Published : 06 Jan 2015 03:07 PM
Last Updated : 06 Jan 2015 03:07 PM

உயிரியலிலும் உயர் மதிப்பெண்

பிளஸ் 2 தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களின் அதிகமாகப் பதைபதைக்கும் பாடம், உயிரியல்தான். இழக்க வாய்ப்புள்ள ஒற்றை மார்க்கூட, ஒருவரின் மருத்துவ மேல்படிப்பு கனவை இற்று போகச் செய்யலாம் என்பதே இதற்குக் காரணம்.

அதே வேளையில் சரியான திட்டமிடல் மற்றும் முயற்சிகள் வாயிலாக, பெற்றோரின் பல லட்சங்களை விழுங்கும் தனியார் மருத்துவக் கல்லூரிக்குப் பதிலாக அரசு ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்கவும் அதிகம் அடித்தளமிடும் பாடம் உயிரியல்தான்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த சுவாமி சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை தாவரவியல் ஆசிரியர் கே. ராஜேந்திரனும், ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி விலங்கியல் முதுநிலை ஆசிரியை ஆர். அருட்ஜோதி ஆகியோர் உயிரியல் பாடத் தயாரிப்புக்கான குறிப்புகளை வழங்குகிறார்கள்.

சராசரி மாணவர்களுக்கு

உயிரியலில் சராசரி மதிப்பெண்ணுடன் தேர்ச்சிக்கு முயலுபவர்களுக்கு விலங்கியலைவிட தாவரவியலே கைகொடுக்கும். தாவரவியல் மூலமே உயிரியல் தேர்ச்சியை முடிவு செய்யும் மாணவர்கள் அதிகம். இவர்கள், தாவரவியலில் 1 மற்றும் 5 ஆகிய 2 பாடங்களையும் முழுமையாகப் படிக்க வேண்டும்.

தாவரவியலில் மொத்தம் எழுத வேண்டிய 7 மூன்று மார்க் கேள்விகளில் முதல் பாடத்திலிருந்து 2, பாட எண் 5-லிருந்து 3 என 5 கேள்விகளை எதிர்பார்க்கலாம். முதல் பாடத்திலிருந்தே 5 மார்க் கட்டாய வினா இடம்பெறும். மேலும் பாட எண் 2, 3லிருந்து படம் வரைவது சார்ந்த தலா ஒரு 3 மார்க் கேள்வி இடம்பெறும்.

புத்தகப் பின்பகுதி வினாக்கள் மற்றும் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் ஆகியவற்றில் உரிய திருப்புதல் மேற்கொண்டாலே 14 ஒரு மார்க் கேள்விகளில் 10-க்கு பதிலளிக்கலாம். செய்முறை தேர்வுக்கான வினாக்களில் கூடுதல் கவனம் செலுத்தினால், அவற்றிலிருந்தே 6 சோதனைகள் தொடர்பான வினாக்களில் ஒரு 5 மார்க் நிச்சயம் வரும். விலங்கியலைப் பொறுத்தவரை சராசரி மாணவர்கள் 2,3,4 ஆகிய பாடங்களைப் படித்தால் மட்டுமே சராசரி மதிப்பெண்களை எட்டலாம்.

1+3 தயாரிப்பு

தொடர்புபடுத்திப் படிப்பதும் ஒப்பிட்டுப் படிப்பதும் குழப்பத்தைத் தவிர்க்கும். உதாரணத்துக்கு அப்ஜெக்டிவ் டைப் 1 மார்க் கேள்விகளைப் படிக்கும்போது, சரியான 1 விடை தவிர்த்து இதர 3 விடைகளுக்கும் உரிய கேள்விகளை உருவாக்கிப் படிக்க வேண்டும்.

இந்த வகையில் ஒரே நேரத்தில் 4 ஒரு மார்க் கேள்விகளுக்குத் திருப்புதல் மேற்கொள்ளலாம். அதேபோல ஒரு 10 மார்க் கேள்விக்குத் தயாராகும்போது அதில் 3 அல்லது 4 மூன்று மார்க் கேள்விக்கான பதில்கள் உள்ளடங்கி இருக்கும். அவற்றையும் கவனத்தில்கொண்டு படிப்பது சிறப்பான தயாரிப்பாக அமையும்.

ஒரு மார்க் அள்ள

பொதுவாகப் பாடங்களில் தடித்த எழுத்துகளில் இடம்பெறுவதை மையமாகக் கொண்டு 1 மார்க் தயாரிப்பை மேற்கொண்டால், பாடத்தின் உள்ளிருந்து கேட்கப்படும் கேள்விகளை எளிதாக எதிர்கொள்ளலாம். தாவரவியலில் வருடங்கள் மற்றும் குரோமோசோம் எண்ணிக்கை தொடர்பான ஒரு 1 மார்க் கேள்வியும், அறிவியல் அறிஞர் அவரது நாடு மற்றும் எழுதிய புத்தகம் இவற்றிலிருந்து 1 ஒரு மார்க்கும் நிச்சயம் வரும்.

இவற்றில் தவறுகளைத் தவிர்க்கப் பாடங்களில் இருந்து தகவல்களை ஒரு தொகுப்பாக உருவாக்கித் திருப்புதல் மேற்கொள்ளலாம். 6-வது பாடத்திலிருந்து 2 ஒரு மார்க் கேள்விகள் அடிக்கடி கேட்கப்படுவதால், அவற்றுக்குக் கூடுதல் கவனம் தரவேண்டும். தாவரவியல் புத்தகத்தின் கடைசி 5 பக்கங்களின் பொருளாதார முக்கியத்துவம் என்ற தலைப்பிலிருந்து ஒரு 1 மார்க் நிச்சயம் வரும்.

பொதுவாகப் பாடங்களில் தடித்த எழுத்துகளில் இடம்பெறுவதை மையமாகக் கொண்டு 1 மார்க் தயாரிப்பை மேற்கொண்டால், பாடத்தின் உள்ளிருந்து கேட்கப்படும் கேள்விகளை எளிதாக எதிர்கொள்ளலாம். தாவரவியலில் வருடங்கள் மற்றும் குரோமோசோம் எண்ணிக்கை தொடர்பான ஒரு 1 மார்க் கேள்வியும், அறிவியல் அறிஞர் அவரது நாடு மற்றும் எழுதிய புத்தகம் இவற்றிலிருந்து 1 ஒரு மார்க்கும் நிச்சயம் வரும். இவற்றில் தவறுகளைத் தவிர்க்கப் பாடங்களில் இருந்து தகவல்களை ஒரு தொகுப்பாக உருவாக்கித் திருப்புதல் மேற்கொள்ளலாம்.

6-வது பாடத்திலிருந்து 2 ஒரு மார்க் கேள்விகள் அடிக்கடி கேட்கப்படுவதால், அவற்றுக்குக் கூடுதல் கவனம் தரவேண்டும். தாவரவியல் புத்தகத்தின் கடைசி 5 பக்கங்களின் பொருளாதார முக்கியத்துவம் என்ற தலைப்பிலிருந்து ஒரு 1 மார்க் நிச்சயம் வரும்.

விலங்கியலில் 1 மார்க்கைப் பொறுத்தவரை 7 பாடங்களையும் படித்தாக வேண்டும். 16 கேள்விகளில் 4 முதல் 6 ஒரு மார்க் மட்டுமே புத்தக வினாக்களில் இருந்து வரும். இதர கேள்விகள் புத்தகத்தின் உள்ளிருந்தே இடம்பெறும்.

குழப்பம் தவிர்ப்போம்

உயிரியலில், ஒரு தேர்வு 2 விடைத்தாள்கள் என்பதிலேயே சிலருக்குப் பதட்டம் இருக்கும். தாவரவியலில் 7 மூன்று மார்க், 4 ஐந்து மார்க் வினாக்கள் இடம்பெறும். இதுவே விலங்கியலில் 8 மற்றும் 3 என அமையும். இந்தச் சாய்ஸ் வினாக்களின் எண்ணிக்கையில் அவசரத்தில் மறந்து, இரண்டுக்குமிடையே சிலர் மாற்றி எழுதிவிடுவார்கள். இந்தத் தடுமாற்றத்தைப் புரிந்துகொண்டு, விழிப்புணர்வுடன் அவற்றைத் தவிர்க்கலாம்.

தேர்வறையில் வழங்கப்படும் வினாத்தாள் வாசிப்பதற்கான நேரத்தை முழுமையாகப் பயன்படுத்தி, குழப்பம் மற்றும் நேர விரயத்துக்கு வாய்ப்பில்லாத கேள்விகளைத் தேர்வு செய்வது ஒரு கலை. திருப்புதல் தேர்வுகளில் இதிலும் உரிய பயிற்சி பெறுவது நல்லது.

தாவரவியல் பாட எண்-5ல் ’எலெக்ட்ரான் கடத்து சங்கிலி’ வினாவை அது தொடர்பான பிற வினாக்களுடன் மாணவர்கள் குழப்பிக் கொள்வார்கள். 3 மார்க்கில் இரு சொல் பெயரிடும் முறை, பல சொல் பெயரிடும் முறை ஆகியவற்றின் பதில்களை மாற்றி எழுதும் குழப்பமும் இதில் சேரும்.

முதல் பாடத்தில் இடம்பெறும் 4 குடும்பங்கள் தொடர்பான 10 மார்க் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், ஒரு பாயிண்ட் குறைவாக எழுதுவதைவிட, குடும்பங்கள் இடையேயான பாயிண்ட்களை மாற்றி எழுதுவதால் மார்க் இழப்பு ஏற்படும். அதேபோலப் படங்களை வரையும்போது ஒன்றிரண்டு பாகங்கள் குறிக்காது விட்டால்கூடப் பிரச்சினையில்லை. ஆனால், தவறாகக் குறிப்பதோ அல்லது கோடிட்டுவிட்டு அது குறித்து எழுதாமல் விடுவதோ நிச்சயம் மதிப்பெண் இழப்பை ஏற்படுத்தும்.

தாவரவியல் முதல் பாடத்தில் பொருளாதார முக்கியத்துவம் தலைப்பின் கீழ் விடையளிக்கையில் தாவரவியல் பெயர் மறந்தாலோ, குழம்பினாலோ வட்டாரப் பெயர்களை எழுதி மதிப்பெண் இழப்பைத் தவிர்க்கலாம்.

நேர விரயம் தவிர்க்க

படம் வரைவதில் அதிக நேர விரயமாவதைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாகத் தாவரவியலில் குடும்பங்கள் தொடர்பான கேள்விக்கு மலரின் வரைபடம் வரைந்தால் போதும். அது தொடர்பான ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை வரைந்து நேரத்தை வீணாக்கத் தேவையில்லை. 5 மார்க்கைப் பொறுத்தவரை படம் உண்டென்றால், வினாவில் கேட்காவிட்டாலும் வரைந்தாக வேண்டும். 3 மார்க்கில் படம் குறித்துக் கேட்டால் மட்டுமே படம் வரைய வேண்டும்.

’விவரி, என்றால் என்ன?, குறிப்பு வரைக...’ ஆகிய கேள்விகளுக்கு மட்டுமே வாக்கியங்களில் விடையளிக்கலாம். மற்றபடி கேட்ட கேள்விக்கான பதில் என்னவோ, அதை ஒரு சில வார்த்தைகளில் எழுதி முடிப்பது நேர விரயத்தைத் தவிர்க்கும். தாவரவியல், விலங்கியல் பெயர்களைப் படிப்பதோடு எழுதியும் பார்க்க வேண்டும்.

ஒப்பீட்டளவில் தாவரவியல் எளிது என்பதால், அதை விரைவாக முடித்துவிட்டு மிச்சமாகும் நேரத்தை விலங்கியலுக்கு அளிக்கலாம். ஆனால், திருப்புதல் தேர்வுகளில் இதைத் தவிர்த்துவிட்டு 1.30 மணி நேரத்தில் விலங்கியலை முடிக்க முயற்சிக்கலாம். 1 மற்றும் 3 மார்க்குக்கு அரை மணி நேரம், 5 மற்றும் 10 மார்க் பகுதிகளுக்குத் தலா அரை மணி நேரம் எனப் பயிற்சியில் முயற்சிக்க வேண்டும்.

(அடுத்த வாரம் நிறைவடையும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x