Last Updated : 13 Jan, 2015 12:31 PM

 

Published : 13 Jan 2015 12:31 PM
Last Updated : 13 Jan 2015 12:31 PM

நபிகள் நாயகம் கருத்துச் சித்திரத்துடன் மீண்டும் வெளியானது சார்லி ஹெப்டோ



தாக்குதலுக்குப் பிந்தைய முதல் பதிப்பில், நபிகள் நாயகத்தைச் சித்தரிக்கும் கருத்துச் சித்திரம் இடம்பெற்ற அட்டைப் படத்துடன், பிரான்ஸின் பிரபல அங்கதப் பத்திரிகையான சார்லி ஹெப்டோ மீண்டும் வெளியாகிறது.

இந்தப் பத்திரிகையின் சிறப்புப் பதிப்பு மற்ற மொழிகளிலும் அச்சிடப்படப்பட்டுள்ளது. பல்வேறு மொழிகளில் சார்லி ஹெப்டோவின் முதல் பதிப்பை வெளியிட பிரான்ஸின் 'விடுதலை பத்திரிகை' இயக்கமும் உதவிபுரிந்துள்ளது.

சார்லி ஹெப்டோவின் அட்டைப் படத்தில் நபிகள் நாயகத்தை சித்தரித்து அவரது கையில் 'Je suis Charlie' (நான்தான் சார்லி) என்ற வாசகம் கொண்ட பதாகை இருக்கும்படியாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கருத்துச் சித்திரத்தின் தலைப்பில் 'Tout est Pardonne' (எல்லாம் மன்னித்தாகவிட்டது) என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

இன்று வெளியாகியுள்ள சார்லி ஹெப்டோவின் அட்டைப்படத்தை பிரான்ஸின் விடுதலை இயக்கம் பிரத்யேகமாக திங்கள்கிழமை இரவே வெளியிட்டது.

இது குறித்து சார்லி ஹெப்டோ பத்திரிகையின் சட்ட நிபுணர் ரிச்சர்ட் மால்கா கூறும்போது, "சார்லி ஹெப்டோவில் இன்று நபிகள் நாயகத்தின் கருத்துச் சித்திரம் இடம்பெற வேண்டியது இன்றியமையாதது. இது அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்டதுதான்" என்றார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் செயல்படும் சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தில் கடந்த 7-ம் தேதி புகுந்த இரண்டு தீவிரவாதிகள் பத்திரிகையில் ஆசிரியர், கார்டூனிஸ்ட் என 12 பேரை சுட்டுக் கொன்றனர். அதைத் தொடர்ந்து பல்பொருள் அங்காடியில் புகுந்து பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த 4 பேரையும் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அதில், தாக்குதல் நடத்திய 2 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பாரீஸ் நகரில் 3 நாட்களாக தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் உலக நாடுகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கடந்த 2011-ம் ஆண்டு முகமது நபியைப் பற்றிய ஒரு கட்டுரையை வெளியிட்டதாக இதே பத்திரிகை அலுவலகத்தின் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x