Published : 02 Feb 2015 11:07 AM
Last Updated : 02 Feb 2015 11:07 AM

அரசியல் சாசன முகவுரை மாற்றம் அவசியமில்லை: அமித் ஷா

'பாஜக அரசியல் சாசனத்தை மதிக்கிறது. விடுபட்ட இரண்டு வார்த்தைகளை வைத்து சர்ச்சைகளை ஏற்படுத்துவது அர்த்தமற்றது.'

சோஷலிசம், மதசார்பின்மை ஆகிய வார்த்தைகளை உள்ளடக்கிய திருத்தப்பட்ட இந்திய அரசியல் சாசனத்துக்கு பாரதிய ஜனதா கட்சி முழு மரியாதை அளிக்கிறது என்று அக்கட்சித் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

குடியரசு தினத்தையொட்டி மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் வெளியான விளம்பரத்தில் அரசியல் சாசனத்தின் முகப்புரை (Preamble) படம் இடம்பெற்றிருந்தது. இந்த முகப்புரை 42-வது அரசியல் சாசன திருத்தத்துக்கு முந்தையது என்பதால் அதில் மதசார்பற்ற, சோஷலிச என்ற வார்த்தைகள் இடம்பெறவில்லை. இந்த விளம்பரம் தொடர்பாக மத்திய அரசு, எதிர்க்கட்சிகளின் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக முதல் முறையாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தனது கருத்துகளை 'தி இந்து' ஆங்கில நாளிதழுடன் பிரத்யேகமாக பகிர்ந்து கொண்டுள்ளார்.

"பாஜக அரசியல் சாசனத்தை மதிக்கிறது. குடியரசு தின விழாவில் வைக்கப்பட்டிருந்த விளம்பரத்தில் விடுபட்ட இரண்டு வார்த்தைகளை வைத்து சர்ச்சைகளை ஏற்படுத்துவது அர்த்தமற்றது.

அந்த விளம்பரம் குடியரசு தின விழாவுக்காக வைக்கப்பட்டது. எனவேதான், இந்தியா குடியரசாக ஆனபோது இருந்த முகவுரை விளம்பரத்தில் இடம் பெற்றிருந்தது" என்று அமித் ஷா கூறினார்.

தொடர்ந்து, பாஜகவின் கொள்கைகள் குறித்த பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். 'கர் வாப்ஸி' குறித்து பேசுகையில், "சங் பரிவார் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் நடத்தப்படும் மறு மதமாற்ற நிகழ்ச்சிகள் குறித்த விமர்சனங்கள் திசை மாறிச் செல்கின்றன.

கட்டாய மதமாற்றத்தை தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என நாங்கள் கூறி வருகிறோம். ஆனால், மதசார்பற்ற கட்சி எனக் கூறிக் கொள்ளும் எந்த ஒரு கட்சியும் இது குறித்து வாய் திறக்க மறுக்கின்றன.

கட்டாய மதமாற்ற தடுப்புச் சட்டத்தை கொண்டு வருவது தொடர்பாக விவாதிக்க விரும்புகிறோம். 1950-க்குப் பிறகு இது தொடர்பாக விவாதிக்கப்படவில்லை. விவாதம் நடத்தி சட்டம் இயற்றப்பட வேண்டும் என விரும்புகிறோம்" என்றார்.

ஒட்டுமொத்த வளர்ச்சி என்ற கொள்கைகளில் இருந்து பாஜக விலகிச் செல்கிறதா? சமுதாயப் பிரச்சினைகளை முன் நிறுத்தி பிரித்தாளும் அரசியலை பாஜக செய்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமித் ஷா, "யாரோ சிலர் மறு மதமாற்றம், மதமாற்ற செயல்களில் ஈடுபட்டால் வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரமும், தண்ணீரும் தடைபடுமா? இல்லை தொழிற்சாலைகள் இயக்கம் முடக்கப்படுமா?" என வினவினார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா டெல்லியில் பேசுகையில் மதசார்புகளால் பிரிந்துகிடக்க அனுமதியளிக்காத வரை இந்தியாவின் வெற்றி நீளும் என கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "மத சுதந்திரம் அளிக்க வேண்டுமென இந்திய அரசியல் சாசனம் சொல்கிறது, இந்தியர்கள் நம் அனைவருக்கும் அது தெரியும், பாஜகவும் அதை பின்பற்றுகிறது. எனவே, ஒபாமா இந்தியாவில் மதப் பிரிவினைகள் இருப்பதாக கூறவில்லை. அவரது கருத்து பொதுவானது" என்றார்.

ஆனால் உங்கள் கட்சியில் பலரும் மதச்சார்புடைய கருத்துகளைத் தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கியுள்ளனரே? "அவர்கள் எல்லோருக்கும் தகுந்த எச்சரிக்கை வழங்கப்பட்டிருக்கிறது" என்று அமித் ஷா கூறினார்.

தமிழில்:பாரதி ஆனந்த்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x