Published : 18 Aug 2014 01:23 PM
Last Updated : 18 Aug 2014 01:23 PM

கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகல்? - பொறுத்திருந்து பாருங்கள் என்கிறார்

கேப்டன் பதவியில் இருந்து விலகுவேனா என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளில் பெற்ற மோசமான தொடர் தோல்விகளை அடுத்து இந்திய கிரிக்கெட் அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அணியில் உள்ள வீரர்கள் யாருக்கும் டெஸ்ட் போட்டியில் விளையாட விருப்பமும் இல்லை, அதற்கான தகுதியையும் இழந்துவிட்டனர் என்று முன்னாள் வீரர்கள் பலரும் சாடியுள்ளனர். அனைத்துக்கும் மேலாக கேப்டன் தோனி மீது முக்கியமாக அவர் கேப்டன் பதவியில் தொடர்வது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஏற்கெனவே இதுபோன்ற பல்வேறு விமர்சனங்களை தோனி சந்தித்துள்ளார். எனினும் இப்போது அவர் கேப்டனாக ஆடுகளத்தில் செயல்பட்ட விதமும் இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. 20 ஓவர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு மட்டுமே தோனியால் வியூகம் வகுக்க முடியும். டெஸ்ட் போட்டியில் அணியை வழி நடத்தும் திறமை அவருக்கு இல்லை என்பது முக்கிய விமர்சனமாகியுள்ளது. எனவே அவர் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த பிறகு அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது டெஸ்ட் போட்டியில் போதுமான அளவுக்கு சாதித்துவிட்டதாக கருதுகிறீர்களா என்ற கேள்விக்கு, ஆம் என்றுதான் நினைக்கிறேன் என்று தோனி கூறினார்.

ஏற்கெனவே சந்தித்த கேள்விதான்

2011-ம் ஆண்டில் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை இழந்தபோதும் இதேபோன்ற மோசமான சூழ்நிலை ஏற்பட்டது. என்னை நோக்கி இதேபோன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த தோல்விகளுக்கு நான் எப்படி ஈடுகொடுக்கப் போகிறேன் அல்லது ஈடுகொடுக்கப் போவதில்லை என்பதை பொறுத்திருந்து பாருங்கள். பேட்டிங் மோசமாக அமைந்ததே டெஸ்ட் போட்டியில் தொடர் தோல்வியடைந்ததற்கு காரணம்.

முரளி விஜய் நன்றாகவே பேட்டிங் செய்தார். எனினும் முதல் டெஸ்ட்டில் இருந்த தொடக்கம் சரியாக அமையவில்லை. இதனால் புஜாரா முன்னதாக இறங்க வேண்டியிருந்தது.

விராட் கோலியும் இந்த தொடரில் பார்மில் இல்லை. தொடக்கத்திலேயே அதிக விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் கடும் நெருக்கடி ஏற்பட்டது. கடைசி மூன்று டெஸ்ட்களில் நாங்கள் எதிரணிக்கு சவால் ஏற்படுத்தும்வகையில் விளையாடவில்லை என்பது ஏமாற்றம்தான். எனினும் இந்த தோல்விகள் எங்கள் பேட்ஸ்மேன்களுக்கு உத்வேகம் அளிக்கும். எனது அணி வீரர்கள் தோல்வியில் இருந்து மீண்டு வரக் கூடியவர்கள்தான் என்றார்.

ஐபிஎல் மீது பொறாமை வேண்டாம்

இளம் கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதை விட்டுவிட்டு கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினால் நல்ல அனுபவம் கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு, இது தொடர்பாக பிசிசிஐ-யிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும், ஐபிஎல் மீது பொறாமை கொள்ள வேண்டாம் என்று தோனி பதிலளித்தார்.

இப்போது 33 வயதாகும் தோனி 2008-ம் ஆண்டு இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு தலைமை வகித்தார். இதுவரை 58 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த அவர் 27 வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார். 2009-ம் ஆண்டில் தோனி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து, 2011-ம் ஆண்டு வரை அதனை தக்கவைத்துக் கொண்டது.

எனினும் 2011-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் இழந்ததன் மூலம் இந்திய அணியின் டெஸ்ட் வீழ்ச்சி தொடங்கியது. இப்போதைய இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தொடக்கத்தில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது. ஆனால், தொடர்ந்து மூன்று தோல்விகளை சந்தித்ததால் 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது.

இந்தியாவின் கடைசி 5 டெஸ்ட் தொடர்கள் விவரம்

# 2013 பிப்ரவரி மார்ச் (இந்தியாவில்) ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4-0 என்ற கணக்கில் வெற்றி (மொத்தம் 4 டெஸ்ட்)

# 2013 நவம்பர் (இந்தியாவில்) மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி (மொத்தம் 2 டெஸ்ட்)

# 2013 டிசம்பர் (தென்னாப்பிரிக்காவில்) தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 0-1 என்ற கணக்கில் தோல்வி (மொத்தம் 2 டெஸ்ட்)

# 2014 பிப்ரவரி (நியூசி லாந்தில்) நியூசிலாந்துக்கு எதிராக 0-1 என்ற கணக்கில் தோல்வி (மொத்தம் 2 டெஸ்ட்) .

# 2014 ஜூலை ஆகஸ்ட் (இங்கிலாந்தில்) இங்கிலாந்துக்கு எதிராக 1-3 என்ற கணக்கில் தோல்வி (மொத்தம் 5 டெஸ்ட்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x