Published : 23 Apr 2014 12:28 PM
Last Updated : 23 Apr 2014 12:28 PM

சென்னை-ராஜஸ்தான் இன்று மோதல்

துபையில் இன்று நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸும் ராஜஸ்தான் ராயல்ஸும் மோதுகின்றன.

கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 93 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியைத் தோற்கடித்த சூப்பர் கிங்ஸ், இந்த ஆட்டத்தில் மிகுந்த நம்பிக்கையோடு ராஜஸ்தானை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் பஞ்சாபிடம் தோல்வி கண்ட ஷேன் வாட்சன் தலைமையிலான ராஜஸ்தான், இந்த ஆட்டத்தில் வென்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் களமிறங்குகிறது.

பலம் வாய்ந்த பேட்டிங்

சென்னை சூப்பர் கிங்ஸின் மிகப்பெரிய பலம் அதன் பேட்டிங் தான். பிரென்டன் மெக்கல்லம், டுவைன் ஸ்மித், சுரேஷ் ரெய்னா, டூ பிளெஸ்ஸி, கேப்டன் தோனி என வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் களத்தில் நின்றுவிட்டால்கூட ஆட்டத்தின் போக்கை மாற்றி விடுவார்கள். இவர்கள் அனைவருமே இப்போது நல்ல பார்மில் இருப்பது அணிக்கு கூடுதல் பலமாகும்.

டுவைன் பிராவோ காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிவிட்ட நிலையில், ஆல்ரவுண்டர் இடத்தில் ரவீந்திர ஜடேஜாவையே நம்பியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். பந்துவீச்சைப் பொறுத்தவரையில் எந்தவொரு தனிப்பட்ட வீரரையும் சூப்பர் கிங்ஸின் பலமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றாலும், டெல்லிக்கு எதிரான ஆட்டத்தின் அனைத்து வீரர்களும் சிறப்பாக பந்துவீசியது குறிப்பிடத்தக்கது. வேகப்பந்து வீச்சில் ஈஸ்வர் பாண்டே, பென் ஹில்பெனாஸ், மோஹித் சர்மா ஆகியோரையும், சுழற்பந்துவீச்சில் அஸ்வின், ஜடேஜா ஆகியோரையும் நம்பியுள்ளது சூப்பர் கிங்ஸ். மித வேகப்பந்து வீச்சில் டுவைன் ஸ்மித் பலம் சேர்க்கிறார்.

வெற்றிக்கூட்டணியில் கேப்டன் தோனி எப்போதுமே மாற்றம் செய்ய விரும்பமாட்டார் என்பதால் இந்த ஆட்டத்தில் சூப்பர் கிங்ஸ் அணி யில் எந்த மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

மிரட்டும் வாட்சன், சாம்சன்

ராஜஸ்தான் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு நிகரான அணியாக உள்ளது. கடந்த ஆட்டத்தில் 190 ரன்கள் குவித்தபோதும், பஞ்சாபிடம் தோல்வி கண்ட ராஜஸ்தான், இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்த போராடும் என்பதில் சந்தேகமில்லை.

கேப்டன் ஷேன் வாட்சன், சஞ்ஜூ சாம்சன், ஸ்டீவன் ஸ்மித், அஜிங்க்ய ரஹானே, ஸ்டூவர்ட் பின்னி என அதிரடி பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் உள்ளனர். இவர்களில் குறிப்பாக சஞ்ஜூ சாம்சன் அபாரமாக ஆடி வருகிறார்.

கவலையளிக்கும் பந்துவீச்சு

ஆனால் பந்துவீச்சு கவலையளிப்பதாக உள்ளது. கேன் ரிச்சர்ட்சன், தவல் குல்கர்ணி, ஜேம்ஸ் பாக்னர், ரஜத் பாட்டியா என 4 வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தபோதும், அவர்களால் பஞ்சாபை கட்டுப்படுத்த முடியாமல் போனது. எனவே இந்த ஆட்டத்தில் ராஜஸ்தானின் பந்துவீச்சில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, ராஜஸ்தான் கேப்டன் வாட்சன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x