Published : 18 Feb 2015 10:10 AM
Last Updated : 18 Feb 2015 10:10 AM

ரயில்வே கிராஸிங்கில் பழுதாகி நின்ற பேருந்து: ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதம்

காஞ்சிபுரத்தை அடுத்த பொன்னேரிக்கரை அருகேயுள்ள ரயில்வே கிராஸிங்கை நேற்று கடக்க முயன்ற அரசு குளிர்சாதன பேருந்து, திடீரென பழுதாகி தண்டவாளத்திலேயே நின்றுவிட்டதால், விரைவு மின்சார ரயில்கள் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

பொன்னேரிக்கரை அருகே யுள்ள காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் ரயில்வே கிராஸிங் உள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு குளிர்சாதனப் பேருந்து, நேற்று இந்த ரயில்வே கிராஸிங்கை கடக்க முயன்றபோது, திடீரென பழுதாகி தண்டவாளத்திலேயே நின்றுவிட்டது. ஓட்டுநர் எவ்வளவோ முயற்சித்தும் பேருந்தை மீண்டும் இயக்க முடியவில்லை.

பொதுமக்கள் உதவியுடன் பேருந்தை அப்புறப்படுத்த முயன்ற போது, சக்கரங்கள் சுழலவில்லை. இதுகுறித்து ரயில்வே நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, திருப்பதி- புதுச்சேரி பயணிகள் ரயில் மற்றும் காஞ்சிபுரம்- சென்னை கடற்கரை விரைவு மின்சார ரயில்கள் காஞ்சிபுரம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன.

இதேபோல, செங்கல்பட்டு- காஞ்சிபுரம் மின்சார ரயில், அரக்கோணம் பயணிகள் ரயில் ஆகியன வாலாஜாபாத் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன.

பின்னர், காஞ்சிபுரம் அரசுப் போக்குவரத்து பணிமனையின் தொழில்நுட்பக் குழுவினர் வந்து, பழுதை நீக்கி ரயில்வே கிராஸிங்கிலிருந்து பேருந்தை அப்புறப்படுத்தினர்.

இதையடுத்து, ஒரு மணி நேரம் தாமதமாக ரயில்கள் புறப்பட்டுச் சென்றன. பரபரப்பான சாலையில் திடீரென போக்குவரத்து தடை பட்டதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத் துக்குள்ளாயினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x