Published : 28 May 2014 08:00 am

Updated : 28 May 2014 11:07 am

 

Published : 28 May 2014 08:00 AM
Last Updated : 28 May 2014 11:07 AM

தேர்தல் முடிவுகள்: கருத்துலகம் என்ன சொல்கிறது?

இந்தத் தேர்தல் மோடியை மையமிட்டே நிகழ்ந்த தேர்தல். காங்கிரஸ் எதிர்ப்பு, மோடி ஆதரவு என்று ஆரம்பித்த பிரச்சாரம், போகப்போக மோடி ஆதரவு, மோடி எதிர்ப்பு என்று மோடிமயமானது. கருத்துலகத்திலும் இது பிரதிபலித்தது. திடீர் மோடி ஆதரவாளர்கள் உருவாகினார்கள். மோடி எதிர்ப்பாளர்கள் தங்கள் அச்சத்தை உச்சஸ்தாயியில் வெளிப்படுத்தினார்கள். தற்போது தேர்தல் முடிந்து, மோடியும் பதவியேற்றுவிட்டார். இந்தத் தேர்தலைப் பற்றியும், தேர்தல் முடிவுகள்பற்றியும் (இந்திய அளவிலும் தமிழக அளவிலும்) தமிழ் கருத்துலகம் என்ன நினைக்கிறது என்பதை வாசகர்கள் அறிந்துகொள்ளும் வகையில் இந்தக் கருத்துத் திரட்டு.

பொருளாதார வாக்குறுதிகளுக்குக் கிடைத்த வெற்றி!

இந்தத் தேர்தலில் மோடி பெற்றுள்ள வெற்றி, முழுக்க முழுக்க அவர் அளித்த பொருளாதார வாக்குறுதிகளுக்காகத்தான். இது வரவேற்கத் தக்க விஷயம் என்று நினைக்கிறேன். மோடியின் அரசு இந்த உண்மையை உணர்ந்துகொண்டு, சில்லறை மத, இன, மொழிப் பிரச்சினைகளுக்கு அப்பாற்பட்டு பொருளாதாரப் பிரச்சினைகளைச் சரிசெய்ய முயலும் என்றால், அது நல்ல தொடக்கமாக அமையும். எதிர்க் கட்சிகளைப் பொறுத்தவரை, மிதமிஞ்சிய முத்திரைக் குத்தல்கள் எதிர்மறை விளைவுகளைத்தான் உருவாக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. முற்போக்கு என்ற பெயரில் இஸ்லாமியத் தீவிரவாதிகளை ஆதரிக்கும் நிலை வரை சென்ற இடதுசாரிகள், இனிமேலாவது தங்கள் நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லாவிட்டால், இங்கு இடதுசாரி அரசியலே இல்லாமல் ஆகிவிடும். அது இந்தியாவுக்கு மிகப் பெரிய இழப்பாகும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை இது தேசிய அதிகாரத்துக்கான தேர்தல் என்றே மக்கள் நினைத்துப் பார்க்கவில்லை என்று தோன்றுகிறது. கிட்டத்தட்ட அனைத்து வளர்ச்சித் திட்டங்களும், பராமரிப்புத் திட்டங்களும் முடங்கிவிட்டிருக்கக் கூடிய இந்தச் சூழலில், வெறும் இலவசங்களை மட்டுமே நம்பி மக்கள் வாக்களித்திருக்கின்றனர். தமிழ்நாட்டின் வாக்களிப்பு முறை கிட்டத்தட்ட அரசியல் தற்கொலை என்றுதான் சொல்ல வேண்டும். அதன் விளைவுகளைத் தமிழகம் அனுபவிக்கும் என்று தோன்றுகிறது.

- ஜெயமோகன், எழுத்தாளர்.

நான்தான் சொன்னேனே!

சமீபத்திய தேர்தல் முடிவுகள் பா.ஜ.க-வுக்கே சற்று ஆச்சரியம்தான். ஆனால், எனக்கு ஆச்சரியம் இல்லை. பா.ஜ.க. கூட்டணிக்கு 350, காங்கிரஸுக்கு 50 தொகுதிகள் என்று பத்திரிகைகளிலும் என் வலைதளத்திலும் நான் தொடர்ந்து எழுதிவந்தேன். அதேபோல் தமிழகத்தில் தி.மு.க-வுக்கு இரண்டு தொகுதிகளுக்குள்தான் கிடைக்கும் என்று எழுதினேன். மக்களின் வெறுப்பு அவ்வளவு சீக்கிரத்தில் மறையாது. அதே சமயம், ஜெயலலிதாவின் மக்கள் நலத் திட்டங்களும் நல்ல பலனைக் கொடுத்தன. தி.மு.க. ஆட்சியில் ரவுடிகள் குறுநில மன்னர்களைப் போல் அதிகாரம் செலுத்தினர். அவர்களை ஜெயலலிதா அடக்கினார். அதற்கான பரிசும்தான் இந்த வெற்றி.

கடந்த 10 ஆண்டுகளின் காங்கிரஸ் ஆட்சியைச் சுதந்திர இந்தியாவின் இருண்ட காலம் என்று சொல்லலாம். இனிமேல், காங்கிரஸ் அகில இந்திய அளவில் தலையெடுப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றே தோன்று கிறது. மக்களின் உணர்வைத் தி.மு.க-வும் காங்கிரஸும் கடைசி வரை புரிந்து கொள்ளாதது எனக்கு ஆச்சரியத்தையே அளிக்கிறது. குஜராத்தைப் பார்த்த பிறகு எனக்கு மோடி மீது மரியாதை கூடிவிட்டது. மக்களைப் போலவே நானும் அவரிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கிறேன்.

- சாரு நிவேதிதா, எழுத்தாளர்.

நரேந்திர மோடி சாதிப்பார்!

நரேந்திர மோடி தலைமையிலான அரசு மிகப் பெரிய சாதனைகளைச் செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை. காங்கிரஸ்போல் அல்லாமல், சாதனைகள் இன்றி, மோடியால் ஆட்சியைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள முடியாது. உள்கட்சியிலேயே மோடிக்குச் சவால் விடுக்கப் பிற முதலமைச்சர்கள் உள்ளனர். மக்களின் எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக உள்ளன. அவற்றில் ஒரு சிலவற்றையாவது பூர்த்தி செய்யாவிட்டால், மக்களின் வாக்குகள் வேறு திசைக்குத் திரும்பிவிடும்.

- பத்ரி சேஷாத்ரி, பதிப்பாளர், கருத்தாளர்.

நிறைய எதிர்பார்க்கிறேன்!

தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரையில் மோடிதான் பிரதமர் ஆகப்போகிறார் என்று ஊடகங்கள் கணித்தது தான் நடந்திருக்கிறது. இதை வெறும் மோடிக்கான வெற்றி என்பதில்லாமல், காங்கிரஸுக்கான அடி என்றும் புரிந்துகொள்ளலாம். மோடியின் மீது மிகப் பெரிய எதிர் பார்ப்பு இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பைத்தான் மக்கள் காட்டியிருக்கிறார்கள்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு தனிக்கட்சி அறுதிப் பெரும் பான்மை பெற்றிருக்கிறது. சக மனிதனைப் போலவே நானும் மோடியிடம் நிறைய எதிர்பார்க்கிறேன்.

- வா. மணிகண்டன், வலைப்பதிவர்.

மக்களுக்குத் தேவை சர்வாதிகாரிகள்தான்!

இந்த வெற்றி பா.ஜ.க-வின் வெற்றி என்பதைவிட, காங்கிரஸின் தோல்வி என்பதே சரி. தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் எந்த ஒரு கட்சிக்கும் ஏற்படும் சரிவுதான் காங்கிரஸுக்கு ஏற்பட்ட சரிவு. தமிழகத்தில் ‘அம்மா பிரதமர் ஆக வேண்டும்' என்று அ.தி.மு.க. பணம் கொடுத்ததும், பணம் வாங்கிவிட்டோம் துரோகம் செய்யக் கூடாது என்று மக்கள் நினைத்ததும் தமிழ்நாட்டின் இந்த முடிவுக்குக் காரணம். தமிழகத்தில் பா.ஜ.க. வராது, அ.தி.மு.க. வென்றால் அது பா.ஜ.க-வுக்குத்தான் ஆதரவு தரும், பா.ஜ.க-வுக்கு கருணாநிதி ஆதரவு தர மாட்டார் என்று நம்பியது. இதுதான் அ.தி.மு.க. வென்றதற்குக் காரணம். நாட்டுக்குத் தேவை சர்வாதிகாரிகளே என்று மக்கள் விரும்புகிறார்கள். அதன் விளைவுதான் மோடியின், ஜெயலலிதாவின் வெற்றி.

- இமையம், எழுத்தாளர்.

இனி கலாச்சாரக் காவலர்களின் காலம்!

எல்லாக் குடும்பங்களுக்கும் விலையில்லாப் பொருட்கள் வழங்கியது, மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கியது போன்றவை அ.தி.மு.க. வெற்றிக்குக் காரணமாக அமைந் தன. குடும்ப அரசியலும், கூட்டணி வைப்பதில் குழப்பமும் கூடவே கலைஞர் டி.வி. விவகாரமும் கலைஞரைச் சுழன்றடித்

திருக்கின்றன. குறைந்தபட்சம் 2-ஜி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆ. ராசாவை வேட்பாளராக் கியதைத் தவிர்த்திருக்கலாம். தமக்கோ தம் வாரிசு களுக்கோ சீட் கிடைக்காத முன்னாள்கள் களத்தில் இறங்கி வேலைபார்க்கவே இல்லை. இந்திய அளவில் பா.ஜ.க-வின் வெற்றி ஆரோக்கியமற்றது மட்டுமல்ல, ஆபத்தானதும்கூட. இனி பா.ஜ.க. ஆட்சியில் கலாச்சாரக் காவலர்கள் பெருகுவார்கள். யாரும் காதலிக்கக் கூடாது எனச் சட்டம் கொண்டுவந்தாலும் வருவார்கள். இனி மோடி அரசு என்ன செய்யப்போகிறது எனப் பொறுத்திருந்து பார்ப்போம். வேறு வழி?

- சுகிர்தராணி, கவிஞர்.

மதவாதத்துக்கும் சாதியத்துக்கும் கிடைத்த வெற்றிகள்!

இந்திய அரசியல் மீண்டும் முழுமையாகத் தனிமனித வழிபாட்டை நோக்கித் திரும்பியிருக்கிறது. இரண் டாவதாக, காங்கிரஸ் அரசாங்கத்தின் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளால் மனம் கசந்த பகுதியினர் மோடியை அற்புதங்கள் நிகழ்த்துபவராக நம்பி வாக்களித் திருக்கிறார்கள். இன்னொரு புறம் பல்வேறு சாதி அமைப் புகள் இந்துத்துவா என்ற சங்கிலியால் பிணைக்கப்பட்டதன் அடையாளமே இந்தத் தேர்தல். இது நீண்ட கால நோக்கில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். மூன்றாவதாக, காங்கிரஸையும் பா.ஜ.க-வையும் எதிர்த்தவர்களுக்கு ஒரு மாற்று அரசியல் திட்டம் இல்லை. மாநிலக் கட்சிகள் துண்டுதுண்டாகச் சிதறி நின்றார்கள். இடதுசாரிகள் களத்திலேயே இல்லை. இந்த வாய்ப்பை பா.ஜ.க. முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டது. மோடிக்குப் பின்னே இருக்கும் தீவிர வலதுசாரி அரசியல் சகிப்புத்தன்மை அற்றது. அவர்கள் பண்பாட்டு-கருத்தியல் தளங்களில் தங்களுக்கு உவப்பில்லாத விஷயங்களின்மீது கடுமையான தலையீட்டைச் செலுத்துவார்கள் என்று அஞ்சுகிறேன். மோடி நிர்வாகரீதியாக சில மேலோட்டமான சீர்திருத்தங்களுக்கு முயல்வார். அதே சமயம் மன்மோகன் சிங்கின் பொருளாதாரக் கொள்கைகளை இன்னும் மூர்க்கமாக முன்னெடுத்துச் செல்வார். தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த முடிவுகள் எதிர்பாராதது. அ.தி.மு.க-வின் ஓட்டு விகிதம் இந்த அளவு அதிகரித்திருப்பது எந்த தர்க்கத்துக்கும் உட்பட்டதாக இல்லை. பா.ஜ.க. கூட்டணிக்கு விழுந்த வாக்குகள் தமிழகத்தில் சாதியக் கட்சிகளுக்கு விழுந்த வாக்குகள். தி.மு.க-வுக்கு ஏற்பட்டிருப்பது ஒரு தற்காலிகமான பின்னடைவு. அதிலிருந்து அது சீக்கிரமே மீண்டுவரும்.

- மனுஷ்ய புத்திரன், கவிஞர், பதிப்பாளர், கருத்தாளர்.

எல்லாப் புகழும் காங்கிரஸுக்கே!

மதச்சார்பற்ற நாட்டுக்கு, மதச்சார்புள்ள அமைப்பைச் சேர்ந்த ஒருவர் மீண்டும் தலைமைப் பொறுப்பேற்பது துரதிர்ஷ்டவசமானது. இடதுசாரிகள் உள்ளிட்ட எதிரணி பலவீனப்பட்டிருப்பது ஜனநாயகத்துக்குப் பெரும் பின்னடைவு. மோடி 10 ஆண்டுகளுக்குத் தாக்குப்பிடிப்பார் என சில அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். நாட்டில் உள்ள சிறுபான்மையினருக்குத்தான் என்ன நடக்குமோ என்ற பதைபதைப்பு. எல்லாப் புகழும் காங்கிரஸுக்கே!

- கீரனூர் ஜாகிர்ராஜா, எழுத்தாளர்.

தேர்தல் முடிவுகள்இந்தியாமனுஷ்ய புத்திரன்கீரனூர் ஜாகிர்ராஜாபத்ரி சேஷாத்ரிகாங்கிரஸ் எதிர்ப்புமோடி ஆதரவு

You May Like

More From This Category

More From this Author