும், ‘இதோடு திரும்பிவிடுவேன். இனி விவசாயத்தைப் பார்த்துக்கொண்டு ஊரோடு இருந்துவிடுவேன்’ என்று சொல்லித்தான் கிளம்புவார்கள். ஆனால், அவர்கள் திரும்ப முடிவதே இல்லை” என்கிறார்கள்.

இதில் என்ன ஆச்சரியம்? எல்லாக் கிராமங்களிலும் இதுதானே நடக்கிறது என்றுதானே கேட்கவருகிறீர்கள்? இல்லை. இங்கே விஷயம் இன்னும் கொஞ்சம் இருக்கிறது. போன இடத்திலேயே ஐக்கியமாகிவிடுவதில் உண்மையாகவே மதாபர்க்காரர்களுக்கு ஆர்வம் இல்லை. அதனாலேயே அவர்களுடைய சேமிப்பு எல்லாவற்றையும் இங்கேதான் சேமிக்கிறார்கள். இந்தச் சின்ன ஊரில் கிட்டத்தட்ட 20 வங்கிகள் இருக்கின்றன; ரூ. 2,500 கோடி வைப்புநிதி இருக்கிறது. கிராமத்தின் சாலைகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் எல்லாவற்றிலும் தங்கள் பங்களிப்பைத் தந்து ஜொலிக்கவைத்திருக்கிறார்கள். “எங்களூரில் முதல் பள்ளிக்கூடம் திறந்து 130 வருஷங்கள் ஆகின்றன. 1900-லேயே முதல் பெண்கள் பள்ளிக்கூடம் இங்கே உருவாகிவிட்டது” என்கிறார்கள். “அப்போதிலிருந்தே எல்லோருக்கும் நாம் என்றைக்காக இருந்தாலும் ஊர் திரும்பிவிடுவோம் என்பதுதான் எண்ணம். ஆனால், காசு புலிவால்போல மாறி அவர்களைப் பிடித்துக்கொண்டிருக்கிறது” என்கிறார்கள்.

மதாபர் வயல்களில் வயோதிகத்தைத் தாங்கி நிற்கும் பெரியவர்களில் ஒருவர் ரூடா லாதா. “என் மகன் வருவான், வருவான் எனக் காத்திருந்து காலம் கடந்துவிட்டது. இப்போது என் பேரனுக்காகக் காத்திருக்கிறேன். எவ்வளவோ சொத்துகள் இருக்கின்றன. என்றாலும் ஒரு கிராமத்தானுக்கு நிலம்போலச் சொத்து வருமா? அதுதான் அவன் வரும் நாளில் இந்த நிலம் அவனுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த வயதில் நான் வயலில் நின்றுகொண்டிருக்கிறேன்” என்பவர், நிலத்தை வெறித்துப்பார்க்கிறார். கொஞ்சம் இடைவெளி விட்டு, “நம்முடைய திறமைகளை உள்ளூருக்குள் பயன்படுத்திக்கொள்ள நம்முடைய அரசாங்கங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லையே?” என்கிறார். “நாம் இப்போது இரட்டை மனநிலையில் வாழ்கிறோம். நம் புத்தி நகரத்திலும் ஆன்மா கிராமத்திலும் கிடக்கிறது. ஊர் திரும்பினால், அனுபவிக்கும் வசதி பறிபோய்விடுமோ எனும் பயம் நம் கனவுகளைக் கவ்விக்கொண்டிருக்கிறது. இது முடிவே இல்லாத ஆட்டம்” என்கிறார். சுருக்கங்களில் புதைந்திருக்கும் அவருடைய கண்கள் நிலத்தையே வெறிக்கின்றன. சோளக் கதிர்களில் ஊடுருவும் சூரியனின் கதிர்கள் சிதறி மறைகின்றன.

கொள்ளையர் நிலம்

தேசார் கிராமத்துக்குச் செல்வது மிகச் சவாலான காரியம். மலைகள் சூழ்ந்த அந்தக் கிராமத்துக்கு முறையான சாலை வசதி இல்லை என்பதுகூடப் பிரச்சினை இல்லை. ஊர் மக்கள் வெளியாட்களை உள்ளே விட மாட்டார்கள்; சமானியமாகப் பேச மாட்டார்கள்; அடித்துத் துரத்தவும் செய்யலாம் என்பது மாதிரியான பீடிகைத் தடைகளைக் கடப்பது பெரும் பிரச்சினை. தேசாரைப் பற்றி நிறையச் சொல்கிறார்கள் வெளியில். அவர்கள் கோடைக்காலத்தில் குரங்குக் கறியையும் குளிர் காலத்தில் முதலை உப்புக்கண்டத்தையும் சாப்பிடுவார்கள்; அவர்கள் நிமிஷத்தில் பனை மரம் ஏறி இறங்குவார்கள்; எருமை ரத்தத்தைக் குடிப்பார்கள் என்றெல்லாம் ஏகப்பட்ட வர்ணனைகள்.

இந்த விஷயங்களெல்லாம் தெரிந்திராதவர்கள்கூட ஒரு விஷயத்தைத் தெரிந்துவைத்திருக்கிறார்கள். அது தேசார் கிராமத்தின் ‘இருட்டு’ச் சரித்திரம். பல நூற்றாண்டுகளாக தேசார் கிராமத்தின் நாயக்குகளுக்குத் திருட்டும் வழிப்பறியும் தான் தொழில். ஏராளமான குழுக்கள். ஒவ்வொரு குழுவும் ஐந்தாறு பேரிலிருந்து முப்பது நாற்பது பேர் வரை கொண்டது. ஆனால், யாரையும் யாரும் காட்டிக்கொடுக்க மாட்டார்களாம். ஒரு போருக்குப் புறப்படும் வீரனைப் போல ‘வேட்டை'க்குச் செல்லும்போது மனைவியரின் விரத பூஜைகள், பஜனைப் பாடல்கள் என ஒரு தனிக் கலாச்சாரம் இங்கே இருந்திருக்கிறது. இவர்கள் தங்களுக்குள் பேசும் மொழியை லிங்கோ என்கிறார்கள். இந்தி, மராத்தி, குஜராத்தி தவிர, விசேஷமாக இவர்கள் உருவாக்கிய சங்கேத பாஷையையும் உள்ளடக்கிய மொழி இது. கடந்த நூற்றாண்டு வரை சுற்றியுள்ள ஊர்களிலும் கைவரிசை காட்டிவந்தவர்கள் இந்த நூற்றாண்டில் வெளி பிராந்தியங்களை மட்டுமே இலக்காக்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயங்கள் எல்லாமும் வெளியே கேட்டுத் தெரிந்துகொண்டவைதான்.

துடைத்துப் போட்ட பாத்திரம்

தேசார் ஏழ்மையின் விளிம்பில் இருக்கிறது. சின்னக் குடிசைகள் அல்லது சுவர்கள் பிளந்த சற்றே பெரிய ஓட்டு வீடுகள் அல்லது பாதி அழிந்து பாதி எஞ்சியிருக்கும் வீடுகள். எங்கோ தூரத்திலிருந்து தண்ணீர் சுமந்து வரும் பெண்கள். ஆங்காங்கே மரத்தடிகளில் இரண்டு மூன்று பேராக உட்கார்ந்திருக்கிறார்கள் ஆண்கள்.

பசிக்கு எங்கே போவது?

“அந்தக் காலம் தொடங்கி எங்களூரைத் திருட்டூராகத்தான் பார்க்கிறார்கள். ஆமாம், திருடினார்கள். ஏன் திருடினார்கள்? இப்போதே இந்த ஊர் இப்படி இருக்கிறதே நூறு வருஷங்களுக்கு முன் எப்படி இருந்திருக்கும்? அதற்கு முன் எப்படி இருந்திருக்கும்? நீங்கள் போலீஸ்காரர்களிடம் பேசிப்பாருங்கள். திருடுபோன இடத்தில் வைத்திருந்த சாப்பாடு காணாமல்போயிருந்தால் திருடியவன் தேசார்க்காரன் என்பார்கள். பசிக்காகத்தான் திருடுகிறோம். நகை, பணத்தைத் திருடிக்கொண்டுவந்தவர்களைக் காட்டிலும் ஆடு - மாடுகளை ஓட்டிக்கொண்டு வந்தவர்கள்தான் அதிகம். இந்தத் தொழிலை விட்டொழிக்கவே நினைக்கிறோம். முடியவில்லை. பாருங்கள், இந்த ஊருக்கு என்ன வசதி இருக்கிறது? பள்ளிக்கூடத்துக்குக்கூட 10 கிலோ மீட்டர் நடந்துதான் செல்ல வேண்டும். விறகு விற்றுதான் பெரும்பாலானோர் பிழைப்பு நடக் கிறது. பல ஊர்களில் எங்கள் ஊர்க்காரர்களை உள்ளேயே விட மாட்டார்கள். பள்ளிக்கூடங்களில் கேலி. என்ன படித்தாலும் எங்கேயும் வேலை கிடைக்காது. கடைசியில், வெறுத்துப்போய் கைவைக்கும் நிலைக்குத் திரும்பிவிடுகிறார்கள்” என்கிறார் ஊர் பெரியவர்களில் ஒருவரான ரத் நாயக்.

“ஊரைவிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேறிவிட்டன. இந்த ஊரில் இருந்தால் வேலையும் கிடைக்காது, பெண்ணும் கிடைக்காது. ஊரில் எல்லோர் மீதும் காவல் துறை வழக்கு இருக்கிறது. செய்ததைக் காட்டிலும் செய்யாதவைதான் அதிகம். ஆள் கிடைக்காத திருட்டு வழக்குகளில் எல்லாம் எங்களூர்க்காரர்கள்தான் குற்றவாளி. அரசியல்வாதிகளா, இங்கு ஓட்டு கேட்கக்கூட வர மாட்டார்கள். அப்புறம் எங்கிருந்து ஊர் முன்னேறுவது? வெளியே இருப்பவர்கள் ஏதோ நாங்கள் கொள்ளையடித்து, பெரிய மாளிகைகளில் ராஜ வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பதாக நினைக்கிறார்கள். இங்கு வந்து பார்த்தால்தான் தெரியும் உண்மையான நிலைமை. எங்களுக்கெல்லாம் என்ன செய்வது என்றே தெரியவில்லை” என்கிறார் படித்தும் வேலை கிடைக்காத இளைஞரான ராஜ் நாயக்.

தேசார் குழந்தைகள் புழுதித் தெருக்களில் டப்பாவில் கயிறு கட்டி ரயில் இழுத்துக்கொண்டிருக்கிறார்கள். “ரயில் எங்கே போகிறது” என்று கேட்டால், கூச்சத்தோடு சிரிக்கிறார்கள். “தெரியவில்லை” என்கிறார்கள். கொஞ்ச நேரம் கழித்து அவர்களுடைய ரயில் மீண்டும் புறப்படுகிறது. அது எங்கு போகிறது என்று எனக்கும் தெரியவில்லை.

சமஸ், தொடர்புக்கு: samas@kslmedia.in

குஜராத்மதாபர்க்காரர்கள்திரைகடல் ஒடிய முன்னோடிகள்

You May Like

More From This Category

More From this Author