Published : 10 Feb 2015 03:42 PM
Last Updated : 10 Feb 2015 03:42 PM

தமிழகத்தில் முதன்முறையாக சூரிய மின்சக்திக்கு மாறும் ஆட்சியர் அலுவலகம்: ரூ. 90 லட்சத்தில் விரைவில் பணிகள்

தமிழகத்தில் முதன்முறையாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சூரிய மின்சக்தியின் மூலம் இயங்க உள்ளது. இதற்காக, ரூ. 90 லட்சம் செலவில் 100 கே.வி. திறன் கொண்ட சூரிய மின்சக்தி உபகரணங்கள் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பதில் அதிக சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதால் காற்றாலை, சூரிய மின்சக்தி போன்ற மரபுசாரா எரிசக்திக்கு மத்திய, மாநில அரசுகள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. குறிப்பாக சூரிய மின்சக்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சூரிய மின்சக்தி உபக ரணங்களை அமைப்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் அரசு அளித்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விரைவில் சூரிய மின்சக்திக்கு மாறவுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

`ஆட்சியர் அலுவலகத்துக்கு 2 மாதங் களுக்கு ஒருமுறை மின்சார கட்டணமாக ரூ. 1.40 லட்சம் செலுத்தப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பசுமை கட்டிடமாக மாற்றும் வகையில் சூரிய மின்சக்தி உபகரணங்கள் அமைக்கப்படவுள்ளன.

இதற்காக ரூ. 90 லட்சம் மதிப்பில் திட்டமதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டது. கொள்கை அடிப்படையில் இந்த திட்டத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. நிதி ஒதுக்கீடு செய்ததும் பணிகள் தொடங்கப்படும். இப்பணிகள் நிறைவுற்றால் தமிழகத்தில் சூரிய மின்சக் திக்கு மாறும் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக தூத்துக்குடி இருக்கும்.

கட்டிட மாடியில் சூரிய மின்சக்திக்கான தகடுகள் பொறுத்தப்படும். சூரிய மின்சக் தியை சேமித்து வைக்காமல், அப்படியே பகலில் பயன்படுத்தும் வகையில் இந்த திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இதற்காக 100 கே.வி. திறன் கொண்ட சூரிய மின்சக்தி நிலையம் அமைக்கப்படும்.

காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சூரிய மின்சக்தியை கொண்டு மின் விளக்கு உள்ளிட்ட அனைத்து மின்சாதனங்களும் இயக்கப்படும். இரவு நேரத்துக்கு தேவைப்படும் மின்சாரம் மின்வாரியத்திடம் பெறப்படும்.

மாவட்ட ஆட்சியர் அலு வலகத்துக்கு ஆண்டில் 110 நாட்கள் விடுமுறை. இந்த நாட்களிலும் சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

இரவு நேரத்தில் மின்வாரியத்திடம் இருந்து பெறப்படும் மின்சாரத்துக்கு ஈடாக, இந்த மின்சாரம் மின்தொகுப்புக்கு வழங்கப்படும்.

இத்திட்டச் செலவு ரூ. 90 லட்சம், மிச்சமாகும் மின் கட்டணம் மூலம் 4 ஆண்டுகளில் ஈடுசெய்யப்படும். மேலும், 25 ஆண்டுகளுக்கு இந்த உபகரணங்கள் எந்தவித பராமரிப்பு செலவும் இன்றி செயல்படும். இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசும் தடுக்கப்படும்’ என்றார் ஆட்சியர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x