Published : 26 Sep 2014 09:02 AM
Last Updated : 26 Sep 2014 09:02 AM

அண்ணி பிறந்த நாள் விழாவில் கதறி அழுதார் எம்.ஏ.எம்.ராமசாமி

அண்ணியின் பிறந்த நாள் விழாவில் தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி கதறி அழுததைப் பார்த்து விழாவுக்கு வந்திருந்த அவரது உறவினர்கள் கலங்கிப் போனார்கள்.

தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமிக்கும் அவரது வளர்ப்பு மகன் ஐயப்பன் என்ற முத்தையாவுக்கும் இடையே மனக்கசப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், கடந்த 6-ம் தேதி நடைபெற்ற தனது அண்ணன் முத்தையா செட்டியார் பிறந்த நாள் நினைவு பரிசளிப்பு விழாவை எம்.ஏ.எம். புறக்கணித்தார். அவரது அண்ணி குமாரராணி மீனா முத்தையாவும் விழாவுக்கு வரவில்லை.

எம்.ஏ.எம்-மின் வளர்ப்பு மகன் ஐயப்பன் என்ற முத்தையாதான் நடு நாயகமாக இருந்து அந்த விழாவை நடத்தினார். இதனால், அந்த விழாவை செட்டியார் சமூகத்து முக்கிய வி.ஐ.பி-க்கள் பலரும் எம்.ஏ.எம். விசுவாசி களும் புறக்கணித்து விட்டனர். இந்நிலையில், குமாரராணி மீனா முத்தையாவின் 81-வது பிறந்த நாள் விழா மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் எம்.ஏ.எம்.மும் முத்தையாவும் கலந்து கொண்டனர்.

விழாவின்போது அண்ணியை வாழ்த்திப் பேசிய எம்.ஏ.எம்.ராமசாமி, ’’நான் நிறைய பேசணும்னு நினைக்கிறேன். ஆனா, இப்ப சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியா இல்லை. இருந்தாலும் பேச வேண்டிய கடமை எனக்கு இருக்கு. நான் பேசியே ஆகணும். குமாரராணிக்கு 81 வயது ஆகிவிட்டது என்பதை என்னால் நம்ப முடியல. எனது உயிருள்ள வரை எனது அண்ணனின் பேருக்கும் புகழுக்கும் களங்கம் வர விடமாட்டேன். என் உயிருள்ளவரை குமார ராணிக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்வேன்’’ என்று சொல்லிவிட்டு குலுங்கி அழுதார்.

இதைப் பார்த்துவிட்டுப் பதறிப் போன அவரது உறவினர்களும் அருகி லிருந்த ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல கிருஷ்ணன் உள்ளிட்டவர்களும் அவரை சமாதானப்படுத்தினர்.

இதனிடையே, செட்டிநாட்டு அரண் மனைக்குள் எம்.ஏ.எம்.ராமசாமிக்கு ஏற்பட்டிருக்கும் சங்கடங்களைக் கேள்விப்பட்ட முன்னாள், இந்நாள் நீதிபதிகள், பிரபலமான வழக்கறிஞர் கள், தொழிலதிபர்கள் என பலரும் அவரை வந்து சந்தித்து தைரியம் கொடுத்திருக்கிறார்களாம்.

இதனால் தெம்பாகி இருக்கும் எம்.ஏ.எம். அடுத்த கட்டமாக சில முக்கிய நடவடிக்கைகளை எடுக்கத் தயாராகி வருவதாகச் சொல்லப்படு கிறது. அதேசமயம், “முத்தையாவை சுவீகாரம் எடுத்ததை ரத்து செய்து விடுங்கள். எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வாகிவிடும்’’ என நெருக்கமான வட்டத்தினர் சொன்ன யோசனைக்கு இதுவரை அவர் எந்த ரியாக் ஷனும் காட்டவில்லை என்கிறார்கள்.

இதனிடையே ராஜா சர் அண்ணா மலைச் செட்டியார் நினைவு அறக்கட்ட ளையில் செயலாளர் பொறுப்பிலிருந்து ஏ.ஆர்.ராமசாமி விலக்கப்பட்ட விவகாரமும் சர்ச்சையாகி இருக்கிறது. இதுகுறித்து ’தி இந்து’விடம் பேசிய அரண்மனைக்கு நெருக்கமான வட்டத்தினர் கூறியதாவது: செட்டிநாடு அரண்மனை சம்பந்தப்பட்ட முக்கியத் தகவல்கள் எப்படியோ வெளியில் கசிவதாக சந்தேகப்பட்டார் முத்தையா. எம்.ஏ.எம்-முக்கு உதவியாளராக இருப்பவர் ராஜேந்திரன். இவரையும் எம்.ஏ.எம்-மின் நெருங்கிய நண்பர் தேவகோட்டை ஆர்.எம்.லெட்சுமணன் செட்டியாரையும் அரண்மனைக்குள் வரக்கூடாது என்று கண்டிஷன் போட்டார் முத்தையா. இதற்கு எம்.ஏ.எம். ஒத்துக்கொள்ளவில்லை. அதிலிருந்தே பிரச்சினை வலுக்க ஆரம்பித்துவிட்டது.

அண்ணாமலைச் செட்டியார் அறக் கட்டளைச் செயலாளராக இருந்த ஏ.ஆர்.ராமசாமி, மூன்று தலைமுறை யாக அரண்மனை ஊழியராக இருந்தவர். அரண்மனைச் சொத்துகள் எங்கெல்லாம் இருக்கின்றன என்ற விவரம் எம்.ஏ.எம்-மைக் காட்டிலும் ஏ.ஆர்.ராமசாமிக்குத்தான் அத்துபடி. அந்த விவரங்களை எழுதி வாங்கிக் கொண்டு கழற்றி விட்டிருக்கிறார்கள்’’ என்று சொன்னார்கள்.

தமிழிசைச் சங்க பொதுக்குழு கூட் டத்துக்காக 28-ம் தேதி இரவு மதுரை செல்கிறார் எம்.ஏ.எம். அங்கு அவர் முக்கிய முடிவுகளை எடுக்கலாம் என்று விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x