Last Updated : 05 Feb, 2015 05:29 PM

 

Published : 05 Feb 2015 05:29 PM
Last Updated : 05 Feb 2015 05:29 PM

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை அடியோடு வேரறுக்க வேண்டும்- படுகொலையான விமானியின் தந்தை ஆதங்கம்

எனது மகனை உயிருடன் எரித்துக் கொன்ற கொடூர ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை ஜோர்டானும் அமெரிக்கப் படைகளும் இணைந்து அடியோடு வேரறுக்க வேண்டும் என்று உயிரிழந்த விமானி அல்-கசாபேவின் தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

பிணைக் கைதியாக பிடித்து வைத்திருந்த விமானி முவத் அல்-கசாபே (26) என்பவரை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் உயிருடன் எரித்துக் கொன்றனர். அந்த காட்சிகள் கொண்ட வீடியோவை ஐ.எஸ். அமைப்பு 3-ஆம் தேதி பகிரங்கமாக இணையதளத்தில் வெளியிட்டது. இந்த செயலுக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில் உயிரிழந்த விமானி கசாபேவின் தந்தை அல்-அரேபியா செய்தி தொலைக்காட்சியில் பேசும்போது, "ஜோர்டான் சிறையில் அடைக்கப்பட்ட ஐ.எஸ். பெண் தீவிரவாதி சாஜிதா அல் ரிஷாவி மற்றும் ஜியாத் கர்பவுலி ஆகியோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதோடு இது முடிந்துவிடக் கூடாது.

அந்த தீவிரவாத இயக்கத்தை அரசு பழித் தீர்க்க வேண்டும். ஐ.எஸ். அமைப்புக்கும் இஸ்லாமியத்துக்கு துளிக் கூட தொடர்பு இல்லை. ரத்தம் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த கொடுமையான அமைப்பை அதன் போக்கிலேயே பழித்தீர்க்க வேண்டும்" என்றார்.

ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுவரும் நாடுகளுள் ஜோர்டானும் ஒன்று. தாக்குதல் நடவடிக்கையின்போது ஜோர்டான் விமானம் ஒன்று சிரியாவில் நொறுங்கி விழுந்தது. அதில் உயிர் பிழைத்த விமானி முவத் அல் கசாபேவை தீவிரவாதிகள் கடத்தினர்.

இவரையும் ஜப்பான் பிணைக் கைதி ஒருவரையும் விடுவிக்க வேண்டுமானால் ஜோர்டான் சிறையில் உள்ள ரிஷாவியை விடுவிக்குமாறு கோரிக்கை வைத்தனர். இதனை ஜோர்டானும் பரிசீலித்து வந்த நிலையில், விமானியை உயிருடன் எரித்துக் கொன்ற காட்சிகள் அடங்கிய வீடியோவை இணையதளத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x