Published : 19 Sep 2014 13:43 pm

Updated : 19 Sep 2014 13:43 pm

 

Published : 19 Sep 2014 01:43 PM
Last Updated : 19 Sep 2014 01:43 PM

தொழில்நுட்பம்: லட்டை விழுங்கிய கடோத்கஜன்

கதையோ, பாடலோ இல்லாமல் தமிழ் சினிமா வரலாம். ஆனால் கிராஃபிக்ஸ் இல்லாமல் இன்று தமிழ் சினிமா இல்லை. இயக்குநர் ஷங்கரின் படத்தில்தான் கிராஃபிக்ஸ் இருக்கும் என்ற நிலைமை மாறிவிட்டது. இன்று வெளியாகும் அனைத்துப் படங்களின் தலைப்புகளும் கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படுவதால், கோடம்பாக்கத்துத் தெருக்களில் ‘டைட்டில் கிராஃபிக்ஸ்’ என்ற வார்த்தை சகஜமாகப் புழங்குவதைக் கேட்கலாம்.

இல்லாத ஒன்றை அல்லது நிஜத்தில் கேமரா முன்பு நிகழாத அல்லது நிகழ முடியாத ஒன்றை நிஜம்போலச் சித்தரித்துக் காட்டி, சினிமா ரசிகர்களை வாய்பிளக்க வைக்கின்றன கிராஃபிக்ஸ் காட்சிகள். எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராயைக் கடித்த கொசுவுக்கும் அதைத் துரத்திப் பிடிக்கும் சிட்டி ரோபோவுக்கும் உயிர் கொடுத்தவை கம்ப்யூட்டர் மென்பொருட்கள் உதவியுடன் உருவான கிராஃபிக்ஸ்தான். சமந்தாவை அடைய அவரது காதலன் நானியை வில்லன் சுதீப் கொன்றுபோட, அவர் ஈ அவதாரம் எடுத்துவந்து வில்லனைப் பழிவாங்குவதும் கிராஃபிக்ஸ் மிரட்டல்தான்.


இவை கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டவை என்பதைப் பார்த்ததும் தெரிந்துகொள்கிறோம். “கிராஃபிக்ஸ் மிரட்டிட்டான்ப்பா!” என்று வியந்துபோகிறோம். ஆனால் ‘ராஜா ராணி’ படத்தில் ஐஸ் க்ரீம் வாங்கிக் கொண்டு திரும்பிவரும் நஸ்ரியா காரில் மோதி இறக்கும் விபத்துக் காட்சி கண்டிப்பாக உங்களை உறைய வைத்திருக்கும். அந்தக் காட்சியில் கிராஃபிக்ஸ் செய்யப்பட்டதை உங்களால் கண்டுபிடிக்க முடிந்ததா?!

விஷுவல் எஃபெக்ட்ஸ் என்ற மிகப் பெரிய துறையாக இன்று வளர்ந்து நிற்கும் தொழில்நுட்பத்தில் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் ஒரு சின்ன ஏரியா மட்டும்தான். ஒவ்வொன்றையும் தனித் தனியாக நோட்டம் விடலாம். விஷுவல் எஃபெக்ட்களை எப்படி உருவாக்குகிறார்கள் என்று தெரிந்துகொள்ள அவை உருவாகும் ‘லேப்’களுக்கு ஸ்பாட் விசிட்டும் அடிக்கலாம். ஆனால் அதற்கு முன்பு, கம்ப்யூட்டர் கண்டுபிடிக்கப்படாத காலத்திலேயே நமது பாட்டன்கள் விஷுவல் எஃபெக்ட்ஸில் எப்படிக் கலக்கியிருக்கிறார்கள் தெரியுமா?

லட்டை விழுங்கிய கடோத்கஜன்

சென்னையில் விஜயா - வாகினி என்ற புகழ்பெற்ற ஸ்டூடியோவை உருவாக்கிய பி. நாகிரெட்டி தயாரிப்பில், கே.வி. ரெட்டி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவான படம் ‘மாயா பஜார்’. 1957 ஏப்ரலில் வெளியான இந்தப் படம் மகாபாரதத்தின் கிளைக்கதை ஒன்றைத் தழுவி எடுக்கப்பட்டது.

இந்தப் படத்தைப் பார்க்காதவர்களிடம்கூட ‘கல்யாண சமையல் சாதம்’ பாடலை இரண்டு வரிகள் பாடினால் “ஓ அந்தப் படமா?” என்று ஆச்சரியப்படுவார்கள். அந்த அளவுக்கு அந்தப் பாடலில் இடம்பெற்ற மாயாஜாலக் காட்சிகள் பட்டிதொட்டியெங்கும் பிரபலம். நீங்கள் இதுவரை பார்க்காத நவயுகவாசி என்றால் ஒரு சிங்கிள் ‘ஜெல்லி பீன்’ தொடுதலில் உங்கள் ஸ்மார்ட் போன் மூலம் யுடியூபில் பார்த்து ஆச்சரியப்படுங்கள்.

அந்தப் பாடலில் “ஹா…ஹா… ஹா..” என்ற கனத்த சிரிப்பொலியுடன் கடோத்கஜன் என்ற அரக்கனாக நடித்திருப்பார் எஸ்.வி. ரங்கா ராவ். கருப்பு வெள்ளை காலத்தின் பணக்காரக் கதாநாயகியின் கண்டிப்பான அப்பா, பண்ணையார் என்று கலக்கினாரே அதே ரங்காராவ்தான். கல்யாண சமையல் சாதம் பாடலில் ரங்கா ராவின் கையசைப்பிற்கு விருந்து உணவுகள் சமைத்து வைக்கப்பட்ட அண்டா, குண்டா உள்ளிட்ட உணவுப் பாத்திரங்கள் வரிசையாக அவர் அருகில் ஓடி வரும். பருமனான உடலுடன் இருக்கும் அவர், மொத்த விருந்தையும் சாப்பிடுவதற்காகத் தன் உருவத்தைப் பல மடங்கு பெரிதாக்கிக்கொள்வார். பெரிய தாம்பூலத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான லட்டுகள் புவியீர்ப்பு விசையை எதிர்த்து மேலெழுந்து அவர் வாய்க்குள் போய் வரிசையாக நுழையும். இந்தக் காட்சிகளை பார்த்து விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டே வியந்து ரசித்தார்கள்.

கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் வளர்ச்சியுறாத அந்தக் கால கட்டத்தில் இவற்றை எப்படிச் சாத்தியப்படுத்தினார்கள்? கேமரா நகர்வுகள், கேமரா லென்ஸுகள் மற்றும் ஆப்டிகல் முறை ஆகிய தொழில்நுட்பங்களை மட்டுமே பயன்படுத்தி, காகிதத்தில் எழுதிய கற்பனையைக் காட்சியில் சாத்தியப்படுத்தினார்கள்.

கல்யாண வீட்டின் மொத்த விருந்தையும் கடோத்கஜன் ஸ்வாகா செய்யும் அந்தக் காட்சிகள் உருவான விதத்தை அடுத்த வாரம் பார்க்கலாம்.

ஷங்கர்கிராஃபிக்ஸ்லட்டுரஜினிகடேத்கஜன்எந்திரன்

You May Like

More From This Category

More From this Author