Published : 03 Sep 2014 05:13 PM
Last Updated : 03 Sep 2014 05:13 PM

தேர்வை முன்னிறுத்தும் கல்வித் திட்டத்தால் மாணவர்கள் திறன் மழுங்கடிக்கப்படுகிறது: ஆய்வு

இந்தியக் கல்வி முறை முழுதும் தேர்வை முன்னிறுத்துவதாகவே உள்ளதால் மாணவர்களின் பன்முகத் திறமை மழுங்கடிக்கப் படுகிறது என்கிறது ஆய்வு ஒன்று.

இந்தியாவின் கல்வி அமைப்பு மாணவர்களின் திறனை மழுங்கடிக்கும் தேர்வு-மைய கல்வித் திட்டங்களாக இருக்கிறது என்று கருத்துக் கணிப்பு ஒன்றில் பெரும்பாலான ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

பியர்சன் வாய்ஸ் ஆஃப் டீச்சர்ஸ் சர்வே என்ற இந்த ஆய்வில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களிடம் கருத்து சேகரிக்கப்பட்டது. இதில் கருத்து கூறிய 92% ஆசிரியர்கள் தேர்வை முன்னிறுத்தும் கல்வி முறை மாணவர்களின் திறமையை மழுங்கடித்து விடுகிறது என்று கூறியுள்ளனர்.

இதனாலேயே மேற்படிப்பில் நுழையும் மாணவர்களிடத்தில் தேவைப்படும் திறமை இருப்பதில்லை. மேல்படிப்பில் அவர்கள் திணறுகின்றனர்.

மேலும் இந்தக் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ள விவரம் என்னவெனில், நாட்டில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளித் தேர்வுகள், மதிப்பெண் ஆகியவற்றின் மீதே கவனம் செலுத்துகிறார்கள் என்பதே. மத்திய பிரதேச மாநிலத்தில் 70% பெற்றோர்கள் தேர்வு நோக்கிய அக்கறைகளையே வெளிப்படுத்தியுள்ளனர். கேரளாவில் 61% பெற்றோர்கள் தேர்வு, மதிப்பெண் சார்புக் கல்வியை முன்னிறுத்தியுள்ளனர்.

மொத்தம் 247 நகரங்களில் சுமார் 5000 ஆசிரியர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. 94% ஆசிரியர்கள் கற்றலின் அளவு கோல் என்னவென்றால் ஆளுமை வளர்ச்சி மற்றும் திறன் வளர்ச்சி ஆகியவையே என்று கூறியுள்ளனர்.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் கல்வி நிலையங்களின் சூழ்நிலை நன்றாக வளர்ந்துள்ளது என்று இந்த ஆசிரியர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

புதிய கல்வி போதனை முறைகளை நடைமுறைப்படுத்தினால் திறன் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும், ஆனால் பெற்றோர்களும் அதிகாரிகளும் அதற்கு லேசில் செவி சாய்ப்பதில்லை என்று ஆசிரியர்கள் பலர் தெரிவித்தனர்.

செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதை அடுத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x