Published : 18 Feb 2015 02:41 PM
Last Updated : 18 Feb 2015 02:41 PM

தஞ்சையில் மீத்தேன் எதிர்ப்புப் போராட்டம்: வைகோ உட்பட பலர் கைது

மீத்தேன் எரிவாயுத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தஞ்சையில் மத்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மதிமுக பொதுச் செயலர் வைகோ உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக மதிமுக வெளியிட்ட செய்தி:

"தமிழகத்தின் உயிர் வாழ்வாதாரங்களில் தலையாயதான காவிரி நதிநீர் உரிமையைப் பாதுகாக்கவும், சட்ட விரோதமாகவும், நீதிக்குப் புறம்பாகவும் கர்நாடக மாநிலத்தில் மேகதாது தாதுமணலில் இரண்டு அணைகளைக் கட்ட முனைந்துவிட்ட கர்நாடக அரசின் வஞ்சகத் திட்டத்தை முற்றாகத் தடுத்து நிறுத்தவும், தஞ்சை மாவட்டத்திலும், சிவகங்கை மாவட்டத்திலும் நிலம், நீர், காற்றுமண்டலம் அனைத்திலும் பலத்த நாசம் விளைவிக்கும் மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை தொடங்க விடாமல் தடுத்து நிறுத்தவும் வலியுறுத்தி, தஞ்சையில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது.

காவிரிக்குக் குறுக்கே மேகதாட்டு தாதுமணலில் கர்நாடக அரசு கட்ட முனைந்துவிட்ட அணைகளைக் கட்ட விடாமல் தடுக்க வேண்டிய முழுப் பொறுப்பும் இந்தியாவின் மத்திய அரசுக்கு உண்டு என்பதால், அந்தக் கடமையைச் செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தவும், நாசகார மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை தஞ்சை மாவட்டத்திலும், சிவகங்கை மாவட்டத்திலும் செயல்படுத்தும் முடிவை மத்திய அரசு இரத்து செய்யுமாறு வலியுறுத்தவும், காவிரி நதி நீரால் பயன்பெறும் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்திலும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் இயங்குவதைத் தடுத்து, காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அறவழியில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

காவிரி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வைகோ அவர்கள் தலைமையில் தஞ்சை கலால் வரி அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனியூட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, பேரழிவு எதிர்ப்பு இயக்கம், தமிழ்ப் புலிகள், விடுதலை தமிழ் புலிகள், விளிம்புநிலை மக்கள் விழிப்புணர்வு இயக்கம், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புக் குழு, தமிழர் தேசிய விடுதலை அமைப்பு, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் தேசிய விடுதலை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், தமிழகத்தில் காவிரி உரிமைக்குப் போராடும் இயக்கங்கள், தமிழ் இன உணர்வு அமைப்புகள், வணிகர் சங்கங்கள், மீனவர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்புகளைச் சேர்ந்து 10 ஆயிரம் பேர் கைதாகினர் என்று அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x