Published : 06 Feb 2014 12:00 AM
Last Updated : 06 Feb 2014 12:00 AM

காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்து ஊழலை ஒழிக்க வேண்டும்- விஜயகாந்துக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பகிரங்க அழைப்பு

காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்து ஊழலை ஒழிக்க விஜயகாந்த் முன்வர வேண்டும் என்று முன் னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அழைப்பு விடுத்துள்ளார்.

ஊழல்வாதிகள் பட்டியலில் காங்கிரஸ் தலைவர்களின் பெயரைச் சேர்த்த டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரி வாலைக் கண்டித்தும், ஊழல் ஒழிப்புச் சட்ட மசோதா உள்ளிட்ட 6 மசோதாக்களை நாடாளு மன்றத்தில் நிறைவேற்ற அரசியல் கட்சிகள் ஆதரவு தரக் கோரியும் தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னையில் புதன்கிழமை ஆர்ப் பாட்டம் நடந்தது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் பேசுகையில், ‘‘தகவல் அறியும் உரிமைச் சட்டம், லோக்பால் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியதுபோல், இன்னும் நிறைவேற்றப்பட வேண்டிய மசோதாக்கள் குறித்து, மக்கள் மத்தியில் காங்கிரஸார் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும்.

நமக்குள் கோஷ்டி பூசல் இல்லை என்ற அளவுக்கு ஒற்றுமையாக செயல்பட வேண் டும். பூரண மதுவிலக்கு கோரி வரும் 12-ம் தேதி காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும்’’ என்றார். முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது:

ஊழலை ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டு வருகிறது. காங்கிரஸ் தலைமை யிலான மத்திய அரசு, ஊழலை ஒழிப்பதற்காக மேலும் சில சட்டங்களை நிறைவேற்ற உள்ளது. காங்கிரஸ் அரசுதான் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் மீது, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்தது.

சமீபத்தில் ஊழல் எதிர்ப்பு மாநாட்டை தேமுதிக மிகச் சிறப்பாக நடத்தி முடித்துள்ளது. ஊழல் ஒழிப்புக்காக விஜயகாந்த் தீவிரமாக போராடி வருகிறார். காங்கிரஸும் ஊழல் ஒழிப்புக்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, நல்ல உள்ளம் படைத்த விஜயகாந்த், ஊழலை ஒழிக்க காங்கிரஸுடன் கூட்டணி சேர வேண்டும். பவானி ஆறு காவிரியில்தான் கலக்க வேண்டும். கூவத்தில் கலக்கக் கூடாது. விஜயகாந்த் எனது நண்பர். அவர் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து ஊழலை ஒழிக்க முன் வர வேண்டும்.

இவ்வாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், ஆரூண் எம்.பி., பீட்டர் அல்போன்ஸ், வசந்தகுமார், யசோதா, செல்வப்பெருந்தகை, சென்னை மாவட்டத் தலைவர்கள் ராயபுரம் மனோ, கராத்தே தியாகராஜன், ரங்கபாஷ்யம் மற்றும் நூற்றுக்கணக்கான காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x