Published : 08 Jan 2015 10:19 AM
Last Updated : 08 Jan 2015 10:19 AM

கர்நாடக போலீஸார் முன்னிலையில் நித்யானந்தா ஆசிரம பெண் பக்தர் சங்கீதாவின் உடல் மறு பிரேத பரிசோதனை

திருச்சி மாவட்டம் ராம்ஜி நகர் அருகே நவலூர் குட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்த அர்ச்சுனன் மகள் சங்கீதா(24), கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் அமைந்துள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் சேர்ந்து அங்கேயே தங்கி பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சங்கீதாவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து இருப்பதாகவும், பிறகு அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் திருச்சியில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பெங்களூரு சென்ற சங்கீதாவின் பெற்றோர், மகளின் உடலைப் பெற்று திருச்சிக்கு கொண்டு வந்து டிசம்பர் 30-ம் தேதி அடக்கம் செய்தனர். இறுதிச்சடங்குகள் செய்தபோது சங்கீதாவின் உடலின் நிறம் மாறுபட்டு இருந்ததைக் கவனித்த அவரது உறவினர்கள் சங்கீதா மாரடைப்பால் இறந்திருக்க வாய்ப்பில்லை என சந்தேகித்தனர்.

பின்னர், மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் சங்கீதாவின் தாய் ஜான்சிராணி புகார் செய்தார். சம்பவம் நடந்த இடம் பெங்களூரு என்பதால் அங்கு சென்று புகார் அளிக்க திருச்சி போலீஸார் அறிவுறுத்தினர்.

இதையடுத்து கர்நாடக மாநிலம் ராமநகர் டவுனில் உள்ள போலீஸ் சூப்பிரண்ட் அலுவலகத்துக்கு கடந்த 3-ம் தேதி சென்ற சங்கீதாவின் பெற்றோர், போலீஸ் சூப்பிரண்ட் சந்திரகுப்தாவை சந்தித்து அளித்த புகார் மனுவில், தங்களின் மகள் சங்கீதா சாவில் சந்தேகம் இருப்பதாகவும், மறு பிரேத பரிசோதனை செய்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதி காவல் நிலைய உதவி ஆய்வாளர் டி.என்.லோகித் மற்றும் 2 காவலர்கள் நேற்று முன்தினம் திருச்சி வந்தனர். திருச்சியில் புதைக்கப்பட்டுள்ள சங்கீதாவின் உடலைத் தோண்டியெடுக்க முறைப்படி அனுமதி பெறும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ரங்கம் கோட்டாட்சியர் மனோகர், வட்டாட்சியர் காதர் முகைதீன், ராம்ஜி நகர் காவல் ஆய்வாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலையில் நேற்று மதியம் சங்கீதாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. புதைக்கப்பட்டு 5 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் சரவணன் தலைமையிலான குழுவினர் நவலூர் குட்டப்பட்டு இடுகாட்டுக்குச் சென்று அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர்.

மேலும், நவலூர் குட்டப்பட்டு சென்று சங்கீதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கர்நாடக மாநில போலீஸார் விசாரணை நடத்தினர். மறு பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே சங்கீதாவின் இறப்பில் எழுந்துள்ள சந்தேகம் விலகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x