Last Updated : 13 Feb, 2015 09:37 AM

 

Published : 13 Feb 2015 09:37 AM
Last Updated : 13 Feb 2015 09:37 AM

இதுவரை நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் மும்முனை போட்டியில் மட்டுமே பாஜக வெற்றி: டெல்லி தேர்தல் முடிவில் வெளியான புதிய கோணம்

டெல்லியில் இதுவரை நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் நேரடிப் போட்டிகளில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதில்லை. மாறாக மும்முனை போட்டிகளில் மட்டுமே அக்கட்சி வெற்றி கொண்டிருப்பதாக ஒரு புதிய கோணத்தில் பார்க்கப்படுகிறது.

டெல்லியில் கடந்த 2013-ம் ஆண்டு காங்கிரஸ், பாஜக மற்றும் புதிய கட்சியான ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவியது. இதில் 32 தொகுதிகளுடன் பாஜக முதலிடம் பெற்றது. ஆனால் தற்போதைய தேர்தலில் காங்கிரஸ் வலுவிழந்து, பாஜக ஆம் ஆத்மி இடையே நேரடிப் போட்டி நிலவியதாக கூறப்பட்ட நிலையில், ஆம் ஆத்மி கட்சியை பாஜகவால் வெல்ல முடியவில்லை.

டெல்லி சட்டப்பேரவை தேர்தல்களில் இவ்வாறான நேரடிப் போட்டியில் பாஜக தோல்வி அடைவது இது புதிதல்ல. இதற்கு முன்பும் பலமுறை அவ்வாறு நடந்துள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் பாஜக மூத்த நிர்வாகிகள் சிலர் பகிர்ந்து கொண்ட தகவல்கள் வருமாறு:

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தலைநகரான டெல்லியில் சுமார் 37 ஆண்டுகள் குடியரசுத் தலைவரின் நிர்வாகத்தின் கீழ்தான் ஆட்சி நடைபெற்று வந்தது. பிறகு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டு டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் முதல் முறையாக 1993-ம் ஆண்டு நடைபெற்றது. அதில் காங்கிரஸ், பாஜக, ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவியது. டெல்லியின் 70 தொகுதிகளிலும் ஜனதா தளம் போட்டியிட்டது.

இதில் பாஜக 49 தொகுதிகளில் வெற்றி பெற்று டெல்லியில் முதல் ஆட்சியை அமைத்தது. இத்தேர்தலில் காங்கிரஸ் 14, ஜனதா தளம் 4, சுயேச்சைகள் 3 தொகுதிகளில் வென்றனர்.

இதற்கடுத்து 1998-ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸுடன் பாஜகவுக்கு நேரடிப்போட்டி ஏற்பட்டது. இதில் பாஜக 17 இடங்களுடன் படுதோல்வி அடைந்தது. காங்கிரஸ் 52 இடங்களில் வென்று டெல்லியில் முதன் முறையாக ஆட்சி அமைத்தது. இதில், ஜனதா தளத்துக்கு ஒரு தொகுதி மட்டுமே கிடைத்தது.

தொடர்ந்து 2003-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜக காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி நிலவியது. இதில் காங்கிரஸ் 47 இடங்களில் வென்று ஆட்சியை தொடர்ந்தது. இத்தேர்தலில் பாஜக 20, தேசியவாத காங்கிரஸ், மதசார் பற்ற ஜனதா தளம் மற்றும் சுயேச்சை தலா ஒரு தொகுதிகளில் வென்றனர்.

2008-ம் ஆண்டு 3-வது முறையாக வும் பாஜக காங்கிரஸ் இடையே நேரடிப்போட்டி நிலவியதில், காங்கிரஸ் 43 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு 23, மாயாவதியின் பகுஜன் சமாஜுக்கு 2, ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி மற்றும் சுயேச்சைக்கு தலா 1 என தொகுதிகள் கிடைத்தன.

எனவே டெல்லியில் வாக்குகள் பிரிந்தால் தவிர பாஜகவால் நேரடிப்போட்டியில் வெல்ல முடியாது என்ற கருத்து இந்த தேர்தலுடன் பதிவாகி விட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

1993-ல் பாஜக சார்பில் முதல்வராக பதவியேற்ற மதன்லால் குரானா சுமார் இரண்டரை ஆண்டுகள் பதவி வகித்தார். அவருக்குப் பின் சோஹிப்சிங் வர்மா முதல்வர் ஆனார். தேர்தல் நெருங்கும்போது அவரும் விலக்கப்பட்டு சுஷ்மா ஸ்வராஜ் முதல்வராக நியமிக்கப்பட்டார்.

பிறகு காங்கிரஸ் சார்பில் அமைந்த 3 ஆட்சிகளிலும் ஷீலா தீட்சித் முதல்வராக இருந்தார். இவருக்குப் பின் முதல்வரான ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கேஜ்ரிவால் நாளை மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x