Published : 12 Feb 2015 10:01 am

Updated : 12 Feb 2015 10:01 am

 

Published : 12 Feb 2015 10:01 AM
Last Updated : 12 Feb 2015 10:01 AM

2015: எந்த அளவுக்கு இந்தியா தயாராக உள்ளது?

2015

உலகக் கோப்பையை இந்தியா தக்கவைத்துக் கொள்ளுமா என்னும் கேள்வியும் ஏக்கமும் இந்திய ரசிகர்கள் மனங்களில் உள்ளன. இந்தியாவின் அதி தீவிர ஆதர வாளர்கூட இந்தியா வெல்லும் என்று சொல்லும் நிலையில் இன்றைய இந்திய அணி இல்லை என்பதே கசப்பான யதார்த்தம்.

இந்திய அணியைப் பீடித்தி ருக்கும் பிரச்சினைகளில் முதன்மை யானது உடல் தகுதி. ரோஹித் சர்மா, ஜடேஜா மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களான உமேஷ் யாதவ், ஷமி, மோஹித் சர்மா ஆகியோர் எப்போது வேண்டுமானாலும் காய மடையலாம் என்ற நிலையே உள்ளது.

இரண்டாவதாக, இந்திய பவுலிங். உயர் தரத்திலான போட்டி களுக்கு ஏற்ற பந்து வீச்சு இந்தியா விடத்தில் இல்லை என்பதே நிதர்சனம். அதுவும் வேகப்பந்துக்கு உகந்த ஆஸ்திரேலிய நியூஸிலாந்து களங்களில் இந்தியப் பந்து வீச்சு எடுபடுவதில்லை. அண்மைக் காலப் போட்டிகளில் இது மிகத் தெளிவாகத் தெரிகிறது.

மூன்றாவதாக மட்டையாட்டம். புகழ்பெற்ற பேட்டிங் அணியாகக் கருதப்படும் இந்தியா அதிலும் தொடர்ந்து தடுமாறிவருவது எப்படியென்று தெரியவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஷிகர் தவனின் ஆட்டம் ஓரளவுக்கு முன்னேறியது போல் தோன்றியது.

ஆனால் ஆப்கனுக்கு எதிரான 2-வது பயிற்சி ஆட்டத்தில் அவரது வழக்கமான பிரச்சினை தலைதூக்கியது. முன்னங்காலையும் நகர்த்தாமல், பின்னங்காலில் சென்று ஆடாமலும் நின்ற இடத்தில் இருந்துகொண்டே மட்டையைத் தொங்க விடுவதுதான் அவரது பிரச்சினை. அப்படித்தான் ஆப்கான் அணியின் ஹமித் ஹசன் பந்தில் பவுல்டு ஆனார்.

விராட் கோலியின் பேட்டிங்கை இந்தியா பெரிதும் நம்பியிருக்கிறது. ஆனால் அவரது ஆட்டமும் முத்தரப்பு ஒருநாள் தொடரிலும், 2 பயிற்சி ஆட்டங்களிலும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. ஆப்கன் அணிக்கு எதிராக அவரது ஆட்டம் மீண்டெழவில்லை என்பது கவலை தரும் செய்தி.

சுரேஷ் ரெய்னாவின் ஆட்டம் துணைக்கண்டத்துக்கு வெளியே வலுவான அணிகளுக்கு எதிராக எடுபட்டதில்லை. அந்த அவப் பெயரை அவர் இந்தத் தொடரில் போக்கிக்கொள்வாரா என்பதைப் பொறுத்துதான் இந்தியா ஆட்டங்களை வெற்றிகரமாக முடிக்க முடியும்.

மகேந்திர சிங் தோனியிடம் உள்ள மிகப் பெரிய பிரச்சினை அவர் பேட்டிங்கில் பந்துகளை அவற்றின் அளவுக்கு (Length) தகுந்தாற்போல் ஆடுவதில்லை. தொடக்க கட்டத்தில் அடிக்க வேண்டிய பந்தையும் அடிக்காமல் விட்டு, கடைசியில் விட்டதைப் பிடிப்பதற்காக அடிக்க முடியாத பந்துகளை ஆடி ஆட்டமிழக்கிறார். உயிர்ப்புள்ள ஆடுகளங்களில் ஆடுவதற்கேற்ப அவர் தன் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஆடுகளங்களின் வேகம், எகிறும் தன்மை ஆகியவைதான் இந்தியா வின் மிகப் பெரிய சவால்களாக இருக்கப்போகின்றன. இதுபோன்ற சூழலில் ஆடும் நுட்பமும் அனுபவமும் போதிய அளவு அணியில் இல்லை என்பது கவலை தரும் செய்தி. கோலி, ரோஹித், அஜிங்க்ய ரஹானே ஆகியோரின் ஆட்டம்தான் இந்தியாவின் ரன்களைத் தீர்மானிக்கக்கூடியவை.

இதே ஆடுகளங்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன் படுத்திக்கொள்ளக்கூடிய பந்து வீச்சாளர்கள் இப்போது இருப்ப தாகத் தெரியவில்லை. தென்னாப் பிரிக்காவில் ஜவகல் நாத், ஜாகீர் கான், ஆஷிஷ் நெஹ்ரா போன்றோர் கைகொடுத்தார்கள். இப்போது யார் அப்படிச் செய்யப்போகிறார்கள்? மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஜான்சன், டேல் ஸ்டெய்ன், மோர்னி மோர்கெல் போன்ற வீரர்களை ஒருநாளில் உருவாக்கிவிட முடியாது.

இரண்டு புதிய பந்துகள் ஒவ்வொரு முனையிலும் வீசப்பட வேண்டும் என்னும் புதிய விதிக்கும் இந்திய அணி முழுவதும் திட்டமிடவில்லை. கடந்த சில போட்டிகளிலேயே இதை நாம் பார்க்க நேரிட்டது.

இந்நிலையில் என்ன செய்ய லாம்? பந்து வீச்சாளர்கள் சாகசத்தில் இறங்காமல் கட்டுக்கோப்புடன் பந்து வீச வேண்டும். அளவிலும் வரிசையிலும் துல்லியம் கூட்ட வேண்டும். களத் தடுப்பில் மிகவும் கூர்மையாகச் செயல்பட வேண்டும். இவை சரியாக அமைந்தால் இந்தியாவால் போட்டியிடக்கூடிய நிலையை அடைய முடியும்.

அணித் தேர்விலும் தோனிக்கு இன்னமும் உறுதிப்பாடு ஏற்படவில்லை. ஆஸி, நியூஸிலாந்து ஆடுகளங்களில் ரவீந்திர ஜடேஜாவைப் போன்ற ஒரு வீரரின் பங்கு என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை. இந்திய அணித் தேர்வில் ஓரளவுக்கு அனுபவத்துக்கு இடமளித்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. வீரேந்திர சேவாக் போன்றோர் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். இலங்கையில் அதிரடி வீரர் ஜெயசூரியாவை கடைசி வரை வேறு விதங்களில் பயன்படுத்துவது பற்றி முயற்சிகள் மேற்கொண்டனர். அதேபோல் சேவாகை நடுக்களத்தில் களமிறக்கி, பந்து வீச்சில் பயன் படுத்தியிருக்கலாம். ஜடேஜா வுக்குப் பதிலாகவோ, ஸ்டூவர்ட் பின்னிக்கு பதிலாகவோ நிச்சயம் யுவராஜ் சிங் தேர்வு செய்யப்பட்டி ருக்க வேண்டும்.

அணித் தேர்விலிருந்து, ஆஸ்திரேலிய, நியூஸிலாந்து பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலைக்கான தயாரிப்பு இன்மை, மோசமான பந்து வீச்சு, பேட்டிங்கில் நிச்சயமின்மை, புதிய விதிகளுக்கு ஏற்ப தெளிவான திட்டமிடுதலின்மை, என்று இந்தியாவின் ‘இன்மை’கள் பட்டியல் நீளுகிறது.

ஆனால், இதையெல்லாம் மீறி, அடிலெய்டில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றுவிட்டால் இந்திய அணியின் தன்னம்பிக்கை எழுச்சி பெறும். ஆனால் அதைத் தொடர்ந்து தக்கவைக்கச் சீரான முறையில் திறமையை வெளிப்படுத்தப் போராட வேண்டும். ஒரு சிறிதும் அலட்சியத்துக்கு இடம் தரக் கூடாது.

‘தாவோ ஆஃப் கிரிக்கெட்’ என்ற நூலில் உளவியல் சிந்தனையாளர் ஆஷிஷ் நந்தி ஒரு விஷயத்தை முன் வைக்கிறார். நாம் ஒரு அணியினால் வீழ்த்தப்படுகிறோம். அது அந்த அணியின் தீவிர பயிற்சி மற்றும் முயற்சி மற்றும் திறமை.நமது திறமையின்மை, அலட்சியம், பயிற்சியின்மை என்பதை ஒப்புக்கொள்வதில்லை. பதிலாக, ஆடுகளம், விதிமுறைகள் என்று சாக்குப்போக்கு சொல்கிறோம்.

இதை அவர் இப்படிக் கூறுகிறார்: நாம் எப்போதும் பிறரால் வெற்றிக் கொள்ளப்படுவதோ, அல்லது பிறரால் தோற்கடிக்கப்படுவதோ இல்லை, தோற்கும் போது நாம் நம்மிடமே தோற்கிறோம், வெற்றி பெறும்போது நாம் நம்மையே வெற்றி கொள்கிறோம்.

இந்திய அணி என்ன செய்யப் போகிறது?

2015உலகக் கோப்பைகிரிக்கெட்இந்தியாஆஸ்திரேலியாபாகிஸ்தான்தோனி

You May Like

More From This Category

More From this Author