Last Updated : 07 Aug, 2014 12:00 AM

 

Published : 07 Aug 2014 12:00 AM
Last Updated : 07 Aug 2014 12:00 AM

நபிகள் வாழ்வில்

மதினா நகரின் பள்ளிவாசலில் ஒரு மனிதர் எப்போதும் தொழுகை செய்துகொண்டிருப்பதை நபிகள் நாயகம்(ஸல்) பார்த்துவந்தார். ஒரு நாள் தனது தோழரிடம் அந்த மனிதரைச் சுட்டிக்காட்டி, “ யார் அந்த மனிதர்?” என்று கேட்டார்.

அதற்கு அவரது தோழர், “ அவர் சிறந்த பக்திமான். இரவும் பகலும் இறை வணக்கத்திலேயே மூழ்கி இருப்பவர்” என்று சொன்னார்.

அந்தப் பக்திமானின் வாழ்க்கை எப்படி நடக்கிறது? என்று கேட்டார் நபிகளார்.

அந்தப் பக்திமானுக்கு ஒரு சகோதரர் இருப்பதாகவும், அவர் விறகு வெட்டி வியாபாரம் செய்துவருபவராகவும், அவர்தான் இவரது தேவையையும் கவனித்துக் கொள்வதாகவும் பதில் வந்தது.

“ அல்லும் பகலும் இறைவனை வணங்கும் அந்த நண்பரிடம் சொல்லுங்கள். இவரைவிட விறகு வெட்டிப் பிழைக்கும் இவரது சகோதரர்தான் ஆயிரம் மடங்கு மேலானவர். தனது குடும்பத்தினரின் தேவைக்காக நியாயமான வழியில் சம்பாதிப்பதும் இறை வணக்கம்தான்.” என்றார் நபிகள்.

அண்ணல் நபிகளின் கருத்தை அறிந்த அந்த மனிதர் அன்று முதல் தொழுகை நேரங்களில் மட்டுமே பள்ளிவாசலுக்கு வந்தார்.

பிற நேரங்களில் தனது சகோதரரின் வேலைக்கு உதவினார்.

புளித்த திராட்சை

ஒரு நாள் அண்ணல் நபி அவர்களுக்கு ஏழை ஒருவர் திராட்சைக் கொத்தைப் பரிசாகத் தந்தார்.

நபி அவர்கள் அதிலிருந்து ஒரே ஒரு பழத்தை எடுத்து ருசி பார்த்தார். அதன் பின்னர், ஒவ்வொன்றாக எடுத்து மொத்தக் கொத்தையும் அவரே சாப்பிட்டார். அருகில் அமர்ந்திருந்தவர்களுக்கு ஒன்றைக்கூடத் தரவில்லை. நபிக்குப் பரிசளிக்க வந்த அந்த ஏழை மனிதர் மிகவும் மனம் மகிழ்ந்து நபியிடம் விடைபெற்றார்.

அவர் சென்றவுடன் அங்கிருந்த தோழர்கள், “ஐயா, இறைத் தூதரே ஒரு பழம் கூட தராமல் அத்தனையையும் சாப்பிட்டு விட்டீர்களே. இது நியாயமா?” என்று கேட்டனர்.

“ அத்தனை பழங்களையும் நானே சாப்பிட்டதற்குக் காரணம் அவை அனைத்தும் புளிப்பாக இருந்ததுதான். நான் உங்களுக்கு அவற்றைத் தந்திருந்தால், உங்கள் முகபாவமே அந்த ஏழை மனிதனை ஏளனம் செய்துவிடும்.” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x