Published : 02 Feb 2015 08:59 AM
Last Updated : 02 Feb 2015 08:59 AM

மின் வாரிய ஊழியர்களின் பிள்ளைகளுக்கு பொறியாளர், பட்டயப்படிப்பு பயிற்சி: உயரதிகாரிகளிடம் கடிதம் கொடுக்கலாம் என அறிவிப்பு

மின் வாரிய ஊழியர்களின் பிள்ளைகள் மின் வாரியத்தில் பொறியாளர் மற்றும் பட்டயப் படிப்புக்கான தொழிற்பயிற்சி பெற, ஆன் லைன் பதிவு மட்டுமின்றி, தனியாக இணைப்புக் கடிதம் கொடுக்கலாம் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் தென்மண்டல தொழிற்பயிற்சி மையத்தின் சார்பில், பொறியாளர், பட்டயப் படிப்பு முடித்தோருக்கான தொழிற் பயிற்சி நியமனங்களை வழங்கி வருகிறது. இவ்வாறு பயிற்சி பெறுவோரில் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.3,542, பட்டயப்படிப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ரூ.2,890, 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ரூ.2,758 ஊக்கத் தொகையாக வழங்கி வருகிறது.

இந்தப் பயிற்சி பெறுவதற்கு ஒவ்வொரு அரசு நிறுவனங்களும் முதலில் நேரடியாக தேர்வு நடத்தின. ஆனால் போட்டிகள் அதிகரித்த நிலையில் மத்திய அரசின் தென் மண்டல தொழிற் பயிற்சி மையம் சார்பில் நடத்தப்படுகிறது. இதிலும் அழைப்புக்கடிதம் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகப் புகார் எழுந்தது. அதனால், இணை யத்தில் அழைப்புக் கடிதம் பதிவிறக்கம் செய்ய வழி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, தற்போது தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தில் பயிற்சி பெற விண்ணப்பங்களை இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் இணையதளமான http://www.tangedco.gov.in என்பதிலும், தென்மண்டல தொழிற்பயிற்சி வாரியத்தின் இணையதளமான www.boat-srp.com என்பதிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலூர் மண்டலத்திலுள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங் களுக்கு பிப்ரவரி 2 முதல் 6 வரையிலும், மதுரை மண்டலத்தில் மதுரை, திண்டுக்கல், ராமநாத புரம், சிவகங்கை, தேனி மாவட்டங்களுக்கு பிப்ரவரி 16 முதல் 20 வரையிலும், அதே தேதியில் திருநெல்வேலி மண்டலத்துக்குட் பட்ட தூத்துக்குடி, விருது நகர், திருநெல்வேலி, கன்னியாகுமரிக்கும் தேர்வு நடக்கிறது.

விழுப்புரம் மண்டலத்தின் விழுப்புரம், கடலூர் மற்றும் பெரம்பலூர், அரியலூர் மாவட் டங்களின் ஒரு பகுதிக்கும், ஈரோடு மண்டலத்தின் நாமக்கல், ஈரோடு, சேலம், கோவை மண்டலத்தில் கோவை திருப்பூர், நீலகிரி ஆகியவற்றுக்கும் மார்ச் 2 முதல் 6 வரையிலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி மண்டலத்தின் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, கரூர், நாகை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள், நீர் மின் நிலைய, அனல் மின் நிலைய தொழிற்பயிற்சி பணிகளுக்கு மார்ச் 9 முதல் 13 வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் வாரிய ஊழியர்களின் பிள்ளைகள் இந்தப் பயிற்சி பெறுவதற்கு, இணையதள பதிவுடன், மின் வாரிய அலுவலகத்தில் தனியாக தங்கள் பிள்ளைகளின் பெயர் விவரங்களுடன், தனது பணி விவரங்களையும் சேர்த்து அளிக்க வேண்டும் என்று தமிழக மின் வாரியம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x