Published : 24 Apr 2014 09:48 am

Updated : 24 Apr 2014 09:48 am

 

Published : 24 Apr 2014 09:48 AM
Last Updated : 24 Apr 2014 09:48 AM

வலைப்பூ வாசம்: ராஜாவைச் சந்தித்த நிமிடம்..

சராசரி இசை ரசிகனாக அப்போதைய இசையமைப் பாளர்களான எம்எஸ்வி, கே.வி. மகாதேவன், வி.குமார், சங்கர் கணேஷ்,கோவர்தன், விஜய பாஸ்கர், ஷியாம், ஜி.கே.வெங்க டேஷ் மற்றும் பலர் இசைகளை மேலோட் டமாக கேட்டுக் கொண்டிருந்தவன் நான். பிறகு வந்த இளையராஜாவையும் மேலோட்டமாக கேட்க ஆரம்பித்து பிறகு உள்நோக்க ஆரம்பிக்க அவரின் பாடல்களின் இனிமையும் இடை யிசையும் ஆச்சரியமும் பிரமிப்பும் ஏற்படுத்தியது. முக்கியமாக பழைய நெடிபோய் ஒரு லேட்டஸ்ட் ஸ்டைல் இருந்தது.முக்கியமான பாட்டுக்கள் “பனிவிழும் மலர்வனம்”, “எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்”.

இசை அடுத்தக்கட்டத்திற்கு நகர ஆரம்பிக்கிறது என்று தெரியாமலேயே பல வருடம் கேட்டுக்கொண்டிருந்தேன். விதவிதமான சம்பிரதாயத்தை உடைத்த ஹம்மிங்குகள் (காற்றினிலே வரும் கீதம்) என்னை ரொம்பவும் வசீகரித்தது.இவை மேல் இனம் புரியாத நெருக்கம் ஏற்பட்டு கேட்பதுபோய் சில பாடல்களோடு வாழத்தொடங்கினேன்.


இப்படியாக ராஜாவின் தீவிர ரசிகனானேன்.இவை எல்லாம் அந்தக் கால சோனி, பயனிர் கேசட்டில் டூ இன் ஒன் ஸ்டிரியோவில் கேட்கப்பட்ட பாடல்கள். சேட்(அனந்தகிருஷ்ணன்), சுந்தரராஜன், அன்வர்கான், கிருஷ்ணன் கூடும்போதெல்லாம் பாடல்களை ‘மயக் கமான’ நிலையில் கேட்டு முழுகித் திளைத்தோம்.

இசையமைப்பில் ஒரு புத்திசாலித் தனம் இருந்தது.இது மாதிரி உயர்தர இசை கேட்பதில் எங்களுக்கு ஒரு பெருமிதம் இருந்தது.இசை நாதங்கள் சேரும்போது அசட்டுத் தனம் ஒட்டு இல்லாமல் வழுக்கிக் கொண்டுபோவது ஒரு பெரிய பிரமிப்பு. ஹிந்திப்பாடல்களை ஓரம் கட்டினோம்.

அடுத்து இதுவரை கவனிக்கப்படாத படத்தின் பின்னணி இசை இவர் மூலம் ரசிகர்கள் கவனத்திற்கு வந்தது. இதற்கும் பிரமிப்பும் ஆச்சரியமும் ஏற் பட்டது. ‘சிவப்பு ரோஜாக்கள்’ ஒரு உதாரணம்.

பாடல்களில் லயித்துப்போய் எப்படி இவரால் இப்படி மாஜிக்காக பாடல்களை கம்போஸ் செய்ய முடிகிறது என்று மண்டை காய்ந்து இவரை மறைமுகமாக (அப்போது கெடுபிடி ஜாஸ்தி) சந்திக்க முடிவெடுத்து (1988) பிரசாத் ஸ்டியோவிற்குப் போனோம். கதவருகில் ஒளிந்தவாறு இடுக்கு வழி யாக பார்த்தோம். திருப்பதி பெருமாள் தரிசனம் மாதிரி சில வினாடிகளே கிடைத்தது. அன்றைய பாடல் கம்போசிங் “மலையோரம் மயிலே”(ஒருவர் வாழும் ஆலயம்)

அதற்கு பிறகு நண்பர்கள் பிரிந் தோம்.சில பேர் தொடர்பில் இருந் தோம். பலபேர் தொடர்பில் இல்லை. பிரிந்தாலும் அவரவர்கள் ராஜாவின் பாடல்களோடு தொடர்பில் இருந் தார்கள். ராஜாவைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் அடிமனதில் இருந்தாலும் முயற்சி எதுவும் எடுக்காமல் ‘அவரைப் போய் ஏன் டிஸ்டர்ப் பண்ணணும்?” என்ற எண்ணமும் ஏற்படும். அடுத்து அவர் ரசிகர்களை அவ்வளவாக சந்திப்பதில்லை என்றும் கேள்வி.

கடைசி ஆறு வருட இடைவெளியில் (2008-2014) இணையதளத்தில் இளைய ராஜாவின் இசை பற்றிய அறிவு வேறு ஒரு தளத்திற்கு விரிந்தது.இணைய தள ரசிகர்கள் அவரை அடிக்கடி சந்திப்பதும் போட்டோ எடுத்துக்கொள் வதும் நானும் அவரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண் டியது. நிறைய சந்தர்ப்பங்கள் கதவைத் தட்டியதும் தவிர்க்கமுடியாத காரணங்களால் (அம்மாவின் உடல் நிலை) போக முடியவில்லை.

23 வருடம் கழித்து என்னைச் சந்தித்தார் பழைய அலுவலக நண்பர் முருகானந்தம்.அவர் கோயம்புத்தூர். மீண்டும் ராஜா பாடல்களைப் பற்றி அலசல். “ரெடியா இரு... அவரைப்போய் பார்க்கலாம்” என்று மண்டைகாயும் வெயிலில் என் வீட்டிற்கு வந்து ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். ‘எப்படி அப்பாயின்மெண்ட் இல்லாமல்....” என்று இழுத்தேன். ‘கிளம்புப்பா’ என்றார்.

வடபழனி எப்படி இருந்தது? எப் படியோ மாறிவிட்டது. பச்சைபோய் கல்லும் சிமெண்டும் பெயிண்டும் கான் கிரீட் காடுகள். ஸ்டூடியோ இருபத்தி எட்டு வருடத்திற்கு முன் பார்த்தது. மாற்றங்கள் தெரிந்தது. கார்களும் ஸ்கூட்டர்களும் பைக்குகளும் மர நிழலில்.

ரெக்கார்டிங் நடப்பதற்கான அறிகுறி கள் தெரிந்ததால் ராஜா இருப்பார் என்ற நம்பிக்கை மனதில் துளிர்விட்டது. வாசல் ரிசப்ஷனில் கார்த்திக்ராஜா புன்னகையுடன் நண்பரை வரவேற்றார். ‘இருக்கிறார்’ என்றார். எனக்கு உடம்பில் ஒரு குறுகுறுப்பு.

உள்ளே ராஜாவின் இசைக்குழு வல்லுநர்கள் தத்தம் வாத்தியங்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள். இதை பல தடவை போட்டோவில் பார்த்து பரவசப்பட்டிருக்கிறேன். இன்று பரபரப்பு இல்லை. லன்ச் பிரேக் மாதிரி மெலிதான அலை அடித்துக் கொண்டிருக்கும் இசை ஆற்றைக் கடப்பது மாதிரி உள்ளுணர்வு.

நான்: “போட்டோ எடுக்கணும்... ரெடியா செல்ல வச்சுக்கோ.”

நண்பர்: “இன்னொரு நாள் எடுக்க லாம்... முதல்ல அவர பாரு.”

“இன்னொரு நாளா?” எனக்கு உள்ளுக்குள் "பக்" என்றது.சற்று எரிச்சல் ஏற்பட்டது. எனக்கு எப்போதுமே அன்றே செய்... நன்றே செய் பாலிசி.அதுவும் மேஸ்ட்ரோவை பார்ப்பது என்பது. நாளை என்பது நமக்கு தெரியாத ஒன்று. இன்றேதான் எனது மனதில் முடிவு செய்தேன்.நண்பரிடம் எதுவும் சொல்லவில்லை.

“வாங்க... செளக்கியமா...” நண் பரைப் புன்னகையுடன் வரவேற்றார் ராஜா. பரவசத்தில் புன்னகைத்துவிட்டு அவர் காலில் விழுந்தேன்.எழுந்தபோது மார்பில் கையை வைத்தபடி ஆசிர்வாத போசில் இருந்தார்.

பேசுவதற்கு ஒன்றும் இல்லை.எழுந்து... “சார் ஒரு போட்டோ எடுத்துக்கலாமா?” மேஸ்ட்ரோவிடம் கேட்டேன். நண்பர் தயங்கியபடி இருக்க மேஸ்ட்ரோ “ எடுங்க முருகானந்தம்” என்று எனக்குஆதரவாக சொல்ல புல்லரித்தேன். பக்கத்தில் நிற்க நண்பர் போட்டோ எடுத்தார்.

முடிந்தவுடன் கண்களாலேயே டைம் முடிந்தது என்று சொல்லி மாரில் கைவைத்தபடி விடைகொடுத்தார். புன்னகையுடன் விடைபெற்றோம்.பரவசத்துடன் ரூமை விட்டு வெளி வந்தோம்

ஜன்மாந்திர சாபம் தீர்ந்தது. ரொம்ப லேட்டாக தீர்ந்தது. புராணக்கதைகளில் சாபம் தீர்ந்தவுடன் ஒரு வசனம் வரும்.அதுமாதிரி “பக்தா..... இன்றுமுதல் உன்னுடைய ராஜா ரசிகன் என்ற வட்டம் முழுமை பெறுகிறது.”

ரவிசங்கர் கிருஷ்ணமூர்த்தி http://raviaditya.blogspot.in/

இளையராஜாவலைஞர் பக்கம்

You May Like

More From This Category

More From this Author