Last Updated : 09 Sep, 2014 12:52 PM

 

Published : 09 Sep 2014 12:52 PM
Last Updated : 09 Sep 2014 12:52 PM

வலிப்பு நோய் சிகிச்சை: எளிய புரிதல்

வலிப்புகளைக் கட்டுக்குள் கொண்டுவர, 2 முதல் 5 வருடங்கள்வரை மருந்துகளை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். சில கட்டுக்கடங்கா வலிப்புகளுக்கு, வாழ்நாள் முழுவதும் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்; ஆனால் இது மிகவும் குறைந்த சதவீதம்தான்.

பத்துக் கட்டளைகள்

1. வலிப்பின் வகைக்கு ஏற்ப மருந்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

2. மிகக் குறைவான அளவில் மருந்தைத் தொடங்க வேண்டும்.

3. மருந்தின் அளவைப் படிப்படியாக அதிகரிக்கலாம்.

4. எடுத்துக் கொள்ளும் மருந்து, மாத்திரை, நேரம், அளவு, முறை ஆகியவை எளிதில் பின்பற்றக் கூடியதாக இருக்க வேண்டும்.

5. வலிப்பு மருந்துகளின் அளவை ரத்தத்தில் அவ்வப்போது சரி பார்ப்பது மிகவும் அவசியம்.

6. சிகிச்சை ஆரம்பிக்கும்போதே வலிப்பின் தன்மை, வகை, முன் எச்சரிக்கையாக மருந்துகளை எடுத்துக்கொள்ளுவதன் அவசியம், பக்க விளைவுகளைப் பற்றி நோயாளிக்கு விரிவாகவும் தெளிவாகவும் விளக்க வேண்டும்.

7. ஒரு மருந்தின் முழு அளவையும் கொடுத்து முயற்சித்த பின்பே, இரண்டாவது மருந்தைச் சேர்க்க வேண்டும்.

8. மருந்து வேலை செய்யும் விதம், பக்கவிளைவுகளைப் பொறுத்தே, இரண்டாவது மருந்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

9. மருந்தின் அளவு, உட்கொள் ளும் நேரம் போன்றவற்றைக் குழப்பம் இல்லாமல் எளிமையாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

10.நடைமுறை வாழ்க் கைக்கு எளிதானதாகவும், தடங்கல்கள் ஏற்படாமலும், வலிப்பு களைக் கட்டுப்படுத்துவதே சிகிச்சையின் நோக்கமாக இருக்க வேண்டும்.

மாற்று சிகிச்சைமுறைகள்

# வேகஸ் நரம்பு (Vagus Nerve) ஸ்டிமுலேஷன் – வலிப்புகள் குறைய உதவும்.

# ‘கீட்டோஜெனிக்’ உணவு வகைகளால் – கொழுப்புச் சத்து அதிகமாக உள்ள உணவு வகை – வலிப்புகளைக் கட்டுப்படுத்தலாம்.

# அறுவைசிகிச்சை – பாதிக் கப்பட்டுள்ள பகுதியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுதல்.

வலிப்பு வரும்போது…

செய்யக்கூடியவை

# அமைதியாக இருக்க வேண்டும். நோயாளியைப் படுக்க வைக்கவும். மூக்குக் கண்ணாடி போட்டிருந்தால் கழற்றிவிட்டு, ஆடைகளைத் தளர்த்த வேண்டும்.

# ஒருக்களித்துப் பக்கவாட்டில் படுக்க வைக்கவும் – வாயில் உள்ள எச்சில், நுரை வெளியேறுவது சுலபமாகும்.

# நோயாளி எதிலாவது முட்டி மோதிக்கொண்டு அடிபடுவதைத் தவிர்க்க, சுற்றிலும் உள்ள பொருட்களை அப்புறப்படுத்தவும்.

# சிறிய தலையணை அல்லது துணி மடிப்புகளைத் தலைக்கு அடியில் வைக்கவும்.

# அடிபட்டிருந்தாலோ, ஐந்து நிமிடங்களுக்கு மேல் வலிப்பு நீடித்தாலோ அல்லது நிற்காமல் திரும்பத் திரும்ப வலிப்பு வந்து கொண்டிருந்தாலோ, வலிப்பு நின்ற பிறகும் சுவாசிப்பதற்குச் சிரமப்பட் டாலோ - மருத்துவரையோ அல்லது ஆம்புலன்ஸையோ உதவிக்கு அழைக்கவும்.

செய்யக்கூடாதவை

# நோயாளியைச் சுற்றிக் கூட்டமாக நிற்கக் கூடாது, காற்றோட்டமான சூழல் அவசியம்.

# வாயில், பற்களுக்கிடையில் எந்த ஒரு பொருளையும் (ஸ்பூன், கட்டை, கை போன்றவை) வைக்கக் கூடாது.

# இரும்பு கம்பிகள், சாவி கொத்து போன்ற கூர்மையான ஆயுதங்களை நிச்சயமாகக் கொடுக்கக்கூடாது. வெட்டி இழுக்கும் கைகளால் இந்த ஆயுதங்கள் நோயாளியின் கண்களையோ, வேறு பகுதிகளையோ குத்திக் காயம் ஏற்படுத்தும் ஆபத்து உண்டு. இரும்பு போன்ற உலோகங்கள் வலிப்புகளைக் கட்டுப்படுத்தும் என்பது தவறான நம்பிக்கை.

# வெட்டி இழுக்கும் கை கால்களை அழுத்திப் பிடித்து வலிப்பை நிறுத்த முயற்சிக்கக் கூடாது.

# முழு சுயநினைவு திரும்பும்வரை, நோயாளிக்கு எதுவும் குடிக்கவோ, சாப்பிடவோ கொடுக்கக் கூடாது.



டாக்டர் ஜெ. பாஸ்கரன், நரம்பியல் மருத்துவர்
தொடர்புக்கு: bhaskaran_jayaraman@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x