Published : 16 Apr 2015 11:15 am

Updated : 16 Apr 2015 11:15 am

 

Published : 16 Apr 2015 11:15 AM
Last Updated : 16 Apr 2015 11:15 AM

உலக மசாலா: மாயக் கண்காரி!

ஒப்பனைக் கலைஞர் ஹைகரு சோ தன்னுடைய கற்பனை மூலம் மனித உடல் மீது ஆப்டிகல் இல்யூஸன் எனப்படும் மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதில் நிபுணராக இருக்கிறார். முப்பரிமாணத்தில் இவரது ஓவியங்கள் பார்ப்பவர்களைப் பிரமிக்கச் செய்கின்றன. உலகம் முழுவதும் இவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.

கழுத்தில் கறுப்பு மையைப் பூசி, பின்பக்கமும் கறுப்புத் துணியைக் கட்டிவிட்டால் கழுத்து இல்லாத உடல் போல் மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதேபோல் கழுத்தில் ஸ்பிரிங் போன்று வரைந்துவிட்டால், ஸ்பிரிங்கில் தலை நிற்பது போல மாயத்தோற்றத்தைத் தருகிறது.

மூடிய கண் மீது, பச்சை வண்ண திறந்த கண்ணை வரைந்தால் அது வேறொரு விதமான தோற்றத்தைத் தருகிறது. அவரவர் கற்பனைக்கு ஏற்றவாறு இப்படி மாயத்தோற்றங்களை உருவாக்கலாம் என்கிறார் ஹைகரு.

ரொம்ப ரொம்ப அட்டகாசமா இருக்கு!

சீனாவின் யுன்லாங் கவுண்டியில் வசிக்கிறார் 25 வயது ஜியா பின்ஹுய். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு ரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஏழ்மையான விவசாயி என்பதால் மாற்று எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சை செய்ய இயலவில்லை. தன்னைப் பாதுகாக்கும் முயற்சியில் தானே இறங்கினார் ஜியா. மாற்று மருத்துவத்தைத் தேடிக் கண்டுபிடித்தார். அதில் புற்றுநோயை எதிர்க்கும் சக்தி வெப்பத்துக்கு இருக்கிறது என்று தெரிந்தது. 42 டிகிரி செல்சியஸில் புற்றுநோய் செல்கள் அழிந்துவிடும் என்று சிலர் கூறியிருக்கிறார்கள்.

தன்னுடைய தோட்டத்தில் இரண்டு பக்கங்களிலும் செங்கற்களை அடுக்கினார் ஜியா. இரண்டையும் இணைக்கும் விதத்தில் கம்புகளைக் குறுக்கே வைத்தார். கீழே இலை, தழைகள், குச்சிகள், விறகுகள் எல்லாவற்றையும் சேர்த்துக் கொளுத்தினார். செங்கற்களுக்கு மேலே இருந்த கம்புகளில் வெற்று உடம்புடன் படுத்தார். நேரம் செல்லச் செல்ல வெப்பம் அதிகரித்தது. ஆனாலும் பொறுத்துக்கொண்டு படுத்திருந்தார்.

‘’42 டிகிரி கொதிக்கும் தண்ணீரில் படுத்திருக்க வேண்டும் என்றார்கள். அது என்னால் முடியாது. அதனால் நானே இப்படி ஒரு வழியைக் கண்டுபிடித்திருக்கிறேன்’’ என்கிறார் ஜியா. நீண்ட காலம் காதலித்த தன் காதலியை ஒரு மாதத்துக்கு முன்புதான் திருமணம் செய்திருக்கிறார் ஜியா. ஆனால் இவரின் விநோதமான மருத்துவத்தைக் கண்டு, வீட்டை விட்டுச் சென்றுவிட்டார் மனைவி. பரிசோதனை செய்து பார்த்ததில் முன்னேற்றம் இருப்பதாகச் சொல்கிறார் ஜியா.

ஐயோ… பாவம் ஜியா…

இங்கிலாந்தில் வசிக்கிறார் 38 வயது டேவிட் நெல்லிஸ்ட். இவர் உணவு விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். தினமும் குடித்துவிட்டு, வீட்டில் உள்ள கோகோ என்ற நாயைப் போட்டு அடிப்பார். பிறகு அறைக்குள் தள்ளி, கதவைத் தாழிட்டு விடுவார். அருகில் உள்ளவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். டேவிட் குற்றச்சாட்டை மறுத்தார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்த்த காவலர்கள், குற்றச்சாட்டைப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

2 மாதங்கள் சிறை தண்டனை, 18 மாதங்கள் தொழிலுக்குச் செல்லக்கூடாது, 5 வருடங்களுக்கு எந்தப் பிராணியையும் வளர்க்கக்கூடாது, எங்காவது 200 மணி நேரங்களில் 14.5 லட்சம் ரூபாய் அளவுக்கு சம்பளம் இல்லாமல் வேலை செய்யவேண்டும் என்று தீர்ப்பளித்தது நீதிமன்றம். அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார் டேவிட்.

கோகோவுக்கு நியாயம் கிடைத்திருக்கிறது!

சீனாவின் யுன்னன் மாகாணத்தைச் சேர்ந்த தோட்டக்காரர் லி. அவரது தோட்டத்தில் ராட்சச டர்னிப் ஒன்று விளைந்திருக்கிறது. 4 அடி நீளமும் 15 கிலோ எடையும் கொண்ட அந்த டர்னிப்பை, ‘ஃபேட் லிட்டில் கேர்ள்’ என்று செல்லமாக அழைக்கிறார் லி. செயற்கை உரங்களின்றி, இயற்கையாக விளைவிக்கப்பட்டது இந்த ராட்சச டர்னிப் என்பதில் அவருக்குப் பெருமை.

அட!

உலக மசாலாமாயக் கண்காரி

You May Like

More From This Category

More From this Author