Published : 21 Jan 2015 12:12 PM
Last Updated : 21 Jan 2015 12:12 PM

புதிய உச்சத்தில் பங்குச்சந்தை 8700 புள்ளிகளை கடந்தது நிப்டி

ஐரோப்பிய மத்திய வங்கி மேலும் ஊக்க நடவடிக்கைகள் கொடுக்கும் என்ற காரணத்தால் நேற்றைய வர்த்தகத்தின் இடையே இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன. மேலும் சீனாவின் வளர்ச்சியும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது.

வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 28829 என்னும் புதிய உச்சத்தை தொட்டது. இதே போல நிப்டியும் 8707 என்னும் புதிய உச்சத்தை தொட்டது. 8700 புள்ளிகளை நிப்டி கடப்பது இதுதான் முதல் முறையாகும்.

தொடர்ந்து நான்காவது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்து முடிந்தன. வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 522 புள்ளிகள் உயர்ந்து 28727 புள்ளியிலும், நிப்டி 144 புள்ளிகள் உயர்ந்து 8695 புள்ளியிலும் முடிந்தது. முக்கிய குறியீடுகள் இரண்டு சதவீத அளவுக்கு உயர்ந்திருந்தாலும் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் இந்த அளவுக்கு உயரவில்லை. இவை 0.3 சதவீத அளவுக்கே உயர்ந்தன.

திங்கள் கிழமை வர்த்தகத்தில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 433 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்திருந்தார்கள்.

கன்ஸ்யூமர் டியூரபிள் மற்றும் பவர் துறை குறியீடுகளை தவிர மற்ற அனைத்து துறை குறியீடுகளும் உயர்ந்தே முடிவ டைந்தன. குறிப்பாக மெட்டல் குறியீடு அதிகபட்சமாக 3.03 சதவீதம் உயர்ந்தது.

கன்ஸ்யூமர் டியூரபிள் குறியீடு 6 புள்ளிகளும் மின் துறை குறியீடு 0.36 புள்ளிகளும் சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் பங்குகளில் ஹெச்டிஎப்சி, எஸ்.எஸ்.எல்.டி, டாடா ஸ்டீல், ஆக்ஸிஸ் வங்கி மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவை உயர்ந்தும், கெயில், டாடா பவர், டாக்டர் ரெட்டீஸ், மாருதி சுசூகி, ஹீரோமோட்டோ கார்ப் ஆகிய பங்குகள் சரிந்து முடிவடைந்தன.

பங்குச்சந்தை உயர்வின் காரணமாக 90க்கும் மேற்பட்ட பங்குகள் தங்களுடைய 52 வார உச்சபட்ச விலையை தொட்டன. இதில் யெஸ் வங்கி,ஹெச்டிஎப்சி, ஐடிஎப்சி, அம்புஜா சிமென்ட் ஆகிய பங்குகளும் அடக்கம்.

யாரும் எதிர்பார்க்காத விதமாக ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு செய்தது. ஆனால் இந்த வட்டி குறைப்பின் தாக்கம் கடன் வளர்ச்சி விகிதத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான பிட்ச் தெரிவித்திருக்கிறது. ஆனாலும், இந்த வட்டி குறைப்பினால் ஏற்கெனவே கடன் வாங்கி இருக்கும் நிறுவனங்களுக்கு சில சலுகைகள் கிடைக்கும்.

அதே சமயம் நீண்ட கால அடிப்படையில் பார்க்கும் போது இந்த வட்டி குறைப்பு சில சாதகமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் பிட்ச் தெரிவித்துள்ளது. பணவீக்கம் குறைவது, கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட பொருட்களின் விலை குறைந்து வரும் காரணத் தால் வருங்காலத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x