Published : 27 Apr 2014 10:00 AM
Last Updated : 27 Apr 2014 10:00 AM

தேர்தல் பணியில் ஒத்துழைக்காத திமுக நிர்வாகிகள் பட்டியல் தயாரிப்பு: மே 16-க்குப் பிறகு நடவடிக்கை

மக்களவைத் தேர்தலில் ஒத்துழைப்பு தராத மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் பட்டியலை தயாரிக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது. தேர்தல் முடிவுக்குப் பிறகு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் திமுக சார்பில் 34 இடங்களில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். திமுக தலைமை யிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தலா ஒரு இடமும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டன.

இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவள வன் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதி தவிர, கூட்டணிக் கட்சி கள் போட்டியிட்ட தென்காசி, திருவள்ளூர், மயிலாடு துறை மற்றும் வேலூர் ஆகிய தொகுதிகளில் திமுக தரப்பில் தேர்தல் பணிகளில் சரியான ஒத்துழைப்பு தரவில்லை என்று புகார்கள் எழுந்தன.

அதேபோல், திமுக போட்டி யிட்ட பல தொகுதிகளிலும் சில மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளில் ஒரு தரப்பினர் சரியாகப் பணியாற்றவில்லை என்றும், தேர்தல் பணியாற்ற தயாராக இருந்தவர் களையும் மாவட்ட நிர்வாகிகள் பயன் படுத்திக் கொள்ளவில்லை என்றும் திமுக தலைமைக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து, தேர்தலுக்கு 20 நாட்களுக்கு முன்பு, புகார் வந்த தொகுதிகளுக்கு மாநில மற்றும் வெளி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பொறுப்புக் குழுவினரை அனுப்பி, தேர்தல் பணி யாற்ற வைத்தனர். அவர்கள் உடனுக்குடன் கட்சித் தலைமையை தொடர்பு கொண்டு பிரச்சினைகளை விளக்கி யதால், நிலைமை சரி செய்யப்பட்டு, கடைசி கட்டத்தில் தேர்தல் பணிகள் சூடுபிடித்தன.

இப்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில், தேர்தல் பணியில் அதிருப்தியை வெளிப்படுத்திய அல்லது ஒதுங்கிக் கொண்ட நிர்வாகிகள் பட்டியலை தயாரிக்க திமுக தலைமை உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் தலைமை தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் தனித்தனியே இதுகுறித்து அறிக்கை அனுப்ப முடிவு செய்துள்ளனர். இந்த அறிக்கையின் அடிப்படையில், தேர்தலில் கட்சி வேட்பாளருக்கு எதிராக செயல்பட்டவர்கள் மற்றும் பணியில் ஈடுபடாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, தலைமைக்கழக நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘தேர்தல் முடிவுகளுக்கு முன்பு பட்டியல் தயாரிக்கப்படும். ஆனால், தேர்தல் முடிவு வெளிவந்த பிறகே அதிருப்தியாளர்கள் மற்றும் உள்கட்சிப் பூசலில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை அதிருப்தியாளர்களின் பட்டியல் ரகசியமாக வைக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x