Published : 14 Apr 2014 01:31 PM
Last Updated : 14 Apr 2014 01:31 PM
காவல் துறையில் சேரக் குறிப்பிட்ட படிப்பு என்று எதுவும் இல்லை. காவலர்கள் பணி நிலைக்கு ஏற்பப் படிப்புகளும் மாறும். அந்தக் குறையைத் தீர்த்து வைக்கும் விதமாக அறிமுகம் செய்யப்பட்ட ஒரு துறை என்று கிரிமினாலஜி மற்றும் காவல் நிர்வாகம் படிப்பைச் சொல்லலாம்.
இப்படிப்பு இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளாக வழங்கப்படுகின்றன. கிரிமினாலஜிகளின் வகைகள், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு மேலாண்மை, சிறை நிர்வாகம், சைபர் குற்றங்கள், கூட்டத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் கலவர மேலாண்மை, தனியார் துப்பறிவு மற்றும் விசாரணை உள்ளிட்ட பாடத் திட்டங்கள் இப்படிப்பில் இடம் பெற்றுள்ளன. இந்தப் படிப்பில், உடற்பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி, குதிரையேற்றம், நீச்சல், யோகா மற்றும் கராத்தே ஆகிய கட்டாயப் பயிற்சிகளும் உண்டு.
ஒரு கிரிமினாலஜிஸ்ட் என்பவருக்கு, ஒரு குற்றத்தின் பின்னணிக் காரணங்களை ஆராய்வது முதன்மைப் பணி. அதோடு, புலனாய்வு, தண்டனை, மறுவாழ்வு மற்றும் திருத்தம் போன்ற பலவிதமான நிலைகளிலும் கிரிமினாலஜிஸ்டுகளின் பங்களிப்பு உண்டு. இந்தப் படிப்பின் மூன்றாம் ஆண்டில் கள அறிக்கைகள் சமர்ப்பிக்கும் வாய்ப்பும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
காவல் நிலையம், நடுவர் நீதிமன்றம், தீயணைப்பு நிலையம், மாவட்டக் குற்ற ஆவணப் பிரிவு, தடயவியல் அறிவியல் ஆய்வகம், தடயவியல் மருத்துவத் துறை மற்றும் மத்தியச் சிறைச்சாலைகள் ஆகிய இடங்களுக்கு நேரடியாகச் சென்று கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கைகள் சமர்ப்பிக்க வேண்டும். இது படிக்கும்போதே மாணவர்களுக்கு நல்ல அனுபவத்தைக் கொடுக்கிறது.
நாட்டில் நாள்தோறும் குற்றங்கள் அதிகரிப்பது போலக் கிரிமினாலஜி மற்றும் காவல் நிர்வாகம் தொடர்பான படிப்புக்கும் வரவேற்பு கூடி வருகிறது. கிரிமினாலஜி பட்டம் பெறுவோர் பல தளங்களில் பணி செய்ய வாய்ப்புகளும் கிடைக்கின்றன. சிபிஐ மற்றும் சிஐடி போன்ற மத்தியக் காவல் அமைப்புகள், மாநிலக் காவல் அமைப்புகள், ரயில்வே பாதுகாப்புப் படை, மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை, எல்லைப் பாதுகாப்புப் படை, இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படை , தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் ஆகியவற்றில் பணி வாய்ப்புகள் நிச்சயம் உண்டு.
போலீஸ் ஆக வேண்டும் என்று சிறு வயது முதலே விருப்பம் கொண்டுள்ளவர்கள் இப்படிப்பில் தாராளமாகச் சேரலாம்