Published : 21 Feb 2015 04:44 PM
Last Updated : 21 Feb 2015 04:44 PM

ஆவணங்கள் திருட்டு விவகாரம்: மோடி பதவி விலகுவாரா? ஈவிகேஎஸ் இளங்கோவன் கேள்வி

மத்திய அரசின் ரகசிய ஆவணங்கள் முக்கியத் துறைகளில் திருடப்பட்டு, குறிப்பிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டதில் பிடிபட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி பதவி விலகுவாரா ? என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மத்திய அரசின் ரகசிய ஆவணங்களை திருடியதில் டெல்லி போலீசாரால் 7 பேர் கையும், களவுமாக கைது செய்யப்பட்டுள்ள செய்தி நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர்களிடமிருந்து இரண்டு கோணிப்பை நிறைய ஆவணங்கள் சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ளது. இத்தகைய ஆவணங்கள் பெட்ரோலியத்துறை, நிலக்கரித்துறை, எரிசக்தித்துறை, நிதி அமைச்சகம் போன்ற மிக முக்கியமான துறைகளில் நிகழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயம், வரிவிதிப்பு, இறக்குமதி கொள்கை உள்ளிட்டவை தொடர்பான ஆவணங்கள் திருடப்பட்டு, நகல் எடுத்து, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அரசு அதிகாரிகள் மூலம் விற்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள அரசு அலுவலகமான சாஸ்திரி பவனில் பெட்ரோலியத்துறை அலுவலகத்தில் சம்மந்தப்பட்ட அமைச்சர் வெளியேறிய பிறகு, மாலை நேரங்களில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழக்கம் செய்யப்பட்டபிறகு இந்த திருட்டை திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளனர்.

இத்தகைய ஆவணங்கள் மூலம் அரசின் கொள்கை முடிவுகளை முன்கூட்டியே அறிந்து, அதன்மூலம் தங்களது நிறுவன செயல்பாட்டை வகுத்துக் கொண்டு கோடிக்கணக்கான ரூபாயை ஆதாயமாக பெறும் முயற்சியில் கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்பட்டு வந்துள்ளன. இதனடிப்படையில் தான் பங்கு சந்தையில் இந்த நிறுவனங்களின் பங்குகள் பலமடங்கு கூடி கோடிக்கணக்கான ரூபாயை காh;ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடித்துள்ளன.

எல்லாவற்றிற்கும் மேலாக, 2015-16 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ஆவணங்கள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி அலுவலகத்திலிருந்து திருடப்பட்டிருப்பது நம்மை மேலும் பலமடங்கு அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. பட்ஜெட் ஆவணங்களைக் கூட காப்பாற்ற முடியாத அவலநிலையில் தான் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அத்தோடு நில்லாமல் பிரதமர் அலுவலகத்தில் முதன்மை செயலாளராக பணியாற்றும், நிருவேந்திர மிஸ்ரா எழுதிய கடிதமும் களவு போய் கைது செய்யப்பட்டவர்களிடம் சிக்கியிருக்கிறது.

இத்தகைய ஆவண திருட்டுகளில் பிரதமர் அலுவலகத்தை கூட கார்ப்பரேட் நிறுவனங்கள் விட்டு வைக்கவில்லை. இதைவிட நிர்வாகச் சீர்கேட்டிற்கு வேறு சான்று தேவையில்லை. இதுதான் பிரதமரின் நல்லாட்சிக்கு இலக்கணமா ? பிரதமர் மோடி தான் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

மத்திய அரசின் ஆவணங்களை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கீழ்நிலை ஊழியர்களின் பின்னணி என்ன? இவர்களுக்கு பின்னாலே மூளையாக இருந்து செயல்பட்ட மூத்த அதிகாரிகள் யார்? இதில் பெரும் பலனை அடையும் கார்ப்பரேட் நிறுவனத்தின் பெயரை பகிரங்கமாக வெளியே சொல்ல மோடி அரசுக்கு என்ன தயக்கம் ? சம்மந்தப்பட்ட கார்ப்பரேட் நிறுவனம் தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடிக்கு மிகமிக நெருக்கமானது என்பதுதான் மூடி மறைப்பதற்கு காரணமா ? எய்தவனை விட்டுவிட்டு, அம்பை நோகுவது ஏனோ ?

இந்தியா முழுவதும் அலுவலகங்கள் உள்ள நிலக்கரித் துறையில் கோப்புகளை காணவில்லை என்பதற்காக அன்றைய பிரதமர் மன்மோகன்சிங்கை பதவி விலகச் சொன்னவர்கள் பா.ஜ.க.வினர் என்பதை யாரும் மறந்துவிட முடியாது.

இன்று மத்திய அரசின் ரகசிய ஆவணங்கள் முக்கியத் துறைகளில் திருடப்பட்டு, குறிப்பிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டதில் பிடிபட்டுள்ள நிலையில் ஏற்கெனவே கூறியதற்கு முன்மாதிரியாக விளங்க பிரதமர் மோடி பதவி விலகுவாரா ? குறைந்தபட்சம் சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்களாவது பதவி விலகுவார்களா ?'' என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x