Published : 02 Aug 2014 05:05 PM
Last Updated : 02 Aug 2014 05:05 PM

அதுதான் கிரிக்கெட் - பங்கஜ் சிங் விரக்தியில் தெளிவு

இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறந்த வேகப்பந்து வீச்சாளராகப் பெயர் பெற்று போராடி இந்திய அணிக்குள் நுழைந்த ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அருமையாக வீசியும் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இதுதான் அறிமுக பவுலர் ஒருவரின் முதல் டெஸ்ட்டின் மோசமான பந்து வீச்சு என்ற அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.

1.98மீ உயரமுடைய நல்ல உடற்கட்டு கொண்ட இந்த வேகப்பந்து வீச்சாளர் பேட்டி ஒன்றில் இந்தியாவுக்கு விளையாட முடியவில்லையெனில் நான் இனி ராஜஸ்தானுக்கும் ஆடப்போவதில்லை. எனக்கு பணம் முக்கியமல்ல, நிறைய சம்பாதித்து விட்டேன், கிரிக்கெட் எனது மூச்சு, இந்தியாவுக்கு விளையாடாமல் எனது கனவு சிதைந்து போய்விடும். என்று கூறியுள்ளார்.

மேலும் இவர் ஒரு ரஞ்சி போட்டியில் ஆடியபோது அணித் தேர்வுக்குழுவில் இருக்கும் ராஜர் பின்னி பெவிலியனில் அமர்ந்திருந்தார். அன்று இந்திய அணித்தேர்வு நடைபெற்றது. மீண்டும் பங்கஜ் சிங்கிற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இவர் நேராகவே ராஜர் பின்னியிடம் ஏன் தன்னைத் தேர்வு செய்யவில்லை, காரணம் வேண்டும் என்று கேட்கச் சென்று விட்டார். இவர் அத்தகைய முடிவுடன் வருகிறார் என்று தெரிந்தோ அல்லது தெரியாமலோ ராஜர் பின்னி அன்று இவர் வரும்போது அந்த இடத்திலிருந்து கிளம்பியிருந்தார்.

2003ஆம் ஆண்டு இவர் முதல்தர கிரிக்கெட்டில் நுழைந்தார். 2006ஆம் ஆண்டு ரஞ்சி கிரிக்கெட்டில் இவர் தன் முத்திரையைப் பதித்தார். 21 விக்கெட்டுகளுடன் இவர் ரஞ்சி பிளேட் லீக் இறுதிக்கு ராஜஸ்தானை இட்டுச் சென்றார்.

2007ஆம் ஆண்டு இந்தியா ஏ அணிக்கு விளையாடி விக்கெட்டுகள் பலவற்றைக் கைப்பற்றினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதற்கு முன்னர் ஒரேயொரு முறை டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டார். ஆனால் விளையாட வாய்ப்புக் கொடுக்கப்படாமலேயே பின்பு அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார்.

2009ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான ரஞ்சி டிராபி போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் 3 இடங்களில் இருந்துள்ளார் பங்கஜ் சிங்.

2010 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் ராஜஸ்தான் ரஞ்சி சாம்பியன் பட்டம் வென்றதற்கு இவரது பந்து வீச்சு மிகமுக்கிய பங்காற்றியது. நியாயமாகப் பார்த்தால் இவர் 2007ஆம் ஆண்டே அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். அன்று அவருக்கு 23 வயது. அப்போது இன்னமும் வேகமாக வீசிக் கொண்டிருந்தார்.

பந்தை அதன் தையல் தரையில் படுமாறு வீசி எழுப்புவதிலும் அவுட் ஸ்விங்கரை நல்ல லெந்த்தில் வீசக்கூடிய திறமை படைத்த பங்கஜ் சிங் இந்திய உள்நாட்டு ஜாம்பவான்களான வாசிம் ஜாஃபர், ரோகித் சர்மா, தமிழகத்தின் பத்ரிநாத், புஜாரா உள்ளிட்டோரை அதிகம் தனது வேகத்தினால் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.

அவருக்குக் கடைசியாக இஷாந்த் சர்மா காயமடைந்ததால் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் மோசமான ஸ்லிப் பீல்டிங்கினாலும் நடுவர்களின் தவறான தீர்ப்பினாலும் ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்த முடியாமல் 179 ரன்கள் கொடுத்து விக்கெட் வீழ்த்தாத மோசமான அறிமுக டெஸ்ட்டை சந்தித்தார் பங்கஜ் சிங்.

இதற்கு முன்பு பாகிஸ்தான் வீரர் சொகைல் கான் இலங்கைக்கு எதிரான தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் 164/0 என்று முடிந்ததே சர்வதேச ரெக்கார்டாக இருந்தது.

ஆனாலும் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் மெக்கெய்ன் என்பவர்தான் மோசமான அறிமுக டெஸ்ட் சாதனையாளராக இன்று வரை இருந்து வருகிறார். இவர் 18 ஓவர்களில் 149 ரன்கள் விளாசப்பட்டார். விக்கெட் இல்லை. ஓவருக்கு 8.27 என்ற ரன்களை விட்டுக் கொடுத்தார்.

முதல் நாள் ஆட்டத்தில் அலிஸ்டர் குக்கை ஆட்டிப்படைத்தார் பங்கஜ் சிங். ஒரு பந்து எட்ஜ் ஆக ஜடேஜா 3வது ஸ்லிப்பில் கோட்டைவிட்டார். அந்த கேட்சைப் பிடித்திருந்தால் குக் 20 ரன்களுக்குள்ளாக அவுட் ஆகியிருப்பார். அந்த உத்வேகத்தில் ஒரு சில விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியிருக்கலாம் ஆனால் அது நடக்காமல் போனது.

உணவு இடைவேளைக்குப் பிறகு தோனியின் எதிர்மறை கேப்டன்சி ஆதிக்கம் செலுத்த சரியான பீல்டிங் அமைப்பு பங்கஜ் சிங்கிற்கு கிடைக்கவில்லை, கலியை எடுத்தார் தோனி, அங்கு கேட்ச் பிடிக்கக்கூடிய உயரத்தில் பந்து பவுண்டரிக்குப் பறந்தது. ஸ்லிப் திசையில் சரியாக நிற்கத் தெரியாமல் சில பந்துகள் முன்னால் விழுந்தன. நடுவர் எல்.பி. தீர்ப்பை பங்கஜ் சிங்கிற்கு எதிராக இல்லை என்றார். இப்படி.. இப்படி ஒரே போட்டியில் பல துரதிர்ஷ்டங்களைச் சந்தித்த அயராத உழைப்பாளியான பங்கஜ் சிங்கிற்கு ஏற்பட்ட பெயர் மோசமான அறிமுக டெஸ்ட் பந்து வீச்சு என்பதே.

ஒரு நல்ல கேப்டன் மோசமான பவுலரைக்கூட திறமை மிக்கவராக மாற்றுவார், ஒரு சாதாரண கேப்டன் நல்ல பவுலரைக் கூட மோசமான பவுலராக மாற்றிவிடுவார். பங்கஜ் சிங்கிற்கு அதுதான் நடந்தது. மிட்செல் ஜான்சன் கரியரே கேள்விக்குறியாக இருந்தபோது மைக்கேல் கிளார்க் அவரை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படிப் பயன்படுத்தி இன்று ஒரு அச்சுறுத்தலான வேகப்பந்து வீச்சாளராக மாற்றியுள்ளார். ஆனால் தோனியினால் நன்றாக வீசக்கூடிய மொகமது ஷமியின் திடீர்ச் சரிவைக்கூட சரி செய்ய முடியவில்லை.

காரணம் அவர் ரஞ்சி போட்டிகளில் ஆடுவதில்லை. அதில் ஆடினால்தான் உள்ளூர் திறமைகளை அவர் நேரடியாகக் கண்காணிக்கும் வாய்ப்பு கிட்டும், அணித் தேர்வாளர்களிடம் இந்த வீரர் எனக்கு வேண்டும் என்று வாதிட முடியும். இனி தோனி எங்கு ரஞ்சி கிரிக்கெட்டை ஆடுவது? ரஞ்சி அனுபவம் இல்லாத ஒருவரை கடினமான டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக்கினால் அவரால் கடினமான தருணங்களை எதிர்கொள்ள முடியாது. டெஸ்ட் கேப்டன்சி என்பது வேறொரு கலை. அந்தக் கலை நம்மவருக்கு இன்னும் கைகூடவில்லை, இனியும் கைகூடப்போவதில்லை என்றே தெரிகிறது.

ஒரு பவுலரின் பிரச்சினை என்னவாக இருக்கும் என்பதையெல்லாம் யோசிப்பவர்தான் சிறந்த டெஸ்ட் கேப்டன். அதற்கு உள்நாட்டு கிரிக்கெட்டான ரஞ்சி, துலிப் டிராபிகளில் ஆடவேண்டும். வீரருடன் நெருக்கமாக இருப்பதென்றால் ஓய்வறையில் ஜோக் அடித்துக் கொண்டு அவர் மோசமாக வீசும்போது கூட நான் அவரை ஆதரிக்கிறேன் என்று கூறிக்கொண்டு, வாய்ப்புகள் கொடுத்தாலே ஒருவர் முன்னேறிவிடுவார் என்று நம்புவது போன்ற குணாம்சங்கள் டெஸ்ட் கேப்டனுக்கு போதாது. இவற்றையெல்லாம் தாண்டிய ஒரு நெருக்கம் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடினால்தான் கிடைக்கும்.

டெஸ்ட் கிரிக்கெட்டின் நுணுக்கங்களை அறியாத ஒரு கேப்டன் தான் மட்டும் திறமையை இழப்பதில்லை, நல்ல திறமையுடைய பங்கஜ் சிங் போன்ற வீரர்களின்திறமையையும் கேலிக்கூத்தாக்கி விடுவார். ஜடேஜாவை அப்படித்தான் ஸ்ட்ரைக் பவுலராக பயன்படுத்தாமல் ரன் கட்டுப்படுத்தும் பவுலராகப் பயன்படுத்தி வீணாக்கி வருகிறார். அஸ்வினை தொடர்ந்து உட்கார வைத்து அவருக்கும் வெறுப்பேற்றி வருகிறார்.

இவையெல்லாம் தெரிந்ததே... பங்கஜ் சிங் மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் விடுதி லிஃப்டில் சென்ற போது கிரிக்கெட் தொடர்பான நபர் ஒருவர், ‘நன்றாக வீசியும் பலன் இல்லாமல் போய் விட்டதே? என்று கேட்டதற்கு அவர் ‘அதுதான் கிரிக்கெட்’ என்று தன் மனநிலையை வெளிப்படுத்தினார்.

இது விரக்தியில் பிறந்த தெளிவு. ஆனாலும் தொடர்ந்து உள்நாட்டு கிரிக்கெட்டில் நல்ல கிரிக்கெட் கேப்டன்களுடன் விளையாடிய அவருக்கு உண்மை நிலவரம் நிச்சயம் தெரிந்திருக்கும். அதனாலேயே அவரது இந்தக் கூற்று தெளிவினால் ஏற்பட்ட விரக்தியாகவும் இருக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x