Published : 30 Jan 2015 10:01 am

Updated : 30 Jan 2015 10:01 am

 

Published : 30 Jan 2015 10:01 AM
Last Updated : 30 Jan 2015 10:01 AM

1992: வண்ணமயமான உலகக் கோப்பை

1992

உலகக் கோப்பை கிரிக் கெட்டை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் சென்ற தொடர் என்றால், 1992-ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பைத் தொடர்தான் அது. ஆஸ்திரேலியா - நியூசிலாந்தில் நடைபெற்ற இந்த உலகக் கோப்பைத் தொடர் ரசிகர்களுக்குப் புதிய விருந்து படைத்தது என்றுகூடச் சொல்லலாம். வெள்ளை உடையில் ஒரு நாள் போட்டிகளை விளையாடிய வீரர்கள் வண்ண உடைகளுக்கு மாறினார்கள்.

அழகான மைதானங்கள், வெள்ளைப் பந்து, பகல்-இரவு ஆட்டங்கள், கறுப்புத் திரைகள், ரீப்ளே காட்டும் போர்டுகள், ஸ்டெம்ப் விஷன், புதிய கிரிக்கெட் விதிமுறை எனப் புதிய பரிணாமம் பெற்றிருந்தது இந்தத் தொடர்.

ஒன்பது அணிகள்

1975-ம் ஆண்டு முதல் 1987-ம் ஆண்டு வரை நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் 8 அணிகளே பங்கு பெற்றன. முதல் முறையாக இந்தத் தொடரில் 9 அணிகள் களம் கண்டன. புதிய அணியாகத் தென்னாப்பிரிக்கா அறிமுகமானது. இனவெறிக் கொள்கை காரணமாக சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சிலில் இருந்து விலக்கப்பட்ட தென்னாப்பிரிக்கா 1991-ம் ஆண்டு மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இதனால் தென்னாப்பிரிக்காவுக்கு வாய்ப்பு கிடைத்தது.

இதற்கு முந்தைய உலகக் கோப்பைத் தொடர்களில் அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. ஆனால் இந்த உலகக் கோப்பையில் அணிகள் பிரிக்கப்படவில்லை. 9 அணிகளை இரண்டாகப் பிரிக்க முடியவில்லை. எனவே எல்லா அணிகளும் ஒவ்வொரு அணியு டனும் மோதுவதுபோல அட்ட வணையை மாற்றியமைத் தார்கள். (1992-ம் ஆண்டு மட்டுமே இப்படி ஒரு முறை பின்பற்றப்பட்டது. அதன் பிறகு இப்போது வரை அணிகள் பிரிவுகளாகவே பிரிக்கப்படுகின்றன).

சச்சின் அறிமுகம்

இந்திய அணியைப் பொறுத்த வரை அனுபவமும் இளமையும் கலந்த அணியாகவே காட்சி யளித்தது. 1987-ம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடிய வீரர்களில் கபில்தேவ், அசாருதீன், காந்த், மனோஜ் பிரபாகர், கிரண் மோரே, ரவிசாஸ்திரி ஆகியோர் மட்டுமே 1992 உலகக் கோப்பையில் இடம் பெற்றிருந்தார்கள். இந்த உலகக் கோப்பைத் தொடர்தான் சச்சின் டெண்டுல்கர் விளையாடிய முதல் தொடர்.

சச்சின் டெண்டுல்கர் போலவே விநோத் காம்ப்ளி, அஜய் ஜடேஜா, ஜவகல் ஸ்ரீநாத், பிரையன் லாரா, ஜாண்டி ரோட்ஸ், இன்சமாம்-உல்-ஹக் ஆகியோருக்கும் இது முதல் உலகக் கோப்பையாக அமைந்தது. 1996-ம் ஆண்டு உலகக் கோப்பையில் சூறாவளி மட்டையாளராக உருவெடுத்த இலங்கையின் சனத் ஜெயசூர்யா இந்தத் தொடரில் சுழற்பந்து வீச்சாளராக அறிமுகமானார்.

1983-ம் ஆண்டில் உலகக் கோப்பையை வென்று, 1987-ம் ஆண்டு அரையிறுதி வரை அணியை வழிநடத்திச் சென்ற கபில் தேவ் இந்தத் தொடரில் சாதாரண வீரராக அணியில் இடம் பெற்றார். தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பியதால் ஸ்ரீகாந்த், 1989-ம் ஆண்டு அணியிலிருந்து விலக்கப்பட்டிருந்தார்.

உலகக் கோப்பையில் அவர் ஆடுவாரா என்னும் சந்தேகமும் இருந்தது. தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கி அதிரடியாக விளையாடும் ஸ்ரீகாந்த் போன்ற வீரர்கள் தேவை என அணி நிர்வாகம் கருதியதால் அவர் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இரண்டு ஆண்டுகள் கழித்து அணிக்குத் திரும்பினார்.

இப்போது ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக அங்கு டெஸ்ட், முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாட இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்தி ருக்கிறது அல்லவா? அது போலவே 1992-லும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது 5 டெஸ்ட் போட்டிகள், முத்தரப்பு தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.

அதனால் அங்குள்ள சூழ்நிலைக்கு நன்றாகப் பழகிய இந்தியா உலகக் கோப்பையில் நன்றாக விளையாடும் என்றும் கோப்பையையும் வெல்லக்கூடும் என்றும் பரவலாகக் கூறப்பட்டது. ஆனால், நடந்தது வேறு கதை. ஆட்டங்கள் போன போக்கில் எந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்பதைக்கூட யாராலும் கணிக்க முடியவில்லை.

ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி

இந்தத் தொடரின் முதல் போட்டியில் இருந்தே சுவாரஸ்யம் தொற்றிக்கொண்டது. உலக சாம்பியன் என்ற அந்தஸ்தோடு உள்ளூரில் தெம்பாகக் களமிறங்கிய ஆஸ்திரேலியா செமத்தியாக அடி வாங்கியது. ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் அணித் தலைவர் மார்டின் குரோ 100 ரன்கள் விளாசினார். பதிலடியாக ஆஸ்திரேலியாவின் டேவிட் பூன் 100 ரன்கள் விளாசினார். ஆனால், மற்ற வீரர்கள் சோபிக்காததால் ஆஸ்திரேலியா அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்தது.

புதுமை உத்தி

முதல் முறையாக இந்தத் தொடரில் நியூசிலாந்து கேப்டன் மார்டின் குரோ தொடக்க ஓவரை சுழற்பந்து வீச்சாளரைக் கொண்டு வீசச் செய்தார். நியூசிலாந்தின் தீபக் பட்டேல் முதல் ஓவரை வீசினார். பிற அணிகள் இதை எதிர்பார்க்கவில்லை. ரன் எடுக்க முடியாமல் திணறினார்கள்.

உலகக் கோப்பைத் தொடரில் அதிரடியாக விளையாடிய நியூசிலாந்தின் மார்க் கிரேட்பாட்ச் முதலில் அணியிலேயே சேர்க்கப்படவில்லை. முதல் இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் தொடக்க வீரரான ஜான் ரைட்டுக்கு காயம் ஏற்பட்டது. அவருக்குப் பதிலாக கிரேட்பாட்ச் இடம் பெற்றார். தொடக்க வீரராகக் களமிறங்கிய அவர், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பீல்டிங் கட்டுப்பாடு விதிகளைப் பயன்படுத்தி அதிரடியாக விளையாடினார். அது அந்த அணிக்குப் பெரும் பலனைக் கொடுத்தது.

ஒரு வீரர்; இரு அணி

இந்த உலகக் கோப்பைத் தொடரில் தென் ஆப்பிரிக்க அணித் தலைவராக கெப்ளர் வெசல்ஸ் இருந்தார். தென் ஆப்பிரிக்க அணிக்கு விதிக்கப்பட்ட தடை நீங்குவதற்கு முன்பு வரை ஆஸ்திரேலிய அணி சார்பில் பல போட்டிகளில் பங்கேற்றவர் இவர். அதுமட்டுமல்ல, 1983-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரிலும் ஆஸ்திரேலிய அணியில் இவர் இடம் பெற்றிருந்தார்.

இதன் பின்பு தென் ஆப்பிரிக்க அணிக்குத் திரும்பிய வெசல்ஸ், அந்த அணிக்குத் தலைவராக இருந்தார். இதன் மூலம், ஒரே வீரர் இரண்டு உலகக் கோப்பையில் வெவ்வேறு அணிக்காக விளையாடிய வீரர் என்ற சிறப்பைப் பெற்றார் கெப்ளர் வெசல்ஸ்

(நினைவலைகள் தொடரும்)


இந்திய உலகக் கோப்பைசாதனைஇந்தியாஆஸ்திரேலியாவரலாறுகிரிக்கெட்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author