Published : 19 Feb 2015 08:02 PM
Last Updated : 19 Feb 2015 08:02 PM

’குடிமகன் என்ற வார்த்தைக்கு பேரவையில் தேமுதிக கடும் எதிர்ப்பு

அதிமுக உறுப்பினர் கூறிய 'குடிமகன்' என்ற வார்த்தைக்கு தேமுதிக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் சட்டப்பேரவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. அந்த வார்த்தையை அவைக் குறிப்பில் இருந்து நீக்க பேரவைத் தலைவர் மறுத்துவிட்டார்.

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கியது.

அதிமுக உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேசும்போது, "சட்டப்பேரவைக்கு வராதவர்கள் ஆளுநர் உரையில் எதுவும் இல்லை என்று குறைகூறுகின்றனர். அவர்களில் ஒரு முதியவரும் உண்டு. ஒரு சிட்டிசனும் இருக்கிறார். சிட்டிசன் என்றால் குடிமகன்'' என்றார்.

உடனே தேமுதிக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று குடிமகன் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர், பேரவைத் தலைவரை முற்றுகையிட்டு கூச்சலிட்டனர்.

அப்போது, பேரவைத் தலைவர் ப.தனபால், உங்கள் இடத்துக்கு போய் அமருங்கள் என்றார். அவை முன்னவர் நத்தம் விஸ்வநாதன் பேசும்போது, "உறுப்பினர் கடம்பூர் ராஜூ, யாரையும் குறிப்பிட்டுப் பேசவில்லை. யார் பெயரையும் அவர் சொல்லவில்லை. அதனால் அந்த வார்த்தைக்கு ஆட்சேபம் தெரிவிக்கத் தேவையில்லை" என்றார்.

பேரவைத் தலைவர், "யார் பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லாதபோது, நீங்களே (தேமுதிக உறுப்பினர்கள்) கற்பனையாக பொருள் கொள்ளக்கூடாது. அது முறையல்ல. நீங்கள் பேசுவது எதுவும் அவைக் குறிப்பில் இடம்பெறாது. உங்கள் இடத்துக்குப் போய் அமருங்கள். உறுப்பினர் ராஜூ யாரையும் குறிப்பிட்டுப் பேசாமல் பேச்சைத் தொடருங்கள்.

குடிமகன் என்ற வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது" என்று பேரவைத் தலைவர் திட்டவட்டமாக கூறியதையடுத்து 7 நிமிடங்களாக நீடித்த கூச்சல் குழப்பம் முடிவுக்கு வந்தது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x