Published : 10 Feb 2015 03:09 PM
Last Updated : 10 Feb 2015 03:09 PM

ஸ்கோப் இல்லாமல் பார்க்க முடியுமா?: ஆங்கிலம் அறிவோமே - 44

ஒரு வாசகர் ‘இதிலே ஸ்கோப் இல்லை என்கிறார்கள். Microscope, telescope போன்ற வார்த்தைகளும் ஸ்கோப் என்றே முடிகின்றன. இதற்கென்று எதாவது அர்த்தம் உண்டா?’ என்று கேட்டிருக்கிறார்.

Scope என்றால் see என்று அர்த்தம். Microscope மூலம் நுண்ணுயிரிகளையும் பார்க்க முடியும். (Micro என்றால் சிறிய, macro என்றால் பெரிய). Telescope என்றால் தொலைதூரத்தில் இருப்பதைப் பார்க்க உதவும் கருவி. (Tele என்றால் தொலைவு அல்லது தூரம்).

இதுபோல் பல வார்த்தைகளில் இடம்பெறும் ஒரே பகுதி குறித்துப் பார்ப்போம்.

Pul என்றால் ஒருவித அவசரம். அதாவது urge.

Expulsion என்றால் ஒருவரை அவசரமாக வெளியேற்றுதல். Impulsive என்றால் ஒரு காரியத்தைச் செய்வதற்கான அங்கீகாரம். Compulsion என்றால் ஒருவித அவசரக் கட்டாயம்.

Rupt என்றால் உடைதல். அதாவது break.

Bankrupt என்றால் கடனாளிகளுக்குக் கடனைத் திருப்பிச் செலுத்தாததால் பொருளாதாரத்தில் உடைந்துவிட்ட நிலை.

Interrupt என்றால் பாதியில் உடைத்துக்கொண்டு உள்ளே நுழைதல். அது பேச்சின் நடுவில் புகுவதாகவும் இருக்கலாம்.

Rupture என்றால் ஏதோ ஒன்றில் உருவான உடைப்பு என்று பொருள்.

Scend என்றால் மேலே செல்லுதல் என்று பொருள். அதாவது climb.

Ascend என்றால் மேலேறுதல்.

Descend என்றால் கீழே ‘ஏறுதல்’, அதாவது இறங்குதல்.

Crescendo என்றால் இசையின் உச்சத்தை அடைதல். அதாவது, இசை என்ற இன்ப வெள்ளத்தில் உச்சத்தைத் தொடுதல்.

Sci என்றால் அறிதல். அதாவது know.

Science என்றால் அறிவியல்.

Conscience என்றால், எது சரி எது தவறு என்று பிரித்துப் பார்க்கும் அறிவு.

Conscious என்றால் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அறிதல். Unconscious என்றால் என்ன நடக்கிறது என்றே அறிந்து கொள்ளாத நிலை.

Omniscient என்றால் எல்லாவற்றையும் அறிந்திருப்பது என்று அர்த்தம்.

Soph என்றால் புத்திசாலித்தனமான, அதாவது wise.

Philosopher என்றால் வாழ்க்கையைப் புரிந்து விளக்கக்கூடிய புத்திசாலித்தனமான நபர்.

Sophisticated என்றால் உலக வழக்குகளைப் புரிந்துகொண்ட புத்திசாலித்தனத்தை, அது குறிக்கிறது.

ஆனால், Sophist என்பது தந்திரமான. குறுக்கு வழியில் வாதிடும் புத்திசாலியைக் குறிக்கிறது.

PRESENT PERFECT TENSE

I come. நான் வருகிறேன்

I came. நான் வந்தேன்

இந்த இரண்டு வாக்கியங்களையும் தெளிவாகவே புரிந்துகொள்ளக் கூடியவர்களில் சிலருக்கு, I have finished என்ற வாக்கியம் குழப்பத்தைத் தரக்கூடும்.

Have என்றால் present போல இருக்கிறது. Finished என்றால் அது past tense. இரண்டையும் சேர்த்து have finished என்றால், அது எதில் சேர்த்தி?

அதுதான் present perfect.

அதாவது நாம் பேசுகிற விஷயம் கடந்த காலத்தில் நடைபெற்றது என்றாலும், அதன் தாக்கம் இன்னமும் இருக்கிறது.

Present tense, past tense இரண்டுக்கும் நடுவில் உள்ள tense ஆக, present perfect tense-யைக் குறிப்பிடலாம்.

Listen! I have heard some important news. இப்படி நீங்கள் சொன்னால் நீங்கள் குறிப்பிடும் செய்தி காந்தி இறந்ததாக இருக்க முடியாது. காந்தி இறந்தது சந்தேகமில்லாமல் important news தான். ஆனால், ‘have heard’ என்ற present perfect tense, அது சமீபத்தில் கேள்விப்பட்ட ஒரு செய்தியாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

மிக சமீபத்தில் முடிவடைந்த ஒரு செயலைக் குறிப்பதற்கும் present perfect tense பயன்படுகிறது. She has just returned from New Delhi.

How long என்று தொடங்கும் கேள்விகளுக்கு, நாம் பெரும்பாலும் present perfect tense-யைப் பயன்படுத்துகிறோம். How long have you been in Chennai? I have lived in Chennai for the past 20 years.

Mutual Common Reciprocal

Mutual என்றால் ஒருவருக்கொருவர். உங்களுக்கும் எனக்குமிடையே Mutual affection இருக்கலாம். Mutual respect இருக்கலாம். ஆனால், யாரோ ஒருவரைக் காட்டி ‘இவர் நம்முடைய mutual friend’ என்று சொல்லக் கூடாது. நம் இருவருக்கும் அவர் நண்பர் என்றால்கூட, அவர் நம்முடைய common friend தான்.

Mutual feeling என்றாலும், Reciprocal feeling என்றாலும் ஒருவருக்கொருவர் தோன்றுகின்ற உணர்வுகளைத்தான், அவை குறிக்கின்றன. ஆனால், இதில் ஒரு நுட்பமான வேறுபாடு இருக்கிறது.

Since I lent money to you, I hope you will provide me mutual help. இந்த வாக்கியம் தவறானது. ஒரு நபர் மற்றவரிடம் Mutual help கேட்க முடியாது. Reciprocal help கேட்கலாம். இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வது mutual help. ஆனால் ‘நான் உனக்கு உதவினேனே, எனவே நீ எனக்கு உதவுவாய் என நம்புகிறேன்’ என்ற வாக்கியத்தில் நாம் எதிர்பார்ப்பது reciprocal help.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x