Published : 01 Sep 2014 02:09 PM
Last Updated : 01 Sep 2014 02:09 PM

அனுபவங்கள் ஒன்று கலந்த கூட்டம் - தி இந்து ஷைன் எச்.ஆர்.

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாகத் திகழ்பவர்கள் அங்கு பணியாற்றுகின்ற ஊழியர்கள். பணியாளர்களின் உழைப்பும், அவர்களின் புதிய சிந்தனைகளும் நிறுவனத்தின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்கின்றன.

அத்தகைய ஊழியர்களின் நியமனத்தையும், அவர்களுக்கான பயிற்சி மற்றும் நலன்களையும் கவனித்துக்கொள்ள ஒவ்வொரு நிறுவனத்திலும் மனிதவள மேம்பாட்டுப் பிரிவு (Human Resource Development) எனும் பிரத்யேகப் பிரிவு ஒன்று தனியாக இயங்குகிறது.

பொருளாதாரத்தில் வரும் ஏற்ற இறக்கங்கள் நிறுவனங்களை பெரிதும் பாதிக்கின்றன.

பெருமந்தங்கள்

உலகில் அண்மையில் இரண்டு பொருளாதாரப் பெருமந்தங்கள் ஏற்பட்டு விட்டன. அவற்றுக்கு இடையே மாற்றங்களுக்குத் தேவையான அளவு தங்களைப் புதுப்பித்துக்கொண்ட பெரும் வணிக நிறுவனங்கள்தான் தாக்குப்பிடித்துள்ளன.

வழக்கமான வணிகத்தைக் கடந்து அப்பால் சென்ற சில வெற்றிகரமான கம்பெனிகள் சகஜநிலையின் புதியவகையை வரையறை செய்துள்ளன.

அத்தகையச் சிறப்பான கம்பெனிகளில் மனித வள மேம்பாட்டுப்பிரிவின் செயல்பாடு சிறப்பானது.நல்ல எதிர்காலத்தை நோக்கி கம்பெனிகளை செலுத்தியதிலும், துடிதுடிப்பாகவும், சக்தியாகவும், புதுமையான ஐடியாக்களைக் கொண்டும் நிறுவனத்தை பலப்படுத்தியதிலும் மனித வள மேம்பாட்டுப் பிரிவுகளின் செயல்பாடுகள் முக்கியமானவை.

அத்தகைய அனுபவங்களைப் பற்றி கலந்து பேசுவதற்காக சென்னையில் தி இந்து ஷைன் எச்.ஆர். 20-வது கூட்டம் “வர்த்தக வளர்ச்சியில் மனித வள மேம்பாடு” என்ற தலைப்பில் ஆகஸ்ட் 27 அன்று நடந்தது.

வளர்ச்சியின் அங்கம்

நிறுவனத்தின் வளர்ச்சியில் மனித வள மேம்பாட்டுப் பிரிவு முக்கிய இடம் வகிக்கிறது.

மாறிவரும் இன்றைய சூழலில் ஊழியர் நியமனப் பணியை மட்டுமின்றி நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் புதுப்புது உத்திகளை வகுத்துக் கொடுக்கும் வகையில் மனித வள மேம்பாட்டுப் பிரிவின் பணிகள் மாறிவிட்டன.

இவ்வாறு நிறுவனங்களின் வளர்ச்சியில் பிரிக்க முடியாத ஓர் அங்கமாக மனிதவள மேம்பாட்டு பிரிவு மாறிவிட்டது.

தி இந்து ஷைன் எச்.ஆர்

தி இந்து ஷைன் எச்.ஆர். நடத்திய இந்த 20-வது கூட்டத்தில் பல்வேறு நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டுப் பிரிவுத் தலைமை நிர்வாகிகள், உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தின் முக்கிய நிகழ்வாக குழு விவாதம் அமைந்திருந்தது.

வணிகத்துறையில் அனுபவமிக்க பெண் பத்திரிகையாளர் பாயல் பட்டர் நிகழ்வை நெறிப்படுத்தினார். டிசிஎஸ் நிறுவன மனித வள மேம்பாட்டுப் பிரிவு துணைத் தலைவர் கே.கணேசன், டாபே பொது மேலாளர் (மனித வள மேம்பாடு) மனஸ் மார்தா, ராயல் சுந்தரம் அலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுப் பிரிவுத் தலைவர் ராகேஷ் குப்தா, ஸ்டெர்லைட் நிறுவன மனித வள மேம்பாட்டுப் பிரிவு தலைவர் சுரேஷ் போஸ் ஆகியோர் நிறுவனங்களின் வளர்ச்சியில் மனித வள மேம்பாட்டுப் பிரிவின் பங்கையும், அதன் புதிய பரிமாணத்தையும் எடுத்துரைத்தனர்.

மூன்று காரணிகள்

முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்றான டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுப் பிரிவின் துணைத் தலைவர் கே.கணேசன் மேம்பாட்டுக்கான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

“இன்றைய மாறிவரும் உலகச் சூழலுக்கு ஏற்ப நிறுவனங்களைத் தயார்ப்படுத்த வேண்டியது மனித வள மேம்பாட்டுப்பிரிவின் முக்கியமான பணி ஆகும். வேலைக்குத் தகுதியானவர்களை தேர்வுசெய்ய வேண்டும்.

தற்போது வேலைவாய்ப்பின்மை (Unemployment) கிடையாது. ஆனால், வேலைக்குத் தகுதியானவர்கள் இல்லாததுதான் (Unemployability) பிரச்சினை. பொதுவாக, உற்பத்தித் துறையில் பணியாற்றுவோர் உணர்ச்சி மிகுந்தவர்களாகவும் (Emotional), சாப்ட்வேர் துறையில் பணிபுரிவோர் கர்வம் கொண்டவர்களாகவும் (Ego) இருக்கக்கூடும்.

சரியான ஊழியர்களை தேர்வுசெய்து அவர்களின் திறமைகளை பயன்படுத்திக் கொள்வதில்தான் நிறுவனத்தின் வெற்றியே அடங்கியிருக்கிறது.

நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மனித வள மேம்பாட்டுப் பிரிவு 3 முக்கிய காரணிகளை கடைப்பிடிக்க வேண்டும். அவை 1. Innovation 2. Internationalization 3. Inclusiveness.

அதாவது, புதுமை, சர்வதேச மயம், அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி. ஊழியர்களைத் தேர்வுசெய்வதில், அவர்களுக்குப் பயிற்சி அளிப்பதில், அவர்களின் திறமைகளைக் கூர்மைப்படுத்துவதில் புதுமையைப் புகுத்த வேண்டும்.

இன்றைய உலகமயமாக்க சூழலில் உலகளாவிய அளவில் நிறுவனங்கள் சவாலைச் சந்திக்க வேண்டியது அவசியம். மூன்று காரணிகளிலும் மிக முக்கியமானது அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான்” என்று அவர் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x