Published : 03 Feb 2015 11:03 AM
Last Updated : 03 Feb 2015 11:03 AM

விமானம் தாமதமானால் சம்பளத்தில் பிடித்தம்: ஏர் இந்தியா ஊழியர்களுக்கு அரசு உத்தரவு

பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனங்களின் விமானங்கள் குறித்த நேரத்தில் இயக்கப்படுவதில்லை. இந்நிலையை மாற்றுவதற்காக விமானங்கள் இனி கால தாமதமாக புறப் பட்டாலோ அல்லது கால தாமதமாக சென்றடைந்தாலோ அதற்கு பொறுப்பானவர்களின் சம்பளம் பிடிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை விமான அமைச்சகத்தின் செயலர் வி சோமசுந்தரம் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு பைலட், விமான பணியாளர்கள், பொறியாளர்கள் ஆகியோருக்குப் பொருந்தும். விமானம் கால தாமதமாக புறப்படுவதில் பொறியாளர்களின் பங்கும் உள்ளது.

எனவே அவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். அத்துடன் விமானம் புறப்படுவதற்கு உறுதுணையாக இருக்கும் பணியாளர்கள், உணவு சப்ளை செய்வோர் ஆகியோருக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.

ஒரு வாரத்தில் சோமசுந்தரம் பிறப்பிக்கும் இரண்டாவது உத்தரவு இதுவாகும். விமானங்கள் புறப்படுவதில் கால தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க 800 விமான பணியாளர்களை பணியில் சேர்க்குமாறு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு கடந்த வாரம் அவர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

விமான பணியாளர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லாததும் விமானங்கள் புறப்படுவதில் கால தாமதம் ஏற்படுவதற்குக் காரணமாகும். விமானங்கள் உரிய நேரத்தில் புறப்படாமல் கால தாமதம் ஆவதால் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படுவதோடு பெயருக்கும் களங்கம் ஏற்படுவதாக சோம சுந்தரம் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

விமானம் கால தாமதமாவதற்கு எது காரணம் என்பதைத் தெரிவிக்குமாறு அவர் குறிப்பிட் டுள்ளார். விமான பணியாளர்கள், பைலட்டுகள், பொறியாளர்கள் மற்றும் கீழ்நிலை பணியாளர்களில் எவரேனும் கால தாமதமாக வந்தாலோ அல்லது விமானம் கால தாமதமானாலோ அவர்களது ஊதியத்தை பிடித்தம் செய்யலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

பயண தாமதத்தால் ஏற்பட்ட இழப்பு அவர்களிடமிருந்து வசூலிக் கப்படும் என்று செயல்பாட்டு பிரிவின் இயக்குநர் கேப்டன் ஏ.கே. கோவில் ஊழியர்களுக்கு விடுத்துள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இனிவரும் காலங்களில் கால தாமதத்துக்கான அபராதம் பிடித்தம் செய்யப்பட்டு அதன் பிறகே ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் இதே தவறு அடிக்கடி நிகழும் பட்சத்தில் அதற்குக் காரணமானவர்கள் மீது நிர்வாக ரீதியில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து ஊழியர்களின் வருகை பதிவை உறுதி செய்ய பயோமெட்ரிக் முறையைப் பின்பற்றுமாறு விமான அமைச்சக செயலர் அறிவுறுத்தியுள்ளார். அனைத்து விமான பணியாளர்கள் அதாவது பைலட், விமான பணியாளர்கள், பொறியாளர்களின் வருகை பதிவை இதன் மூலம் துல்லியமாக கணக்கிட முடியும் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

முதல் கட்டமாக டெல்லி, மும்பை விமான நிலையங்களில் பயோ மெட்ரிக் முறையிலான வருகைப் பதிவு முறை உடனடியாக அமல்படுத்தப்பட உள்ளது.

ஊழியர்கள் போதிய எண்ணிக் கையில் உரிய காலத்தில் தேர்வு செய்யாததற்கு அமைச்சர், செயலர், தலைவரின் ஊதியத்தை பிடித் தம் செய்யலாமா? என்று மூத்த பணியாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

முந்தைய காங்கிரஸ் அரசு செயல்பட்டதைப் போலத் தான் பாஜக அரசின் செயல்பாடும் உள்ளது. இதனால் பயணிகள் காத்திருப்பு முடிவில்லாததாக நீள்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x