Published : 25 Feb 2015 09:30 am

Updated : 25 Feb 2015 09:30 am

 

Published : 25 Feb 2015 09:30 AM
Last Updated : 25 Feb 2015 09:30 AM

இன்று அன்று | 1956 பிப்ரவரி 25: ஸ்டாலின் வழிபாட்டைத் தகர்த்து உரையாற்றினார் குருச்சேவ்!

1956-25

தங்களை முன்னிறுத்தும் விதமாக நடந்துகொள்ளும் அரசியல் தலைவர்கள், சமகாலத்திலோ அல்லது தங்கள் காலத்துக்குப் பின்னரோ விமர்சிக்கப்படுகின்றனர். அதற்கு உதாரணம் இந்த வரலாற்றுப் பதிவு. 1956-ல் இதே நாளில் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது மாநாட்டின் முடிவில் நடந்த கூட்டத்தில் தனிநபர் வழிபாட்டை ஊக்குவித்ததாக சோவியத் அதிபராக இருந்த ஜோசப் ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனத்தை வைத்தார், நிகிட்டா குருச்சேவ். கிட்டத்தட்ட ரகசியமாக நிகழ்த்தப்பட்ட உரை அது! கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்கள் மட்டும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

1937 முதல் 1938 வரையிலான காலகட்டத்தில் ‘கிரேட் பர்ஜ்’ எனும் பெயரில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், விவசாயிகள், செஞ்சேனைப் படையினர் அடக்குமுறைகளுக்கு ஆளான நிகழ்வைப் பற்றி விசாரிக்க, 1955-ல் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுள் ஒருவரான பியோத்தர் போஸ்பெலோவ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், குருச்சேவின் உரை அமைந்தது. ‘தனிநபர் வழிபாடும் அதன் விளைவுகளும்’ என்ற தலைப்பில் அவர் நிகழ்த்திய உரையின் சில பகுதிகள்:

தோழர்களே! கட்சியின் 20-வது மாநாட்டில் வெளியிடப்பட்ட மத்தியக் குழு அறிக்கையிலும், மாநாட்டில் பேசியவர்களின் உரைகளிலும் தனிநபர் வழிபாடுகுறித்து நிறைய கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. ஸ்டாலினின் மரணத்துக்குப் பிறகு, ‘ஒரு தனிநபரை அற்புத ஆற்றல்கள் நிறைந்த அசாதாரண மனிதராக முன்னிறுத்துவதும், கடவுளைப் போன்றவராகக் காட்டுவதும் மார்க்சிஸம் - லெனினிஸத்தின் ஆன்மாவுக்கு அந்நியமானது’ என்று மத்தியக் குழு விளக்கமளிக்கத் தொடங்கியது. அதாவது, எல்லாவற்றையும் அறிந்தவராக, அனைத்தையும் காணும் சக்தி படைத்தவராக, அனைவருக்காகவும் சிந்திப்பவராக, எதையும் செய்துகாட்டக் கூடியவராக, களங்கமற்ற நடத்தை கொண்டவராக, தனிநபரை முன்னிறுத்துவது பற்றி!

தற்சமயம், ஸ்டாலின் மீதான தனிநபர் வழிபாடு படிப்படியாக எப்படி வளர்கிறது, அந்தத் தனிநபர் வழிபாடு கட்சி விதிகளிலும், கட்சி ஜனநாயகத்திலும், புரட்சிகர சட்டதிட்டங்களிலும் வக்கிரத்தை விதைத்தது எப்படி எனும் கவலை நமக்கு இருக்கிறது. புரட்சியின் அறிவுஜீவியான விளாடிமிர் லெனினின் சிறந்த பண்பு பணிவு என்பது எல்லோரும் அறிந்ததே. மக்களின் பங்கேற்புதான் வரலாற்றை உருவாக்கும் என்பதை அவர் எப்போதும் வலியுறுத்தினார். தனிநபர் வழிபாட்டின் ஒவ்வொரு வெளிப்பாட்டையும் இரக்கமே இல்லாமல் நிராகரித்தார் லெனின். தனது கருத்தை ஒருபோதும் அவர் திணிக்கவில்லை. தனது கருத்து தொடர்பாக விளக்கம் அளிக்கவே முயல்வார். தனது கருத்துகளை, பொறுமையாக மற்றவர்களுக்கு விளக்குவார்.

ஸ்டாலினிடம் இருந்த தீய குணங்களை லெனின் கண்டுகொண்டார். பின்னாட்களில் ஸ்டாலினின் தீய குணங்களால் பயங்கரமான பின்விளைவுகள் ஏற்பட்டன. சோவியத் ஒன்றியத்தின் எதிர்காலம் பற்றி அச்சமடைந்த லெனின், கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து ஸ்டாலின் நீக்கப்பட வேண்டியதுகுறித்து பரிசீலிப்பது அவசியம் என்று குறிப்பிட்டார். ஏனெனில், கட்சியின் உறுப்பினர்களைச் சரியாக நடத்தும் குணம் ஸ்டாலினிடம் இல்லை என்று லெனின் கருதினார்…

- இப்படித் தொடரும் அந்த உரை மிகவும் புகழ்பெற்றது. 20-ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த உரைகளில் ஒன்றாக பிரிட்டனிலிருந்து வெளிவரும் ‘தி கார்டியன்’ இதழ் இதைத் தேர்வுசெய்திருக்கிறது.

ஸ்டாலின்ஸ்டாலினின் தீய குணங்கள்லெனின்

You May Like

More From This Category

More From this Author