Published : 23 Apr 2014 09:30 am

Updated : 23 Apr 2014 09:30 am

 

Published : 23 Apr 2014 09:30 AM
Last Updated : 23 Apr 2014 09:30 AM

பிற ஆண்களுடன் பேசியதால் காதலியை குத்திக்கொன்ற காதலன்: தற்கொலைக்கு முயன்றதால் மருத்துவமனையில் அனுமதி

பிற ஆண்களுடன் பேசியதாக ஆத்திரம் அடைந்த காதலன், காதலியை கத்தியால் குத்தி கொலை செய்தார். பிறகு அதே கத்தியால் தன்னைத்தானே குத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சென்னை பெருங்குடி வேளச்சேரி பிரதான சாலை அருகே உள்ளது டிசிஎஸ் நிறுவனம். இதில் மன்னார்குடியை சேர்ந்த ஞானசேகரன் மகள் வைசியா (25) வேலை பார்த்து வந்தார். இதற்காக வேளச்சேரி பேபி நகரில் மகளிர் விடுதியில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு 11 மணிக்கு பெருங்குடி பறக் கும் ரயில் நிலைய கட்டிடத்துக்கு அருகில் கத்திக்குத்து காயங்க ளுடன் அவர் இறந்து கிடந்தார். அவரது உடல் முழுவதும் ஆழமான கத்தி குத்து காயங்கள் இருந்தன.

தகவல் அறிந்து வந்த வேளச்சேரி போலீஸார் உடலை மீட்டனர். அப்போது சற்று தூரத்தில் ஆண் ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில் அவரது பெயர் வெங்கடாசலபதி என தெரியவந்தது.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட வைசியா பணிபுரிந்த அதே நிறுவனத்தில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடாச்சலபதி (29) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்துள்ளார். அவர் வேளச்சேரி பேபி நகரில் ஒரு அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் ஒரு ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த வைசியாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்துள்ளனர். வைசியா பிற ஆண்களிடம் நேரிலோ, செல்போனிலோ பேசினால் அதற்காக சந்தேகப்பட்டு கோபப்பட்டுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி சண்டை நடந்து வந்தது.

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு மின்சார ரயில் மூலம் பெருங்குடி பறக்கும் ரயில் நிலையத்துக்கு தனியாக வந்துள்ளார் வைசியா. அங்கு காத்திருந்த வெங்கடாசலபதி வைசியாவிடம் நைசாகப் பேசி ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். பிறகு அவர் எதிர்பாராத நேரத்தில் கத்தியை எடுத்து சரமாரியாக குத்தியுள்ளார். வைசியாவைக் கொலை செய்ததும் தன்னைத் தானே கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு காவல்துறை அதிகாரிகள் கூறினர்.

சில நாட்களுக்கு முன்பு சென்னை சிறுசேரி டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றிய உமா மகேஸ்வரி என்ற பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள், பெருங்குடி டிசிஎஸ் நிறுவனத்தை சேர்ந்த வைசியா என்ற பெண் கொலை செய்யப்பட்டிருப்பது ஐ.டி நிறுவன ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பே ஒரு கொலை

கொலை செய்த வெங்கடாசலபதி ஏற்கனவே இதேபோல் ஒரு கொலை செய்திருப்பதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. 2008-ல் ஈரோடு கல்யாண விநாயகர் கோயிலுக்கு வெங்கடாசலபதியின் குடும்பம் அடிக்கடி வருவது வழக்கம். அப்போது கோயிலுக்கு அருகே வசிக்கும் பிரவீனா(18) என்ற இளம்பெண்ணுடன் நட்பாகி பின்னர் காதலிப்பதாக கூறியிருக்கிறார். இதை பிரவீனாவும் அவரது பெற்றோரும் கண்டித்தனர். இதனால் கோபமடைந்த அவர் வீட்டிலிருந்த பிரவீனாவை சரமாரியாக கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு, தப்பியோட முயன்றார். பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இந்நிலையில்தான் 6 ஆண்டுக்குப் பிறகு வைசியாவை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்று தற்போது மருத்துவமனையில் உள்ளார்.

அளவுக்கு மீறிய அன்பும் ஆபத்து

இந்தக் கொலை குறித்து மனநல மருத்துவர் தேவராஜ் கூறுகையில், “காதலி, மனைவி ஆகியோர் மீது அன்பு வைப்பது நல்லது. அதே அன்பு எல்லை மீறும்போது பல கஷ்டங்களை ஏற்படுத்துகிறது. இப்படிபட்டவர்கள் பல கட்டுப்பாடுகளை அந்த பெண் மீது திணிப்பார்கள். பின்னர் இது சந்தேக நோயாக மாறிவிடும். பாதிக்கப்படும் பெண் வாக்குவாதம் செய்வதால் எந்த பலனும் ஏற்படாது. சம்பந்தப்பட்ட நபரை மனநல மருத்துவரிடம் அழைத்து சென்று கவுன்சலிங் கொடுப்பது மட்டுமே சிறந்த வழி” என்றார்.

காதலியை கொன்ற காதலன்தற்கொலை முயற்சிவைசியாவெங்கடாச்சலபதி

You May Like

More From This Category

More From this Author