Published : 22 Aug 2014 18:02 pm

Updated : 22 Aug 2014 20:07 pm

 

Published : 22 Aug 2014 06:02 PM
Last Updated : 22 Aug 2014 08:07 PM

டெல்லி பாலியல் பலாத்காரம் என்ன சிறிய சம்பவமா?- ட்விட்டரில் ஜேட்லியை நையப்புடைத்த இணையவாசிகள்!

டெல்லி பாலியல் வன்கொடுமை சம்பவம் சிறிய விஷயம் என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ட்விட்டரில் இணையவாசிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

மத்திய அமைச்சர் நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லியை நையாண்டி பாணியில் கடுமையாக சாடுவதற்காக உருவாக்கப்பட்ட #RapeSmall4BJP மற்றும் #BigMinisterSmallRape ஆகிய ஹேஷ்டேக்-குகள் வெள்ளிக்கிழமை நாள் முழுவதும் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்தது.

தலைநகர் டெல்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி, மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பலாத்காரத்துக்கு ஆளாகி, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொடூர சம்பவம் உலக அரங்கில் விமர்சிக்கப்பட்டது. இந்தியாவின் தலைநகரில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த கொடுமை அனைத்து தரப்பினரையும் துயரமடையச் செய்தது.

இந்த விவகாரம் இந்தியாவில் சமூக அரசியில் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, சிறார் சட்டங்களின் சீர்திருத்தங்களும் ஏற்பட வேண்டும், பெண்கள் மீதான சமூகத்தின் பார்வையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என பல்வேறு சீர்திருத்த கேள்விகளை எழுப்பியது.

இந்த நிலையில், டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி, "டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறிய சம்பவம், உலக அளவில் பிரபலப்படுத்தப்பட்டது. அதனால், சுற்றுலாத் துறைக்கு பெரும் பின்னடைவு உண்டாகி, இந்தியாவுக்கு பல மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுவிட்டது என்று கூறினார். அவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் ஒருபுறம் எதிர்க்கட்சிகள், மகளிர் அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் ஜேட்லியின் வீட்டை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதனை அடுத்து தனது கருத்தை நியாயப்படுத்திய மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, "நான் எப்போதும் வெளிப்படையாக பேசுவேன். அவ்வாறே, இந்திய சுற்றுலாத் துறை பற்றி வெளிப்படையாக பேசினேன். ஒரு குற்றம் எப்படி இந்திய சுற்றுலா துறையை பாதிக்கிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் எப்படி சுற்றுலா துறையை முடக்கிவிடுகிறது என்ற அடிப்படையில்தான் கூறினேன். நான் குற்றங்களை வன்மையாக கண்டித்திருக்கிறேன். அதுவும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை எப்போதுமே வன்மையாக கண்டித்திருக்கிறேன். ஆனால், எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது" என்றார்.

இருப்பினும் ஜேட்லி கூறிய இந்த கருத்து விளக்கம், எதிர்ப்பாளர்களால் ஏற்கப்படவில்லை. ஜேட்லியின் கருத்து, பெண்கள் மீது அவரும், இந்த அரசும் கொண்டுள்ள சிந்தனையை பிரதிபலிக்கிறது என்று பெண்களுக்கான தேசிய ஆணையம் வருத்தம் தெரிவித்துள்ளது.

மறுபுறம், அருண் ஜேட்லி குறித்து ட்விட்டர் தளத்தில் எதிர்ப்பு கோஷம் குவிய, இந்திய அளவில் அருண் ஜேட்லியை விமர்சிக்கும் விதமான #RapeSmall4BJP மற்றும் #BigMinisterSmallRape ஹேஷ்டேக்-குகள் ட்ரெண்டிங்கில் முன்னிலை வகித்தன.

ட்விட்டரில் நையாண்டி, பகடி உத்திகளைப் பின்பற்றி ஜேட்லியை விமர்சித்து பதியப்பட்ட கருத்துகளில் சில:

சஞ்சய் ஜா (@JhaSanjay): வார்த்தைகள் என்பது டூத் பேஸ்ட் போன்றது. ஒருமுறை டூயூபிலிருந்து துப்பினால் திரும்பி உள்ள அடைக்க முடியாது.

கவுரவ் பாந்தி (@GauravPandhi ): ஜேட்லி, நிர்பயா வழக்கிற்கு பல லட்சங்கள் செலவிடப்படுவதாக கவலைப்படுகிறார். ஆனால் பாஜக, தெருத் தெருவாக போஸ்டர் ஒட்ட பல லட்சங்கள் செலவிடப்படுதே?

பப்லிக் ப்ராஸிக்யூட்டர் (@PublicProsector): ஜேட்லி சுற்றுலாவை ஊக்குவிக்க 'பலாத்கார சுற்றுலா' திட்டம் வகுப்பார். அந்நிய முதலீட்டை ஈர்த்துவிடலாம்.

விட்டிசிஸம்ஸ்( @Witticisms): நாடாளுமன்ற தேர்தலில், பஞ்சாபில் செல்வாக்கை இழந்த ஜேட்லி, அங்கு மூளையையும் இழந்து டெல்லி வந்துவிட்டார்.

மணிஷ் சிர்ஸிவால் (@msirsiwal): நாட்டையே பலாத்காரம் செய்பவர்களுக்கு, பலாத்காரம் எல்லாம் சிறியவை தான். முதிர்ச்சி இல்லாத ஜனநாயகத்தில் திறனற்ற அரசை தேர்ந்தெடுத்துவிட்டோம்.

கோமால் திவாரி (@komaltiwari): ஜேட்லி, நீங்கள் வாழும் நாட்டில் நானும் வாழ்கிறேன் என்பதை நினைத்து வெட்கப்படுகிறேன்.

தான்யா (@tanya): பாஜக-வுக்கு வாக்களித்த பெண்களே! எங்கே சென்றீர்கள், பலாத்காரம் என்ன சிறியதா? பதில் கூறுங்கள்.

சவுக்கிதார் (@fdi): ஜேட்லி, பிரதமரிடமிருந்து எப்போது தான் கற்றுக்கொள்வார். பிரதமர் எந்த எம்.பி.க்களும் பலாத்காரம் குறித்து கருத்து கூற வேண்டாம் என்றாரே?

சச்சின் (@sachin): அருண் ஜேட்லி அவர்களுக்கு, பெண்களின் பாதுகாப்பை விட, சுற்றுலா வளர்ச்சியே பெரியதாக உள்ளது.

ரஷிசேத் (@rachitseth): அருண் ஜேட்லி, பலாத்காரம் சிறிய பிரச்சினையா? உங்களுக்கு வெட்கத்திற்குரிய எண்ணம்.

அருண் ஜேட்லிபாலியல் பலாத்காரம்ஜேட்லிடெல்லி பாலியல் பலாத்காரம்ட்விட்டர்சமூக வலைதளம்

You May Like

More From This Category

More From this Author