Published : 07 Sep 2014 02:30 PM
Last Updated : 07 Sep 2014 02:30 PM

திருநெல்வேலியில் கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி

திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக பழைய கட்டிடம் இடிக்கும் பணியின் போது, கட்டிடம் இடிந்து விழுந்ததில், 3 பேர் பலியாகினர். 4 பேர் காயமடைந்தனர்.

செங்கோட்டை பஸ் நிலையம் அருகே நகராட்சி வணிக வளாக கட்டிடம் உள்ளது. 35 ஆண்டுகள் பழமையான இக்கட்டிடத்தின் தரைத்தளத்தில் 5 கடைகள் வாடகைக்கு விடப்பட்டிருந்தன.

இடிக்கும் பணி

முதல் தளத்தில் தங்கும் அறைகள் இருந்தன. இந்த கட்டிடம் சேதம் அடைந்திருந்ததை தொடர்ந்து, கட்டிடத்தை இடித்து அகற்றி புதிய கட்டிடம் கட்ட நகராட்சி முடிவு செய்து, கடந்த 50 நாட்களாக பணிகள் நடைபெற்றது.

சனிக்கிழமை செங்கோட்டை மேலூர் கதிரவன் காலனியைச் சேர்ந்த நடராஜன் மகன் முத்துக்குமார் (27), கிருஷ்ணன் மகன் ராஜ்குமார் (30), கருப்பையா மகன் கணபதி என்ற பாலையா (29) ஆகியோர் உள்ளிட்ட 7 தொழிலாளர்கள் கட்டிடம் இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மாலை 5.30 மணியளவில் கட்டிடத்தின் கான்கிரீட் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில், முத்துக்குமார், ராஜ்குமார், கணபதி ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தனர். மற்ற 4 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

கண்டித்து மறியல்

நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், பலியானவர்களின் உடல்களை எடுக்கவிடாமல் தடுத்து, செங்கோட்டை- தென்காசி சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். ‘பலியான தொழிலாளர் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்’ என்று வலியுறுத்தினர்.

மறியலில் ஈடுபட்டவர்களுடன் நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி அதிகாரி கள், போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இரவு 7.30 மணிக்கு மேலும் மறியல் தொடர்ந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

‘பழமையான கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு தலைகவசம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை. மேலும், ஜேசிபி மூலம் கட்டிடங்களை இடித்திருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது’ என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

செங்கோட்டை நகராட்சி வணிக வளாக கட்டிடம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x