Published : 28 Feb 2015 07:54 PM
Last Updated : 28 Feb 2015 07:54 PM

மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை: ஜெயலலிதா

எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்வதாக மத்திய பட்ஜெட் இல்லை என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

மத்திய பட்ஜெட்டில்,செல்வ வரியை நீக்கிவிட்டு அதற்கு பதில் மிகப்பெரும் பணக்காரர்களுக்கு 2 சதவீத கூடுதல் வரி விதிக்க முடிவு செய்திருப்பது நடைமுறைக்கு ஏற்ற நடவடிக்கை ஆகும். இந்த கூடுதல் வரி, மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

எனது வேண்டுகோளை ஏற்று, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்ற அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உலக பாரம்பரிய சின்னங்களுக்கான நிதிஉதவி திட்டத்துக்கு தமிழகத்தில் உள்ள எந்தவொரு உலக கலாச்சார பாரம்பரிய சின்னங்களும் தேர்வு செய்யப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. மிகச்சிறிய நிதி நிறுவனங்களுக்கு மறுகடனுதவி அளிக்கும் வகையில் முத்ரா வங்கி தொடங்கப்படுவதை வரவேற்கிறேன். அதேபோல குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்காக வர்த்தக நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டமும் வரவேற்கத்தக்கது.

தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியம் அமைக்கப்படுவதையும் வரவேற்கிறேன். தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை நிறுவனம் உட்பட மாநில அரசுகளின் இதுபோன்ற நிதியங்களுக்கும் மத்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும். மதுரை - தூத்துக்குடி மற்றும் சென்னை - பெங்களூரு தொழில் போக்குவரத்து பாதை திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்க வேண்டும். சரக்கு சேவை வரியை அமல்படுத்துவதில் மாநிலங்கள் இடையே நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.

மருத்துவ காப்பீட்டு பிரிமீயத்துக்கு வருமான வரிச்சலுகை பெறுவதற்கான தொகையை ரூ.25 ஆயிரமாக உயர்த்திருப்பதும், அதேபோல, வருமான வரிச் சலுகை பெறுவதற்கு புதிய ஓய்வுதிய திட்ட சந்தா தொகையை ரூ.1.5 லட்சமாக அதிகரித்திருப்பதும் வரவேற்கத்தக்கது. கார்ப்பரேட் வரியை 4 ஆண்டுகளில் 25 சதவீதமாக குறைக்க திட்டமிட்டுள்ள நிலையில், தனிநபர் வருமான வரி உச்சவரம்பை உயர்த்துவது குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு ஏதும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. நமது நம்பிக்கைகளும், எதிர்பார்ப்புகளும் முழுமையாக பூர்த்திசெய்யப்படாத நிலையில், மத்திய பட்ஜெட் ஏமாற்றமாக அளிக்கிறது என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x