Published : 03 Feb 2015 15:16 pm

Updated : 03 Feb 2015 15:16 pm

 

Published : 03 Feb 2015 03:16 PM
Last Updated : 03 Feb 2015 03:16 PM

எதிரி அல்ல நண்பனே!

முயலுக்கும் ஆமைக்கும் இடையில் நடத்தப்பட்ட ஓட்டப் பந்தயப் போட்டியில் ஏளனத்தாலும் சோம்பேறித்தனத்தாலும் முயல் தோற்றது. நிதானத்தாலும் விடா முயற்சியாலும் ஆமை வென்றது. முயலாமைதான் முயலின் தோல்விக்குக் காரணம் என்பதே ‘முயலும் ஆமையும்’ என்ற கதையின் நீதி. இன்றைய கார்ப்பரேட் வேலைச் சூழலுக்கு ஏற்ப இதே கதை வேறு விதமாகப் புனையப்படுகிறது.

முயலின் வேகமும் வேண்டும்; ஆமையின் விவேகமும் வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் no more slow and steady, but fast and smart என்கிறார்கள். ஆனால் உளவியல் நிபுணர் கார்டனரின் பன்முக அறிவுத்திறன் கோட்பாட்டின் அடிப்படையில் இந்தக் கதையை வேறு கோணத்தில் ஆராயலாம்.

எதிரியாக்குவது சரியா?

ஆமைக்கும், முயலுக்கும் இடையில் போட்டி வைக்கலாமா? ஆமையின் பலம் வேறு, முயலின் பலம் வேறு. அப்படி இருக்க இருவருக்கும் ஒரே விதமான போட்டி வைத்து யார் திறமைசாலி என்பதைச் சோதிப்பது சரியா?

அடுத்து, ஒரு போட்டி வைத்து அதன் இறுதியில் ஒருவரை வெற்றியாளர் மற்றிருவரை தோல்வியாளர் என முத்திரை குத்துவது ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துமே? ஆமையும் முயலும் நண்பர்களாக இருக்கும் சூழலை உருவாக்காமல் எதிரிகளாக்குவது ஆரோக்கியமான அணுகுமுறையா?

இந்தக் கேள்விகளை வெவ்வேறு திறன் கொண்ட மனிதர்களுக்குப் பொருத்திப் பாருங்கள், உண்மை விளங்கும்.

சவாலே சமாளி!

மனிதத் தொடர்பு அறிவுத் திறனுக்கு கார்டனர் ரத்தினச் சுருக்கமாக அளிக்கும் விளக்கம் ‘people smart’ஆக இருப்பது. அதாவது குழுவாக இணைந்து திறம்படச் செயல்படுவது. நேர்மறையான அணுகுமுறை மூலம் மனிதர்களிடையே அணுக்கமான உறவை ஏற்படுத்துவது. குழுவுக்கு இடையில் பிரச்சினை மூண்டால் அதற்கு லாவகமாகத் தீர்வு கண்டறிவது. இந்தப் புரிதலோடு ‘முயலும் ஆமையும்’ கதையை மாற்றி எழுத முயலலாம் வாங்க!

இன்று முதல், ஆமையும், முயலும் போட்டியாளர்கள் அல்ல. இருவரும் ஒரே குழுவின் உறுப்பினர்கள். 1 மணி நேரத்தில் குழுவாக இணைந்து ஒரு சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டும். அடைய வேண்டிய இலக்கு 4 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ளது.

செல்ல வேண்டிய பாதையில் 1 கிலோ மீட்டர் தாண்டி, குறுக்கே ஒரு நதி ஓடுகிறது. அந்த நதி மட்டும் 2 கிலோ மீட்டர் அகலம் இருக்கும். அதன் பிறகு மேலும் 1 கிலோ மீட்டர் கடந்து விட்டால் வெற்றிதான். 1 மணி நேரத்துக்குள் ஆமையால் நிச்சயமாக 4 கிலோ மீட்டரைக் கடக்க முடியாது. முயலுக்கோ நீந்தவே தெரியாது. என்ன செய்யலாம்?

புதிய கதை இதோ!

ஆமையைத் தூக்கித் தன் முதுகில் வைத்தது முயல். எடுத்தது ஓட்டம். சில மணித் துளிகளில் நதிப் படுகையை வந்தடைந்தனர். அடுத்து, ஆமை தன் முதுகில் முயலை ஏற்றிக் கொண்டு நதியில் நீந்தத் தொடங்கியது. விரைவாக அக்கரைக்கு வந்து சேர்ந்தார்கள். மீண்டும் முயல் தன் முதுகில் ஆமையைத் தூக்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தது. அவ்வளவுதான் கொடுத்த நேரத்தில் இருவரும் இணைந்து வெற்றிகரமாக இலக்கை வந்தடைந்தார்கள்.

ஆமையோ முயலோ திறமையில் சளைத்தவர்கள் அல்ல. ஆனால் தனித் தனியாகச் செயல்பட்டிருந்தால் இருவருமே இலக்கை அடைந்திருக்க மாட்டார்கள். கார்டனர் குறிப்பிடும் மனிதத் தொடர்பு அறிவுத் திறன் இத்தகைய கூட்டு முயற்சியைத்தான் முன் மொழிகிறது.

மனிதத் தொடர்பு அறிவுத் திறன் கொண்டவர்கள் ஒரு குழுவாகச் செயல்படும்போது யாருடைய பலம் எது என்பதைத் துல்லியமாகக் கண்டறிவார்கள். அந்தப் பலத்தை ஆக்கப்பூர்வமாக மாற்றப் புதிய பாதையையும் காட்டுவார்கள்.

உங்களுக்கும் விருப்பமா?

உங்களிடம் இருக்கும் மனிதத் தொடர்பு அறிவைப் பட்டைதீட்ட விருப்பமா? கீழே கொடுக்கப்பட்டுள்ள வேடிக்கை, மகிழ்ச்சி நிறைந்த விஷயங்களை உங்கள் நண்பர்களோடு இணைந்து முயன்று பாருங்கள்.

தீர்வு என்ன?

குழுவாக இணைந்து ‘முயலும் ஆமையும்’போல மோதலை மையமாகக் கொண்ட ஏதோ ஒரு கதையைத் தேர்ந்தெடுங்கள்.

நீங்கள் அந்தச் சூழலில் இருந்தால் என்ன செய்வீர்கள் என யோசித்துப் பாருங்கள். கதையில் இடம் பெறும் வெவ்வேறு கதாபாத்திரங்களும் அந்தச் சிக்கலை எவ்வாறு அணுகலாம் என்பதை விவாதியுங்கள். புதிய கதையை உருவாக்கி உங்கள் பள்ளியிலோ, கல்லூரியிலோ மேடை ஏற்றுங்கள்.

அவர்கள் உணர்வு

நண்பர்கள், பெற்றோர், உறவினர் இப்படி உங்களைச் சுற்றிலும் உள்ளவர்களைக் கூர்ந்து கவனியுங்கள். வாய் மொழியால் அல்லாமல் உடல் மொழி மூலம் அவர்கள் என்ன தெரிவிக்கிறார்கள் என்பதைத் தொடர்ந்து கவனியுங்கள். பேச்சு மொழியைக் காட்டிலும் உடல் மொழி பலவற்றைத் துல்லியமாக வெளிப்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அவர் இடத்தில் நான்

சமீபத்தில் நீங்கள் கடும் வாதத்தில் ஈடுபட்ட ஒரு சம்பவத்தை நினைவுகூருங்கள். நீங்கள் எதிர்த்த அந்த நபருடைய நிலையில் உங்களைப் பொருத்திக்கொள்ளுங்கள். அந்தத் தருணத்தில் அவர் எப்படி உணர்ந்திருப்பார், எதனால் அப்போது அவ்வாறு நடந்து கொண்டார் என்பதை உணர முயலுங்கள்.

“நான் மக்களைப் பின்பற்றுகிறேன். ஏனென்றால் நான் அவர்களின் தலைவன்” என்றார் ஒரு அரசியல் சிந்தனையாளர். எனவே மனிதத் தொடர்பு அறிவுத் திறன் கொண்ட நீங்களும் உங்களைச் சுற்றி உள்ளவர்களை வழிநடத்துவதற்கு முன்பு அவர்களைப் பின்பற்றத் தொடங்குங்கள்.


பன்முக அறிவுத் திறன்மனிதத் தொடர்பு அறிவுத்திறன்தீர்வு

You May Like

More From This Category

the-struggle-to-continue

தொடரும் போராட்டம்

இணைப்பிதழ்கள்

More From this Author