Published : 21 Jan 2015 03:26 PM
Last Updated : 21 Jan 2015 03:26 PM

பிப்ரவரி 26-ல் ரயில்வே பட்ஜெட்; 28-ல் பொது பட்ஜெட் தாக்கல்: நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவில் முடிவு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் பிப்ரவரி 23-ல் தொடங்கி மே 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுதொடர் பாக, நாடாளுமன்ற விவகாரங் களுக்கான மத்திய அமைச்சரவை குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாடாளுமன்ற விவகாரங்களுக் கான அமைச்சரவை குழு நேற்று கூடியது. மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, அனந்த்குமார், ஸ்மிருதி இராணி, இணை அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் சந்தோஷ் கங்குவார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் எடுக்கப்பட்ட முடிவு களின்படி, பிப்ரவரி 23-ம் தேதி தொடங்க இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் மே 8-ம் தேதி வரை இருபாகங்களாக நடைபெற உள்ளது. பிப்ரவரி 26-ல் ரயில்வே பட்ஜெட்டும், 27-ல் பொருளாதார ஆய்வறிக்கை மற்றும் 28-ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும்.

இந்த தொடரில் ஒரு மாதம் மத்திய அமைச்சகங்கள் தம் துறைகளுக்கான நிதி குறித்து ஆலோசனை செய்ய இடைவெளி விடப்படுவதால், பிப்ரவரி 23-ல் தொடங்கும் கூட்டத்தொடர் மார்ச் 20 வரை முதல் கட்டமாக நடைபெறும். அடுத்து ஏப்ரல் 20-ம் தேதி கூடி, மே 8-ம் தேதி வரை இரண்டாம் கட்டமாக நடைபெற உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றுவார். இதற்கு நன்றி தெரிவித்து பிப்ரவரி 24 மற்றும் 25-ம் தேதிகளில் உறுப்பினர்கள் உரையாற்றுவார்கள். நன்றி தெரிவிக்கும் உரை இருநாட் களுக்குள் முடியாமல் போனால், கூட்டத்தொடரின் பின்வரும் நாட்களில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் அமர்வு தொடரும்.

நிலக்கரி, சுரங்கம் மற்றும் கனிமவளம், பேட்டரி ரிக்‌ஷா, நில ஆக்கிரமிப்பு, குடி உரிமை சட்டத்திருத்தம் மற்றும் காப்பீட்டுத்துறையில் நேரடி அந்நிய முதலீடு ஆகியவை தொடர்பாக மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டங்களை மசோதாவாக நிறைவேற்றுவது இந்த கூட்டத்தொடரின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும்.

இது குறித்து செய்தியாளர் களிடம் பேசிய மத்திய நாடாளு மன்ற விவகாரத்துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு, ‘கடந்த காலங்களில் ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அவசர சட்டங்களை முன்னிறுத்தி பேச இருக்கிறோம்’ என தெரிவித்தார்.

நாடாளுமன்ற விவகாரங் களுக்கான அமைச்சரவைக் குழுவின் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்த முடிவுகள், அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை செய்யப் படும். பின்னர் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கப்படும். அவர், இதுதொடர்பாக மக்களவைத் தலைவர் சுமித்ரா மஹாஜனுக்கு அறிவுறுத்தல் அளிப்பார். அதன் பிறகு முறையான அறிவிப்பு வெளியாகும்.

நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பின், முழு ஆண்டுக்கான பொது பட்ஜெட் முதல்முறையாக தாக்கல் செய்யப்படவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x