Published : 25 Apr 2015 07:59 AM
Last Updated : 25 Apr 2015 07:59 AM

தேசிய அவமானம்

ஒரு விவசாயியின் தற்கொலையைத் தொடர்ந்து, அரசியல் களத்தில் நெடுநாளைக்குப் பின் பிரதான கவனத்துக்கு வந்திருக்கிறது விவசாயிகள் பிரச்சினை.

இந்திய விவசாயம் என்பது பருவ காலத்தை நம்பியிருக்கும் சூதாட்டம் என்பது யாரும் அறியாதது அல்ல. வறட்சி அல்லது வெள்ளம் இரண்டுக்குமே அடிப்படை, காலம் தவறிப் பெய்யும் மழை. நம் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினை இது மட்டுமே அல்ல என்றாலும், இதுவே முக்கியமானது. ஏனென்றால், நாட்டின் 65% சாகுபடி மழையை நம்பித்தான் நடக்கிறது. விவசாயிகளின் ஏனைய பிரச்சினைகளைப் போலவே, அரசு இந்தப் பிரச்சினையைப் பெயரளவில் அணுகுவதுதான் பெரும் துயரம். நாடு முழுவதும் கடந்த 20 ஆண்டுகளில் ஏறத்தாழ 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் கணிசமானோரைத் தற்கொலையை நோக்கித் தள்ளுவது வறட்சி / வெள்ளம் ஏற்படுத்தும் பயிர் நாசம்தான். இழப்புகளும் நிதி நெருக்கடியும் கடன் சுமையுமாகச் சேர்ந்தே பல்லாயிரக் கணக்கானோரின் உயிரைப் பறிக்கின்றன.

இந்த ஆண்டு பருவ மழைப்பொழிவு குறைவாக இருக்கும் என்கிறது இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை அறிக்கை. கடந்த ஆண்டு மழைப்பொழிவு 30 ஆண்டுகளில் குறைந்தபட்ச மழை அளவு. தவிர, கடந்த 25 ஆண்டுகளில் இருந்திராத வகையில், பருவம் அல்லாத பருவத்தில் இந்த ஆண்டு பெய்த கன மழையால், நாட்டின் கணிச மான பகுதிகளில் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அப்படி விளைச்சலைப் பறிகொடுத்த விவசாயிகளில் ஒருவரே கஜேந்திர சிங். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி பொதுக்கூட்டத்தில், நூற்றுக் கணக் கானோர் முன்னிலையில் மரத்தில் தூக்கிட்டுக்கொண்ட விவசாயி.

நாடு சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆகும் சூழலிலும் இன்னும் நம்மால் விவசாயிகளின் பெரும் துயரமான பயிர் இழப்புக்கு ஒரு தீர்வுகாண முடியாமல் இருப்பது ஒரு தேசிய அவமானம். குறைந்தபட்சம் ஒரு நல்ல பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைக்கூட நம்மால் தர முடியவில்லை.

விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீட்டை 1985-ல் தொடங்கி நாம் வெவ்வேறு வடிவில் முயற்சித்துவருகிறோம். ஆனால், இதுவரை தோல்வியையே அடைந்திருக்கிறோம்.

இந்திய விவசாயிகளில் ஐந்தில் ஒருவரைக் கூடப் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் முழுமையாகச் சென்றடையவில்லை என்பதே உண்மை. கடந்த ஆண்டு அமெரிக்க விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை ரூ. 55,440 கோடி. இந்திய விவசாயி களுக்கு அளிக்கப்படும் தொகை ரூ. 100 கோடியைத் தாண்டும் வாய்ப்பில்லை என்கின்றன காப்பீட்டுத் துறை வட்டாரங்கள். அரசுத் தரப்பில் இதற்கு ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டாலும், நியாயமான காரணங்கள் எளிமையானவை: விண்ணப்பங்கள், பிரிமியத்தில் தொடங்கி இழப்பீட்டுத் தொகைக்கான அலைச்சல் வரை விவசாயிகளுக்கேற்ப எளிமையான நடைமுறையைக் கொண்ட ஒரு காப்பீட்டுத் திட்டத்தை நம்மால் வழங்க முடியவில்லை. மேலும், இந்தக் காப்பீட்டுத் திட்டத்திலும் அரசு தன் கையைக் கடிக்காமல் பெயர் வாங்கும் உத்தியையே பிரதான கவனத்தில் வைத்திருக்கிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இப்போது புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம் ஒன்றைக் கொண்டுவருகிறது. வெளியாகும் தகவல்களைப் பார்க்கும்போது, நம்முடைய பழைய குறைகளை முற்றிலும் களைந்த திட்டம் என்று அதைச் சொல்லிவிட முடியவில்லை. குறைகள் முற்றிலும் களையப்பட்ட ஒரு திட்டத்தை நாம் அறிமுகப்படுத்த வேண்டும். மேலும், இது மட்டுமே விவசாயிகள் எதிர்கொள்ளும் இழப்புகளுக்கான தீர்வு அல்ல. தீர்வுக்கான தொடக்கப் புள்ளியாக இதைக் கொண்டு, தீர்வை நோக்கி நாம் நகர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x