Published : 28 Jan 2015 10:43 AM
Last Updated : 28 Jan 2015 10:43 AM

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: மார்க்சிஸ்ட் கட்சிக்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு?

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவளிக்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக அக்கட்சியின் திருச்சி மாவட்டச் செயலாளர் க.அண்ணாதுரை நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவைக் கோருவோம் என்று கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த பாராளுமன்ற தேர்தல் வரை திமுக அணியில் இடம்பெற்றிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்த இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் வேட்பாளரை ஆதரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஜி.ராமகிருஷ்ணன் திருமாவளவன் சந்திப்புக்குப் பிறகு இதுபற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதுபற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் கேட்டபோது, “ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக எங்கள் கட்சியின் நிர்வாகிகள் கூடி விவாதித்துத்தான் முடிவெடுக்க வேண்டும். வெளியூர் சுற்றுப்பயணம் காரணமாக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்ட முடியவில்லை. நிர்வாகிகள் கூட்டத்துக்குப் பின் விரைவில் எங்கள் முடிவு அறிவிக்கப்படும்” என்றார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் இதுபற்றி கூறும்போது, “ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் எங்கள் வேட்பாளருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் ஆதரவு கேட்டிருந்தோம். அவர்கள் செவ்வாய்க்கிழமை எங்களை சந்திப்பதாக கூறியிருந்தார்கள். இதுவரை அவர்களிடமிருந்து பதில் வரவில்லை. அவர்கள் முடிவை விரைவில் தெரியப் படுத்துவார்கள் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x