Published : 11 Feb 2015 12:31 PM
Last Updated : 11 Feb 2015 12:31 PM

சாய்ந்த கோபுரம் சரியாதே...

இத்தாலியில் உள்ள பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் பற்றிப் பாடப் புத்தகங்களில் படித்திருப்பீர்கள்.

சாய்வாக உள்ள அந்தக் கோபுரம் கீழே விழாமல் இருப்பது எப்படி?

இதற்கு ஒரு சிறு காரணம் உள்ளது. அதை ஒரு சோதனை மூலம் அறிவோமா?

தேவையான பொருள்கள்:

3 அங்குல நீள ஆணிகள் 20, சிறிய மரக்கடை, சுத்தியல்.

சோதனை:

1. ஒரு சிறிய மரக்கட்டையின் நடுவில் ஒரு ஆணியைச் சற்று சாய்வாக அடித்து நிறுத்துங்கள்.

2. சாய்வாக உள்ள ஆணியின் மீது 12 ஆணிகளை நிற்க வைக்க உங்களால் முடியுமா? முயன்று பார்ப்போமே. தரையில் ஓர் ஆணியைக் கிடைமட்டமாக வையுங்கள். அதன் மீது ஆணிகளின் தலைப்பகுதி மாறி மாறி படத்தில் காட்டியப்படி வையுங்கள்.

3. இப்போது மிகக் கவனமாக கிடைமட்டமாக உள்ள இரு ஆணிகளை மட்டும் பிடித்துக் கொண்டு ஆணித் தொகுதியைச் செங்குத்தாக நிற்கும் ஆணியின் தலை மீது மெதுவாக வையுங்கள்.

இறுதியாக ஓர் ஆணியின் தலை தரையில் இருக்கும் ஆணியின் கூர்முனைப் பக்கம் இருக்குமாறும், இணையாகவும் எல்லா ஆணிகள் மீதும் படுமாறும் மேலே வையுங்கள்.

இப்போது 12 ஆணிகளும் ஒரே ஆணி மீது கீழே விழாமல் நிற்பதைக் காணலாம். இதற்கு என்ன காரணம்?

நடப்பது என்ன?

புவியீர்ப்பு விசை எல்லாப் பொருள்களையும் கீழ் நோக்கி இழுக்கும் இல்லையா? ஒரு பொருள் எந்த நிலையில் இருந்தாலும் அதன் எடை முழுவதும் ஒரு புள்ளி வழியே செயல்படும்.

அந்தப் புள்ளி ஈர்ப்பு மையம் எனப் படித்திருக்கிறீர்கள் அல்லவா? ஒரு பொருளின் எடை ஈர்ப்பு மையத்தின் வழியே செயல்பட்டால் அது கீழே விழாமல் சம நிலையில் இருக்கும் என்பதும் உங்களுக்குத் தெரியும் இல்லையா?

நமது சோதனையில் ஆணிகளைச் சமச்சீராக இருபுறமும் அமைத்திருப்பதால் ஆணித் தொகுதியின் மையத்திலேயே ஈர்ப்பு மையமும் இருக்கும். இந்தப் புள்ளி செங்குத்து ஆணியின் தலை மீது சரியாக அமைவதால் ஆணிகள் கிடைமட்டமாகக் சம நிலையில் இருக்கின்றன.

மேலே உள்ள கிடைமட்ட ஆணி, பக்கவாட்டு ஆணிகள் கீழே விழாமல் தடுக்கிறது. ஆணிகள் சம நிலையில் கீழே விழாமல் இருக்க இதுவே காரணம். ஏதேனும் ஒரு முனையில் உள்ள ஆணியை எடுத்தாலோ அல்லது வைத்தாலோ என்ன நடக்கிறது என்பதை நீங்களே செய்துப் பாருங்கள்.

பயன்பாடு

ஒரு பொருளின் சமநிலைக்கு இரு நிபந்தனைகள் உள்ளன. பொருளின் ஈர்ப்பு மையம் தாழ்வாக இருக்க வேண்டும், ஈர்ப்பு மையத்தில் இருந்து வரையப்படும் செங்குத்துக் கோடு பொருளின் அடிப்பாகத்திற்குள்ளே அமைய வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனைகள்.

சாய்வான ஆணித் தொகுதியை பைசா நகரத்து சாய்ந்த கோபுரமாகக் கற்பனை செய்து கொள்ளுங்களேன். ஆணித் தொகுதியின் ஈர்ப்பு மையத்திலிருந்து வரையப்படும் செங்குத்து கோடு மரக் கட்டையின் அடிப்பரப்புக்குள்ளே விழுவதால்தான் ஆணிகள் கீழே விழாமல் சம நிலையில் இருக்கின்றன.

இதேபோன்று பைசா கோபுரம் சாய்ந்திருந்தாலும் அதன் ஈர்ப்பு மையத்திலிருந்து வரையப்படும் செங்குத்துக் கோடு கோபுரத்தின் அடிப்பரப்புக்குள்ளே விழுவதால் அது கீழே விழாமல் நிலையாக நிற்கிறது.

படங்கள்: அ.சுப்பையா பாண்டியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x