Published : 07 Feb 2015 09:31 AM
Last Updated : 07 Feb 2015 09:31 AM

தமிழக அரசு நிலம் தந்துள்ளது: நியூட்ரினோ திட்டத்தால் மனித குலத்துக்கு நன்மை - உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

‘நியூட்ரினோ திட்டத்தால் மனித குலத்துக்கு நன்மை ஏற்படும். நிலத்தடி நீர்மட்டம், சுற்றுச்சூழல் மாசுபடாது என உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், பொட்டிப்புரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கத் தடை விதிக்கக்கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மதிமுக பொதுச் செயலர் வைகோ பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எஸ்.தமிழ்வாணன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை செயலர் சார்பில் மும்பை பாபா அணுசக்தி மையத்தின் இயக்குநர் சேகர்பாசுவின் பதில் மனுவை, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ஆர்.சுவாமிநாதன் தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:

நியூட்ரினோ மையம் அமைக்க நாட்டில் பல்வேறு இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இறுதியில் தேனி மாவட்டம், பொட்டிப்புரத்தில் அமைக்க முடிவானது. இந்த ஆய்வு மையம் அமைப்பதற்கு, ஆயிரம் மீட்டர் சுற்றளவில் பாறை இருக்க வேண்டும். அந்த வகையில் பொட்டிப்புரம்தான் தகுதியான இடம். இங்கு 1910 மீட்டர் நீளத்துக்கு பாறையில் குகை அமைக்க முடியும். இந்த இடத்தின் அருகே அடர்ந்த வனம் இல்லை. விவசாயப் பணிகள் நடைபெறவில்லை. இத்திட்டத்தால் சிறிய அளவில் பாதிப்பு ஏற்படும்.

இந்திய அணுசக்தி துறை, விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பத் துறைகள் இணைந்து இந்த ஆய்வு மையத்தை நிறுவ உள்ளது. டாடா ஆராய்ச்சி நிறுவனமும் இந்த ஆய்வில் பங்கேற்கிறது. கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு செய்யவுள்ளது. ஆய்வகம் அமைக்க 26.82.5 ஹெக்டேர் நிலத்தை தமிழக அரசு தந்துள்ளது. இதனால் தனியாரிடம் இருந்து நிலம் கையகப்படுத்த வேண்டியதில்லை.

ஆய்வகம் அமைப்பதற்கு தற்போது நிதி ஒப்புதல் பெறப் பட்டுள்ளது. ஆய்வக வரை படம் தயாரான பின்னர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஒப்புதல் பெற விண்ணப்பிக்கப்படும். நியூட்ரினோ மையத்தால் பெரும் நாசம் ஏற்படும் எனக் கூறுவது சரியல்ல. அதே நேரத்தில் இத்திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது குறித்து மனுதாரர் கேள்வி எழுப்பவில்லை. மனு தாரர் கூறுவதுபோல் ஆய்வகம் அமைக்க ஆயிரம் டன் வெடி மருந்துகள் பயன்படுத்தப் போவதில்லை. வெறும் 450 டன் வெடி பொருள் மட்டுமே பயன்படுத்தப்படும். 2.30 லட்சம் கன மீட்டர் அளவுக்குதான் பாறைகள் வெட்டி எடுக்கப்படும். இப்பணிகள் 3 ஆண்டில் முடிவடையும்.

கேரளாவில் இடுக்கி அணை கட்டப்பட்டபோது இதே அளவில் பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டன. தற்போது பாதிப்பு இல்லாமல் பாறைகளை வெட்டி எடுப்பதற்கு பல்வேறு தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. நில அதிர்வு பகுதியில் இந்த மையம் அமைக்கப்படு வதாக கூறுவது தவறு.

இந்திய நில அதிர்வு பகுதி களின் வரைபடத்தில் ஆய்வகம் அமையும் பகுதி இல்லை. திறந்த வெளியில் உள்ள பிரபஞ்சக் கதிர்களால் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஆய்வகம் குகைக் குள் அமைக்கப்படுகிறது. நீரோட்டம் பாதிக்கப்படாது, மாசு அடையாது. நீரில் கதிர் வீச்சு ஏற்படாது. ஆய்வகம் அமையும் பாறை கடினத்தன்மை கொண்ட செர்னோகைட் வகையைச் சேர்ந்தது.

இதனால் இந்த வகையிலான பாறையில் நீரோட்டம் இருக்காது. நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு இந்த ஆய்வகம் பெரியளவில் உதவியாக இருக்கும். நியூட்ரினோ ஆய்வகத்தால் பாதிப்பு ஏற்படாது. மனிதகுலத்துக்கு நன்மை ஏற்படுத்தும். எனவே, வைகோ மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

தேனி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவிப் பொறியாளர் பி.எஸ்.பாண்டியன் தாக்கல் செய்த பதில் மனுவில், இத்திட்டத்துக்கு இதுவரை மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஒப்புதல் பெறவில்லை எனக் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து மனுவுக்கு தமிழக சுற்றுச்சூழல், வனத்துறை செயலர், தேனி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதில் அளிக்கவும், மத்திய அரசு மனுவுக்குப் பதில் அளிக்க வைகோவுக்கு அனுமதி வழங்கியும் அடுத்த விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதனிடையே நியூட்ரினோ திட்டத்துக்கு ஆதரவாக இளங்கோ என்பவர் நேற்று மனு தாக்கல் செய்தார். அதில் நியூட்ரினோ திட்டத்துக்கு 2011-ல் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது. இது மத்திய அரசின் கொள்கை முடிவாகும். எனவே, திட்டத்தை ரத்து செய்யக்கோர முடியாது என கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x