Published : 03 Feb 2015 10:21 AM
Last Updated : 03 Feb 2015 10:21 AM

வேலூர் மாவட்டத்தில் 8 பொது சுத்திகரிப்பு நிலையங்களில் ஆய்வு: ஆட்சியர் ஆர்.நந்தகோபால் தகவல்

வேலூர் மாவட்டத்தில் உள்ள 8 பொது சுத்திகரிப்பு நிலையங்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தோல் கழிவுகளின் பாதுகாப்பு குறித்து கோட்டாட்சியர் தலைமையில் ஆய்வு செய்யப்படும் என்று ஆட்சியர் ஆர்.நந்தகோபால் தெரி வித்தார்.

ராணிப்பேட்டை சிட்கோ தோல் கழிவு பொது சுத்திகரிப்பு நிலை யத்தில் உள்ள கழிவுநீர் தொட்டி கடந்த வெள்ளிக்கிழமை இரவு உடைந்தது. இந்த விபத்தில் 10 பேர் பலியாகினர்.

தோல் கழிவால் நச்சு வாயு பாதிப்புகளை சமாளிக்க தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அங்கு தயார் நிலையில் உள்ளனர். இதற்கிடையில், வேலூர் மாவட் டத்தில் ராணிப்பேட்டை, மேல் விஷாரம், பேரணாம்பட்டு, ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் உள்ள தோல் கழிவு பொது சுத்திகரிப்பு நிலையங்களில் லட்சக்கணக்கான டன் எடையுள்ள தோல் கழிவுகள் பாதுகாப்பற்ற முறையில் தேக்கி வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமுதாய இயக்கத்தின் செயலாளர் அசோகன் கூறும்போது, ‘‘ராணிப் பேட்டையில் தமிழக அரசால் மூடப்பட்ட குரோமியம் தொழிற் சாலையில் சுமார் 1.30 லட்சம் டன் குரோமியக் கழிவு உள்ளது. மாவட்டத்தில் உள்ள பொதுக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களில் பல ஆயிரம் டன் எடையுள்ள கழிவுகள் உள்ளன. இவற்றை அப்புறப்படுத்துவது எப்படி என்று தெரியாமல் மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் தோல் கழிவால் ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்க சுற்றுச்சூழல் மறு சீரமைப் புப் பணி தொடங்க வேண்டும் என கடந்த 2003-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மாவட்ட நிர் வாகம் இதுவரை நடைமுறைப் படுத்தவில்லை. மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியமே விபத்துக்கு காரணம்’’ என்றார்.

இதுதொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.நந்த கோபால் கூறும்போது, ‘வேலூர் மாவட்டத்தில் உள்ள 8 பொது சுத்திகரிப்பு நிலையங்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ள கழிவுகள் குறித்து கோட்டாட்சியர் ஆய்வு செய்வார். கழிவுகளை அகற்றுவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்’ என்றார்.

7,500 டன் தோல் கழிவை அகற்ற உத்தரவு

ராணிப்பேட்டை அருகே சிப்காட் வளாகத்தில் தேங்கியுள்ள சுமார் 7,500 டன் தோல் கழிவை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நேற்று 60 டன் கழிவு, 5 லாரிகளில் கும்மிடிப்பூண்டிக்கு அனுப்பப் பட்டது.

ராணிப்பேட்டை அருகே சிப்காட் வளாகத்தில் உடைந்த தோல் கழிவு தொட்டியில் இருந்து, சுமார் 80 ஆயிரம் கன அடி அபாயகரமான கழிவு வெளியேறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதை அகற்றும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது.

இதற்கிடையில், தொட்டியின் ஒரு பகுதியில் சுமார் 7 ஆயிரத்து 500 டன் தோல் கழிவு தேங்கி இருந்தது. முதல் கட்டமாக 5 லாரிகளில் சுமார் 60 டன் கழிவு பிரத்யேக லாரியில் பாதுகாப்பாக கும்மிடிப்பூண்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று முதல் 45 நாட்களில் தினமும் 150 முதல் 200 டன் கழிவை அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x