Published : 15 Feb 2015 10:33 AM
Last Updated : 15 Feb 2015 10:33 AM

மகளிர் சுயஉதவிக் குழுக்களை மூட திட்டம்: மத்திய அரசு மீது திமுக மகளிரணி குற்றச்சாட்டு

மகளிர் சுயஉதவிக் குழுக்களை முடக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது என்று திமுக மகளிரணி குற்றம்சாட்டியுள்ளது.

திமுக மகளிரணி, மகளிர் தொண்டரணி, பிரச்சாரக் குழு நிர்வாகிகளின் கலந்துரையாடல் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இதில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி சிறப்புரையாற்றினார்.

திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் சற்குண பாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன் என 2 மகளிருக்கு வாய்ப்பு வழங்கியதற்காக கட்சித் தலைமைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்தியில் உள்ள பாஜக அரசு மொழித்திணிப்பில் ஈடுபடுகிறது. தமிழகத்தில் மகளிருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. திமுக ஆட்சியில் 6,250 ஆக குறைக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள், தற்போதைய ஆட்சியில் 6,800 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக்களை மூட பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இதையெல்லாம் திமுக மகளிரணி வன்மையாக கண்டிக்கிறது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதேபோல திமுக மருத்துவ அணி சார்பிலும் நேற்று கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதற்கு மருத்துவர் அணி செயலாளர் பூங்கோதை ஆலடி அருணா தலைமை வகித்தார். தமிழகம் முழுவதும் நோய் அறியும் விழிப்புணர்வு மருத்துவ முகாம்கள் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x