Published : 08 Jan 2015 03:09 PM
Last Updated : 08 Jan 2015 03:09 PM

தாயகத்தில் வாய்ப்புகளை பயன்படுத்துவீர்: வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் மோடி பேச்சு

"இந்தியாவில் உங்களுக்காக ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. நீங்கள் அவற்றை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்" என்று குஜராத்தில் நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய நூற்றாண்டு விழாவை ஒட்டி குஜராத் மாநிலம் காந்திநகரில் 13-வது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியது:

"இந்தியாவில் உங்களுக்காக ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை பெரிய எதிர்பார்ப்புடன் உற்று நோக்கி வருகிறது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய நமக்கு தேவைப்படுவது நம்பிக்கை.

வெளிநாட்டில் வசிக்கும் ஒவ்வொரு இந்தியரையும் இந்நாட்டின் மூலதனமாகவே நான் கருதுகிறேன். இந்தியாவில் வியத்தகு மாற்றத்தை கொண்டுவர உங்களால் முடியும். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சிறந்த முதலீட்டு வாய்ப்பாக இந்தியா உள்ளது.

இந்தியாவில் முதலீடு செய்யும் அனைவருக்கும் ஒரே விதமான சலுகைகள் நிச்சயமாகக் கிடைக்கும். முதலீடுகளில் மட்டுமே அரசு கவனம் செலுத்தவில்லை. நீங்கள் உங்கள் தாய்நாட்டிற்காக எத்தகைய சேவையையும் நல்கலாம்.

2001-ல் குஜராத்தை உலுக்கிய பூகம்பத்தையடுத்து ஆப்பிரிக்காவில் வசித்த இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர் கட்ச் மாவட்டத்தில் பல மாதங்கள் தங்கியிருந்து சேவை செய்ததை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு காலத்தில் நீங்கள் வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாட்டிற்குச் சென்றிருக்கலாம். ஆனால் இப்போது இந்தியா வலுவடைந்துவிட்டது. இந்தியாவில் உங்களுக்காக ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. நீங்கள் அவற்றை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்” என்றார் மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x