Published : 06 Apr 2014 10:17 AM
Last Updated : 06 Apr 2014 11:58 AM
நாமக்கல் ‘கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து அதிக இடங்களில் தேமுதிக வெற்றி பெற்றது. நாடாளுமன்றத் தேர்தலில் அதற்கான வாய்ப்பு அறவே இல்லை’ என அதிமுகவில் இணைந்த தேமுதிக 'மாஜி’ வேட் பாளர் என்.மகேஸ்வரன் கூறினார்.
வெற்றிபெற்ற பின் ஆளுங்கட்சி பக்கம் சட்டமன்ற, நாடாளு மன்ற உறுப்பினர்கள் தாவுவது வழக்க மான ஒன்று. அந்த வகையில் தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் 7 பேர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல் பட்டு வருகின்றனர். அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சியை விட்டே விலகி அதிமுக வில் ஐக்கியமாகியுள்ளார்.
இந்த பரபரப்பு சற்று அடங்கிய சூழலில் அக்கட்சியின் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட என்.மகேஸ்வரன், தொடக்கத்தில் உடல் நிலையை காரணம் காட்டி தேர்தலில் இருந்து விலகி பரபரப்பை ஏற்படுத்தினார். தற் போது கட்சியை விட்டே விலகி ஆளுங்கட்சியில் ஐக்கியமாகி யுள்ளார். ஆளுங்கட்சி யில் இணைந்தது குறித்து ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த பேட்டி:
தேமுதிகவை விட்டு விலகியதற்கு உண்மையான காரணம் என்ன?
உடல் நலக்குறைவால் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகினேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த என்னை கட்சி தலைமை மட்டுமன்றி ஒருவரும் ஆறுதலுக்காகக்கூட தொடர்பு கொள்ளவில்லை. கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நால்வர் கூறுவதை மட்டுமே தலைமை உண்மையென நம்புகிறது. குறிப்பாக பொருளாளர் இளங்கோவனை அனுசரித்து செல்ல வேண்டும். இல்லையெனில் கட்டம் கட்டப்படுவார். ஆரம்பத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் என 32 பேர் கட்சியில் இருந்தனர். தற்போது ஒருவர்கூட கட்சியில் இல்லை. இதற்கு இளங்கோதான் காரணம்.
அதிமுகவில் இணையும் முடிவு திடீரென எடுக்கப்பட்டதா, இல்லை நீண்டகால திட்டமா?
திடீரென எடுக்கப்பட்ட முடிவு தான். நானாகத்தான் அதிமுக நிர்வாகிகளை அணுகி கட்சியில் இணைத்துக் கொண்டேன்.
அதிமுகவில் இணைந்தது குறித்து எப்படி உணர்கிறீர்கள்?
அதிமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதை உள்ளது. ஆனால், திமுகவில் இல்லை. குறிப்பிட்ட சிலரே பதவியை அனுவிப்பர். திமுகபோல்தான் தேமுதிகவும். குறிப்பிட்ட சிலர் மட்டும் பதவி அனுபவிப்பர்.
தந்தையின் முட்டை தொழில் பாதுகாப்புக்காக அதிமுகவில் இணைந்ததாகக் கூறப்படுவது குறித்து?
இவ்வளவு நாள் வேறு கட்சியில் தான் இருந்தேன். தேர்தலில் போட்டியிட்டேன். அதனால், கட்சி வேறு, தொழில் வேறு. தொழில் பாதுகாப்புக்காக அதிமுகவில் இணையவில்லை.
சரி, இத்தேர்தலில் தேமுதிக எத்தனை இடங்களை கைப்பற்றும்?
கடந்த சட்டமன்ற தேர்தல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து அதிக இடங்களில் தேமுதிக வெற்றி பெற்றது. இத்தேர்தலில் 2ம் இடத்தை மட்டுமே பிடிக்கும். வெற்றிபெற வாய்ப்பில்லை.