Published : 17 Apr 2014 12:15 pm

Updated : 17 Apr 2014 12:17 pm

 

Published : 17 Apr 2014 12:15 PM
Last Updated : 17 Apr 2014 12:17 PM

பெங்களூர்-டெல்லி இன்று மோதல்: பீட்டர்சன் காயம் காரணமாக விலகல்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸும், டெல்லி டேர்டெவில்ஸும் மோதுகின்றன.

சார்ஜாவில் நடைபெறும் இந்த ஆட்டத்தை விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும், பீட்டர்சன் தலைமையிலான டெல்லி அணியும் வெற்றியோடு தொடங்க விரும்பும். பீட்டர்சன் காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் துணை கேப்டன் தினேஷ் கார்த்திக் தலைமையில் அந்த அணி களமிறங்குகிறது.

2009, 2011 ஆகிய ஆண்டுகளில் இறுதிச்சுற்று வரை முன்னேறியது பெங்களூர் அணி. கிறிஸ் கெயில், டிவில்லியர்ஸ் என வலுவான பேட்ஸ்மேன்கள் இருந்தபோதும்கூட கடந்த இரு சீசன்களில் பிளே ஆப் சுற்றுக்குகூட அந்த அணி முன்னேறவில்லை. கடந்த முறை 5-வது இடத்தையே பிடித்தது. இந்திய அணியின் வருங்கால கேப்டனான விராட் கோலி, இந்த முறை எப்படி

யாவது பெங்களூர் அணிக்கு கோப்பையை வென்று தந்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்

பெங்களூர் அணிக்கு கேப்டன் கோலி, கிறிஸ் கெயில், டிவில்லியர்ஸ், யுவராஜ் சிங் என வலுவான பேட்ஸ்மேன்களும், ஆல்ரவுண்டர் அல்பி மோர்கலும் பலம் சேர்க்கின்றனர். கிறிஸ் கெயில், விராட் கோலி, பார்தீவ் படேல், யுவராஜ் சிங், டிவில்லியர்ஸ், விஜய் ஸோல், அல்பி மோர்கல், மிட்செல் ஸ்டார்க், வருண் ஆரோன், அசோக் திண்டா, சதாப் ஜகாத்தி அல்லது யுவேந்திர சாஹல் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை அதிகபட்சமாக ரூ.14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட யுவராஜ் சிங்கின் மீது அணி நிர்வாகம் மட்டுமல்ல, ரசிகர்களும் பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.

டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் மோசமாக ஆடிய யுவராஜ் சிங், ஐபிஎல் போட்டியில் சிறப்பாக ஆடுவதன் மூலம் தன் மீதான விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, மீண்டும் இந்திய அணிக்கு திரும்பவும் வாய்ப்பு ஏற்படும்.

கடந்த சீசனில் கடைசி இடத்தைப் பிடித்த டெல்லி அணி இந்த முறை புதிய வீரர்களுடன் களத்தில் குதித்துள்ளது. கடந்த சீசனில் அந்த அணிக்காக விளையாடிய சேவாக் உள்ளிட்ட பெரும்பாலான வீரர்கள் இப்போது இடம்பெறாத நிலையில் புதிய தொடக்கத்துக்காக காத்திருக்கிறது.

முதல் போட்டியிலேயே கேப்டன் பீட்டர்சன் இடம்பெறாதது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விளையாடவில்லை. எனினும் அவர் இல்லாத குறையைப் போக்கும் வகையில் விளையாட அந்த அணி முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

முரளி விஜய், ராஸ் டெய்லர், டுமினி, தினேஷ் கார்த்திக், சௌரப் திவாரி, மனோஜ் திவாரி, ஜிம்மி நீஷம் அல்லது நாதன் கோல்ட்டர் நீல், வேயன் பர்னெல், சபேஸ் நதீம், முகமது சமி, ராகுல் சர்மா ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூர் பேட்ஸ்மேன்களை டெல்லி பௌலர்கள் எப்படி கட்டுப்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களின் வெற்றி வாய்ப்பு அமையும்.

2011 உலகக் கோப்பையை இந்தியா வென்றபோது அதன் பயிற்சியாளராக இருந்த கேரி கிர்ஸ்டன், டெல்லி அணியின் பயிற்சியாளராக இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும்.

இதுவரை… இரு அணிகளும் இதுவரை 10 போட்டிகளில் மோதி, அதில் தலா 5 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளன.

ஐபிஎல்பெங்களூர் அணிராயல் சேலஞ்சர்ஸ்டெல்லி டேர்டெவில்ஸ்விராட் கோலிமுரளி விஜய்

You May Like

More From This Category

More From this Author