Last Updated : 08 Apr, 2015 09:32 AM

 

Published : 08 Apr 2015 09:32 AM
Last Updated : 08 Apr 2015 09:32 AM

பிரதமர் நரேந்திர மோடியுடன் முப்தி முகமது சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியை காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சையது டெல்லியில் நேற்று சந்தித் துப் பேசினார். அப்போது மாநில அரசியல் நிலவரம் குறித்து பிரதமரிடம் அவர் விளக்கம் அளித்தார்.

முதல்வர் முப்தி முகமது சையது நேற்றுமுன்தினம் இரவு தலைநகர் டெல்லிக்கு வந்தார். அவர் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினார்.

அப்போது காஷ்மீர் தீவிரவாதப் பிரச்சினை, எல்லைப் பாதுகாப்பு, எல்லை தாண்டிய பயங்கரவாதம், மாநில சட்டம் ஒழுங்கு பிரச்சினை உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

குறிப்பாக சோபியன் மாவட்டத் தில் நேற்றுமுன்தினம் மூன்று போலீஸாரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றது குறித்து விரிவாக ஆலோ சனை நடத்தப்பட்டது. மாநிலத்தின் இப்போதைய அரசியல் நிலவரம் குறித்து பிரதமரிடம் முப்தி விளக்கிக் கூறினார்.

மஜக-பாஜக கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டங்களை அமல்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். அப்போது காஷ்மீர் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ.44,000 கோடி சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று முப்தி கோரிக்கை விடுத்தார்.

மெகபூபாவுக்கு அமைச்சர் பதவி

மத்திய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதில் முப்தி முகமதுவின் மகளும் மஜக தலைவருமான மெகபூபா முப்தி அமைச்சராகப் பொறுப்பேற்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த விவகாரம் குறித்தும் பிரதமர் மோடியுடன் முப்தி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ராஜ்நாத் சிங்குடன் சந்திப்பு

இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை முதல்வர் முப்தி சந்தித்துப் பேசினார். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் நிருபர்களிடம் முப்தி கூறியதாவது:

அமைதி முயற்சி, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள், மாநிலத் தின் வளர்ச்சிப் பணிகள், வெள்ள நிவாரணப் பணிகள் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி, அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பேசினேன்.

காஷ்மீர் தேர்தலில் மக்களின் தீர்ப்புப்படி மஜக, பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. புதிய அரசு காஷ்மீரை அமைதிப் பூங்காவாக மாற்றும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x